வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் உள்ள ஞானம் நகர் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள வீடற்ற தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அம்மாள் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.
இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9, 10 தேதிகளில் இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடக்கிறது.
இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களுக்காக அங்கே நேரில் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்டபோது, உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார்.
விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். மேலும் எம்ஜிஆருக்குப் பிறகு, அவருக்கு நிகரான ஆளுமையான தலைவர் இலங்கை செல்வதும் இதுவே முதல் முறை.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் திரு எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் திரு ஜேம்ஸ் பெர்ரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் வருக!,” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ரஜினியின் இந்த பயணத்துக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் கூட பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. ரஜினி அரசியலில் சிக்க வேண்டாம். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ரஜினிகாந்த இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கோரியிருந்தார்.
இதையடுத்து இவர்களின் கோரிக்கையை ஏற்று தனது இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டதாக ரஜினிகாந்த தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் அரசியல்வாதி அல்ல மக்களை மகிழ்விக்கும் கலைஞன். இலங்கை செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை அரசியலாக்கி தடுத்துவிடாதீர்கள். புனிதப் போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் மீண்டும் கிடைத்தால் தடுக்காதீர்கள். வைகோ தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். திருமாவளவன் ஊடகம் மூலம் தெரிவித்தார். இவர்களின் கோரிக்கைகளை ஏற்று தற்போது இந்த பயணத்தை ரத்து செய்துள்ளேன், என தெரிவித்துள்ளார்.
அறிக்கை
ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான தமிழக அரசியல் தலைவர்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் வரவேண்டும், ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் வைத்திருந்தனர்.
தமிழக அரசியல் தலைவர்கள் வைகோ, திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றவர்களைக் கண்டித்து, “ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து அரசியல் பிழைக்காதீர்கள்,” என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும், நேரம் கூடி வரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார்.
-என்வழி
|