திடீர் காய்ச்சலால் மருத்துவமனையில் தலைவர் அனுமதி; தற்போது நார்மலாக உள்ளார்!
5 May 2011
கடந்த சில நாட்களுக்கு முன்னர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி, மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய தலைவர், பூரண ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்னிரவு மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விருந்தினர்களின் தொந்தரவை தவிர்க்கும் பொருட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று இரவு இச்செய்தி கசிந்ததையடுத்து, ஆங்கில சானல்கள் “ரஜினி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி” என்று செய்தியை பிளாஷ் செய்ய துவங்கின. மேலும் சற்று நேரத்தில் சன் ந்யூஸ், ஜெயா டி.வி. உள்ளிட்ட தமிழ் சானல்களிலும் இச்செய்தி ஸ்க்ரோலிங் ஓட துவங்கியது. விஷயம் ரசிகர்களிடையே காட்டுதீ போல பரவி, அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா தனுஷ், பதட்டப்பட ஒன்றுமில்லை. Allergic Bronchitis மூலம் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான் இது. பயப்பட எதுவுமில்லை. இதை பெரிதுபடுத்தி செய்தி போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையடுத்து செய்தியாளர்கள் தங்கள் பரபரப்புக்களை தற்காலிகமாக ஓரங்கட்டிவைத்தனர்.
நாம் விசாரித்தவரையில், சென்ற வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, தலைமை மருத்துவர், மருத்துவமனையில் தங்கியிருந்து முழு ஓய்வெடுத்து பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ரஜினி தான் அதை மறுத்துவிட்டு, சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்துகொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். (அவருக்கு ஹாஸ்பிடலுக்கு போறது, அங்கே தங்குறது, நாலு பேரு வந்து பாக்குறது இதெல்லாம் ஒத்துவராத சமாச்சாரங்கள்!).
இந்நிலையில் தலைவர் வீட்டிலும் ஒய்வுக்கிடையே யாராவது வந்து அவரை தினசரி பார்த்த வண்ணமிருந்தனர். தவிர அவருக்கு உணவு ஒவ்வாமையும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது (Food Allergy). ஆகையால், இம்முறை மருத்துவர், மருத்துவமனையிலேயே தங்கியிருந்து அவர்களது நேரடி கண்காணிப்பில் ஒய்வு எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
விருந்தினர்களின் வருகையை தவிர்க்கும் பொருட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றபடி பதட்டப்பட எதுவுமில்லை.
தலைவர் தற்போது நார்மலாக இருக்கிறார். இன்று காலை ‘தினத்தந்தி’ உள்ளிட்ட செய்தித் தாள்களை படித்ததாக அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். இன்னும் ஒரு சில நாட்கள் முழு ஓய்வெடுத்துவிட்டு பின்னர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவருக்கு என்ன ஆச்சு? ஏன் ராமச்சந்திராவில் அனுமதி?
15 May 2011
ஏற்கனவே சிகிச்சை பெற்ற இசபெல்லா, மற்றும் அப்பல்லோ இருக்கையில், ஏன் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு செல்லவேண்டும்? அப்பல்லோவில் இல்லாத வசதியா? என்று சிலர் கேட்கிறார்கள்.
முதலில்…. ராமச்சந்திரா மருத்துவமனை மட்டுமல்ல. அது நவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவப் பல்கலைகழகம். (Medical University). மேலும் அதன் சேர்மன் வெங்கடாச்சலம் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர். உடையாருக்கு சொந்தமான மருத்துவமனை இது.
இரண்டாவது… நகருக்குள் (CITY) இசபெல்லாவிலோ அப்பலோவிலோ அட்மிட் செய்தால், ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தொல்லை அதிகமிருக்கும். நகர்புரத்திலேயே இரு மருத்துவமனைகளும் இருப்பதால்,. LIVE COVERAGE வாகனத்தை மருத்துமனைக்கு முன்பாக நிறுத்தி லைவ் அப்டேட்ஸ் வழங்க தொடங்கிவிடுவார்கள். இது மருத்துமனை நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, அங்கு சிகிச்சை பெறும் பிறருக்கும் தொந்தரவாக இருக்கும். மேலும், ரசிகர்கள் கூட்டம் வேறு கூடிவிடும்.
நகருக்கு வெளியே என்றால் இது போன்ற பிரச்னைகள் இல்லை என்பதால் ராமச்சந்திரா மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. போரூர் மேம்பாலப் பணிகள் நடப்பதால் போரூர் சிக்னலை தாண்டி ராமச்சந்திரா செல்லவே ஒரு நாளாகிவிடும் என்பதால் இம்முறை பத்திரிக்கை மற்றும் டி.வி. சானல்கள் தொல்லை இல்லை.
இந்நிலையில், ராமச்சந்திராவில், முன்னாள் முதல்வர் கலைஞர் சிகிச்சை பெற்ற அதே அறையில் சிறப்பு வார்டில் தங்கியுள்ள சூப்பர் ஸ்டாருக்கு நேற்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. (கவலைப்படும் படி ஒன்றுமில்லை என்று இன்று ரிசல்ட் வந்துள்ளது.) அதே நேரம் உடலில் உள்ள சில சிறிய சிறிய பிரச்னைகளைக்கும் மொத்தமாக இங்கேயே ட்ரீட்மென்ட் கொடுத்துவிடுவது என்று குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டாருக்கும் நகர்புறத்தின் பரப்பரப்புக்களில் இருந்து சற்று விலகியுள்ள இந்த சூழல் சற்று பிடித்துவிட்டதாம். விரைவில் ராமச்சந்திராவிலிருந்து வீடு திரும்பியவுடன், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று அவர் ஓய்வெடுக்க்கூடும் என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள். (விடுமுறை பயணம் அதற்க்கு பிறகு இருக்கும்).
மேலும் ராமச்சந்திரா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது :
//Mr. Rajni Kanth, eminent film actor has been admitted to Sri Ramachandra Medical Centre for detailed investigations for his recurrent respiratory infection and gastro intestinal problems from which he had been suffering for the last few weeks. He is in ward (not in the intensive care unit) and has been progressing well. He has been advised complete rest by the doctors attending on him.//
தனது வார்டில் சூப்பர் ஸ்டார் உற்சாகமாக இருப்பதாகவும், டி.வி. சானல்கள் குறிப்பாக செய்தி சானல்களை விரும்பி பார்ப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் செய்தித் தாள்களையும் விரும்பி படிக்கிறார். மருத்துமனையில் சின்ன சின்ன வேலைகளை அவரே செய்துகொள்கிறார். அதற்க்கெல்லாம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. அவருக்கு கடினமாக இருக்கும் ஒரே விஷயம் : இப்படி ஒரே இடத்தில் இருப்பது தான். தனது நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் அவ்வப்போது போன் செய்து பேசுகிறார். ரசிகர்களின் உணர்வுகளையும் கேட்டு தெரிந்துகொள்கிறார். விரைவில் அவரிடமிருந்து நேரடி அறிக்கை/தகவல் வரக்கூடும்.
இந்நிலையில், ரசிகர்கள் தலைவரை ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டும். அவர் நமது முன் தோன்றி “எனக்கு எதுவுமில்லை. ஐ ஆம் ஆல்ரைட்” என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
‘ரஜினிக்காக இயக்குனர் சங்கத்தின் கூட்டுப் பிரார்த்தனை’ யோசனை தோன்றியது எப்படி? ஆர்.கே.செல்வமணி நம்மிடம் கூறிய சிறப்பு தகவல் !
25 May 2011
இயக்குனர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கமலா திரையரங்கில் திங்களன்று (23/05/2011) கூடியது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெறவேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இயக்குனர்கள் சங்க வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற பிரார்த்தனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கம் செவ்வாய் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :
ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் நெகிழச் செய்த இந்த பிரார்த்தனை மற்றும் இயக்கனர்கள் சங்கத்தின் இந்த நல்ல முயற்சியின் பின்னணி பற்றி தெரிந்துகொள்ள இயக்குனர் சங்க பொது
செயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களை தொடர்பு கொண்டோம்.
“இது எங்கள் கடமை” - ஆர்.கே. செல்வமணி நெகிழ்ச்சி!
இயக்குனர்கள் சங்கம் சார்பாக சூப்பர் ஸ்டாருக்காக செய்யப்பட்ட இந்த் பிரார்த்தனைக்கு முதலில் நமது தளம் சார்பாக நன்றியை
தெரிவித்துக்கொண்டோம். இந்த பிரார்த்தனை தொடர்பாக நமது கேள்விகளுக்கு பதிலளித்த திரு.செல்வமணி கூறியதாவது :
கேள்வி : இப்பிரார்த்தனை திடீரென்று முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதா அல்ல ஏற்கனவே இப்படி செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தீர்களா ?
ஆர்.கே.செல்வமணி : “ஏற்கனவே அது முடிவு செய்திருந்தது தான். பொதுக்குழு கூட்டத்திற்கு முந்தைய தினமே, இப்படி ஒரு பிரார்த்தினை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.”
கேள்வி : இது தொடர்பாக நீங்கள் யோசனை தெரிவித்தபோது உறுப்பினர்கள் மற்றும் பிறர் என்ன கூறினார்கள் ?
ஆர்.கே.செல்வமணி : “நிச்சயம் இது செய்யப்படவேண்டிய ஒன்று. நமது கடமை இது என்று அனைவரும் கூறினார்கள். தனிப்பட்ட ரீதியில் நாங்கள் அனைவரும் அவர் மீது பற்று வைத்திருந்தாலும் சங்கம் சார்பாக அதை வெளிப்படுத்த நினைத்தோம். காரணம் எங்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற D40 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அது சிறப்பாக நடைபெற ரஜினி சார் நல்ல முறையில் ஒத்துழைத்ததால், இயக்குனர்கள் அனைவருக்குமே அவர் மீது நல்ல அட்டாச்மென்ட் உண்டு.”
“இந்த யோசனையை நான் பாரதிராஜா அவர்களிடம் கூறியபோது, அவரும், “இதை நிச்சயம் செய்யவேண்டும். நமது வேண்டுகோளை ஏற்று D40 நிகழ்ச்சியில் கூட ரஜினி கலந்துகொண்டார். தவிர இண்டஸ்ட்ரியின் சீனியர் ஆர்டிஸ்ட் அவர்:” என்றார்.
கேள்வி : ரஜினி சார் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஆர்.கே.செல்வமணி : “மிகச் சிறந்த மனிதர். எல்லாருக்கும் உதவி செய்பவர். நல்ல மனிதர். உச்சத்தில் இருந்தாலும் அனைவரிடமும் ஒரே மாதிரி பழகக்கூடியவர். இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், முதல் கடைக்கோடி டெக்னீஷியன்கள் வரை எல்லாரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளும் நல்ல பண்பாளர். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இயக்குனர்கள் சங்கம் வாழ்த்துகிறது.”
திரு.செல்வமணி அவர்களுக்கும் இயக்குனர்கள் சங்கத்துக்கும், நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து விடைபெற்றோம்.
ரஜினியின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு லதா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் பதிலளித்தனர்
20 May 2011
ரசிகர்களுக்காக தலைவரின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்
28 May 2011
சூப்பர் ஸ்டார் ரஜினி எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு விசேஷ ஆம்புலன்சில் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். நூற்றுகணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்து அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். (இது குறித்த நம் அனுபவம் மற்றும் புகைப்படங்கள் இரண்டு நமது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.)
ரசிகர்களுக்காக ரஜினி அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரையாடல் மீடியாக்களுக்கு இன்று இரவு சௌந்தர்யாவால் அனுப்பப்பட்டது.
தலைவர் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவது புரிகிறது. இந்த நிலையிலும் அவருக்கு ரசிகர்கள் மேல் உள்ள அன்பும் வில்பவரும் அபாரமானது.
கீழ்கண்ட லின்க்கில் உள்ள MP3 ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
உரையாடல் விபரம்…
ஹலோ…. நான் ரஜினிகாந்த் பேசுறேன்.
நான் HAPPY a போயிட்டு வந்துகிட்டு இருக்கேன் கண்ணுங்கள…
நீங்கள் என் மேல காட்டுற அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…
பணம் வாங்குறேன்… ஆக்ட் பண்ணுறேன்… அதுக்கே நீங்க என் மேல் இவ்வளவு அன்பு கொடுக்குறீங்கன்னு சொன்னா… உங்களுக்கு DEFINITE ஆ நீங்கள் எல்லாரும் என் ஃபான்ஸ் எல்லாரும் THROUGH OUT THE WORLD தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி ஏதாவது செய்றேன்… கண்ணா…
கடவுள் கிருபை எனக்கு இருக்கு… குருவோட கிருபை எனக்கிருக்கு… எல்லாத்துக்கும் மேல என் கடவுள் போன்ற உங்கள் கிருபை எனக்கு இருக்கு… நான் சீக்கிரம் வருவேன்… ஓகே. . பை… குட்…
இந்த உரையாடலை கேட்டபிறகு, கண்களில் நீர் வராத ரசிகர்களே இவரும் இருக்க முடியாது…
Youtube ஆடியோ
சிங்கப்பூரில் எப்படி இருக்கிறார் தலைவர்?
30 May 2011
ராமச்சந்திராவிலிருந்து தலைவரை டிஸ்சார்ஜ் செய்து சிங்கபூருக்கு அழைத்துப்போவது என முடிவு செய்யப்பட்டவுடனேயே ரசிகர்கள் பலருக்கு, “ஏன் சிங்கப்பூர்? இங்கு இல்லாத மருத்துவ வசதியா? சிங்கப்பூருக்கு கொண்டுபோகுமளவிற்கு சீரியஸா?” என்றெல்லாம் சந்தேகம் தோன்றியது.
ராமச்சந்திராவில் அட்மிட் செய்யப்பட்டபிறகு , அவருக்கு இருந்த நுரையீரல் நீர்கோர்ப்பு பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவை மெல்ல மெல்ல குணப்படுத்தப்பட்டது. ஆயினும் சிறுநீரகத்தின் செயல்பாடு மட்டும் திருப்திகரமாக அதில் ஒரு ஒழுங்கின்மை நிலவியது. அடிக்கடி பல மணிநேரம் டயாலிசஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதற்கு மேல் பொறுத்திருந்து, நாளை சிறுநீரகத்தில் பெரிய பிரச்னை என்றால், அதை இங்கு சரி செய்வது கஷ்டம். எனவே, சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் அமிதாப்பின் ஆலோசனையின் பேரில் தலைவரை சிங்கப்பூர் அழைத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எளிசபெத் மருத்துவமனையில் இதை தொடர்ந்து அவர் சேர்க்கப்பட்டார். அனைத்து ஏற்பாடுகளும் அங்கு தயாராக இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் சென்றவுடன் அவரை விஷேஷ அறையில் வைத்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.
சூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ்; முதல்வருடன் தொலைபேசியல் உரையாடல்; ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புகிறார்!
15 June 2011
சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தலைவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், எனினும் சிங்கப்பூரில் சில காலம் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் அவரது மருமகன் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல செய்தியை முதலில் தெரிவித்தது அவரே.
“ஜென்ம ஜென்மத்துக்கும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” - ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து தலைவர் தன் கைப்பட உருக்கமான கடிதம்!
18 June 2011
சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன் ரஜினிகாந்த் புகைப்படங்கள்
13 July 2011
தலைவர் சென்னை திரும்பினார்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
14 July 2011
சிங்கப்பூரில் 46 நாட்கள் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தலைவர் ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, தமிழ்நாடு முழுவதும் அவருடைய ரசிகர்கள் கோவில்களில் விசேஷ பூஜை நடத்தினார்கள். சிலர் மண்சோறு சாப்பிட்டார்கள். இன்னும் சிலர் அலகு குத்தி தேர் இழுத்தார்கள். டாக்டர்களின் தீவிர சிகிச்சையினாலும், ரசிகர்கள் பிரார்த்தனையாலும் ரஜினிகாந்தின் உடல்நிலை தேற தொடங்கியது.
அவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை திரும்புவதற்கு டாக்டர்கள் அனுமதித்தார்கள்.
46 நாட்கள் சிங்கப்பூரில் இருந்த ரஜினிகாந்த், சென்னைக்கு திரும்பலாம் என்றதும் உற்சாகம் அடைந்தார். நேற்று காலையில் இருந்தே அவர் பழைய சுறுசுறுப்புடன் காணப்பட்டார். இந்திய நேரப்படி, மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டார்.
ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்து சென்னை திரும்புகிற தகவல் பரவியதும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிய ஆரம்பித்தார்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி, வாழ்த்து அட்டைகளை பிடித்தபடி நின்றார்கள். அவர்களிடம் இருந்து ரஜினிகாந்த் பிரியாவிடை பெற்றார்.
ரஜினிகாந்த் பயணம் செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சரியாக இரவு 9.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது. ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் வந்தனர். அதே விமானத்தில் காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மானுவும் வந்தார்.
விமானத்தில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், விமான நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ்சில், முக்கிய பிரமுகர்கள் வரும் 6வது எண் கேட்டுக்கு வந்தார். ஊதா நிற ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்து இருந்தார். முகத்தில் தாடி வளர்ந்து இருந்தது. கண்ணாடி அணிந்து இருந்தார்.
ரஜினிகாந்தை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். மினி பஸ்சை விட்டு இறங்கிய ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். ரசிகர்களை நோக்கி கை அசைத்த படி வந்த அவர், பின்னர் இரு கைகளையும் குவித்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ரஜினிகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.
“எங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்து விட்டது. தலைவர் நூறு வருடங்கள் வாழ்வார்” என்று சில ரசிகர்கள் கண்ணீர் மல்க கோஷம் எழுப்பினார்கள். ஒரு ரசிகர் ரஜினிகாந்துக்கு வெள்ளி வாள் ஒன்றை பரிசாக வழங்கினார்.
பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்கவும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டமும் இடம் பெற்றது.
ரசிகர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், கை அசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி 10.40 மணிக்கு தனது காரில் ஏறி, விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் வருகையையொட்டி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரஜினிகாந்தை வரவேற்றும், வாழ்த்தியும் அவருடைய ரசிகர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகரம் முழுவதும் வழிநெடுக பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் அமைத்திருந்தார்கள். அவைகளை எல்லாம் பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்து போனார்.
சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கேளம்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் சில வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு, ‘ராணா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
CLICK TO READ : தலைவர் வருகையையொட்டி ரசிகர்கள் எழுப்பிய போஸ்டர்கள் - புகைப்படங்கள் முழு தொகுப்பு
|