ரஜினி ரசிகர்களுக்குக் குறிப்பாக இணையதள ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பரிச்சியமானவர் சுந்தர். rajinifans.com ல் ஒரு நிருபர் போலத் தலைவர் பற்றிய தகவல்களை ரசிகர்களுக்குக் கொடுத்தவர்.
சனிக் கிழமை (11 March 2017) அதிகாலை நடந்த வாகன விபத்தில் காலமாகி விட்டார் என்ற அதிர்ச்சி தகவல் ரசிகர்களிடையே பரவி அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுந்தர் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர் தரும் தலைவர் பற்றிய விரிவான தகவல்கள். எப்படித்தான் பெறுகிறார் என்று தெரியாது ஆனால், ஒரு தொழில்முறை நிருபர் போலச் செய்திகளை வைத்து இருப்பார்.
இணையத்தில் இன்னும் இவருடைய தளம் பெயர் குறிப்பிட்ட தலைவர் குறித்த அபூர்வ நிழற்படங்களையும் காணொளிகளையும் காணலாம். அந்த அளவுக்குப் பல தலைவர் பற்றிய தகவல்களைத் தன்னிடத்தே வைத்து இருந்தார்.
தலைவர் படம் வெளியாகும் சமயத்தில் இவருடைய தளம் கூட்டம் தாங்காமல் திணறி செயல் இழந்த சம்பவங்கள் கூட நடைபெற்று இருக்கின்றன.
பின் சில தனிப்பட்ட காரணங்களால் தலைவர் பற்றிய செய்திகளில் இருந்து முற்றிலும் விலகி ஆன்மீகத்துக்கு மாறினார். பெயரைக் கூட rightmantra.com என்று தலைவர் பாதிப்பில் வைத்ததாகக் கூறி இருந்தார்.
சுந்தரிடம் நான் அதிகம் வியந்த ஒரு விசயம் என்னவென்றால், எந்தத் துறையில் இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பார். தலைவர் விசயம் என்றால், அதில் அவர் தெரிந்து வைத்து இராத தகவல்களே இல்லை எனும் அளவுக்குத் தகவல் களஞ்சியமாக இருந்தார்.
பழைய செய்தித் தாள்களின் கட்டிங்குகள் பலவற்றைச் சேகரித்து வைத்து இருக்கிறார்.
ஆன்மீகத்துக்கு வந்தவுடன் இது வரை அனுபவம் உள்ளவர்களையே மிஞ்சும் அளவுக்கு ஆன்மீகத்தில் செய்திகளை வழங்கினார்.
எப்படி இது சாத்தியம் என்று நான் வியந்தது உண்டு! குறுகிய காலத்தில் ஆன்மீகம் பற்றிய தகவல்களில் சிறந்து விளங்கினார். பல நல்ல தகவல்களைச் சுய முன்னேற்ற கட்டுரைகளைப் பகிர்ந்து வந்தார்.
இவருடைய கட்டுரைகளைப் பலர் திருடி பயன்படுத்துவது குறித்து வருத்தம் தெரிவித்து இருந்தார். அந்த அளவுக்கு இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்புப் பெற்று இருந்தன.
பல லட்சியங்களை மனதில் நினைத்து வைத்து இருந்தார், இந்த நேரத்தில் இப்படி ஒரு மரணம் மிக மிக வருத்தம் அளிக்கிறது.
அதுவும் ஆன்மீக விஷயமாகச் சென்று இருந்த போதே நடந்த விபத்து என்பது கூடுதல் மன வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.
ரஜினி ரசிகர்களுக்கும் குறிப்பாக ஆன்மீக ரசிகர்களுக்கும் இவரின் இறப்பு மிகப்பெரிய இழப்பாகும் :-( .
சுந்தர் மறைந்தாலும் அவரின் பெயர், தளத்தின் முகவரியுடைய நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் இணையம் இருக்கும் வரை சுற்றிக்கொண்டு இருக்கும். அவரின் நினைவை அனைவருக்கும் கொடுத்துக்கொண்டு இருக்கும்.
சுந்தர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய ரஜினி ரசிகர்கள் சார்பாகவும் அவருடைய ஆன்மீக தள ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக் கொள்கிறோம்.
- கிரி
|