25 October 2004
ரஜினிகாந்த் நடிக்கும் `சந்திரமுகி' படத்தின் தொடக்க விழா பூஜை சிவாஜி கணேசன் வீட்டில் நேற்று நடந்தது. அதில் ரஜினிகாந்த்-கமலஹாசன் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் நெற்றியில், கமலா அம்மாள் திலகமிட்டு வாழ்த்தினார்.
2 வருட இடைவெளிக்குப் பின், ரஜினிகாந்த் `சந்திரமுகி' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை சிவாஜி கணேசனின் சொந்த பட நிறுவனமான சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், அவருடைய மகன் நடிகர் பிரபு தயாரிக்கிறார்.
படத்தில் முக்கிய வேடம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை தியாகராயநகரில் உள்ள சிவாஜி கணேசன் வீட்டில் நேற்று நடந்தது.
விழாவையொட்டி சிவாஜி கணேசன் அவரது தாயார் ராஜாமணி அம்மாளுடன், அமர்ந்து சாமி கும்பிடுவது போன்ற `போட்டோ', வீட்டின் நடு ஹாலில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
காலை 11 மணிக்கு ரஜினிகாந்த் அங்கு வந்தார். அவர் கதர் வேட்டியும், கதர் சட்டையும் அணிந்திருந்தார்.
சிவாஜி மகன்கள் ராம்குமார், பிரபு இருவரும் ரஜினியை வரவேற்று அழைத்து வந்தார்கள்.
அதைத் தொடர்ந்து புரோகிதர் மந்திரம் ஓத, பூஜை நடந்தது. ரஜினிகாந்த் கண்களை மூடியபடி, 10 நிமிடம் சாமிகும்பிட்டார்.
சிவாஜியின் மனைவி கமலா அம்மாள், ரஜினிகாந்த் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினார். அவரிடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.
ராம்குமார், பிரபு, `சந்திரமுகி' படத்தின் டைரக்டர் பி.வாசு ஆகியோருக்கும் கமலா அம்மாள் திலகமிட்டு வாழ்த்தினார்.
சொந்த பட வேலை தொடர்பாக மும்பை சென்றிருந்த கமலஹாசன், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே, விமானம் மூலம் பறந்து வந்தார்.
அவரும், ரஜினிகாந்தும் கட்டித் தழுவிக்கொண்டார்கள்.
பூஜையை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் புறப்படுவதற்கு முன், `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
"சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு, பிறகு ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மற்ற விவரங்களை பிரபு கூறுவார்".
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
அதன் பிறகு பிரபு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
"சந்திரமுகி படத்தில் ஒரு கதாநாயகியாக சிம்ரன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார்.
இன்னொரு கதாநாயகியாக, ரஜினிசாருக்கு ஜோடியாக மலையாள நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
விஜயகுமார், நாசர், வடிவேல் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் சகோதரி மகன் சேகர்ஜோசப், இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர், `ஒக்கடு' என்ற தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
வித்யாசாகர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ் அமைக்கிறார்."
மேற்கண்டவாறு பிரபு கூறினார்.
மத்திய மந்திரி தயாநிதிமாறன், ராம்குமார், பிரபு இருவரிடமும் டெலிபோன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் நடிகர்கள் சத்யராஜ், நெப்போலியன், `ஜெயம்'ரவி, சிபிராஜ், ஜீவா, விஜயகுமார், நாசர், தியாகு, வடிவேல், அலெக்ஸ், ஜெயராம், ராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், பிரதாப் போத்தன், சின்னிஜெயந்த், ஆர்.எஸ். சிவாஜி, நடிகைகள் ராதிகா, மனோரமா, டைரக்டர்கள் சி.வி. ராஜேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ராமநாராயணன், என்.கே.விஸ்வநாதன், ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, ராஜ்கபூர், ஆர். சுந்தர்ராஜன், சந்தான பாரதி, `ஜெயம்' ராஜா, ஷக்தி சிதம்பரம், டி.பி.கஜேந்திரன், எடிட்டர் மோகன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, செயலாளர் ஜி. சேகரன்.
பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், கே.முரளிதரன், பஞ்சு அருணாசலம், பிரமிட் நடராஜன், சாமிநாதன், ஜி.வேணுகோபால், இப்ராகிம் ராவுத்தர், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, துரை, புஷ்பாகந்தசாமி, ஜி.தியாக ராஜன், முருகன், மோகன் நடராஜன், டி.என்.சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
|