கனவை நனவாக்கிய ரஹ்மானுக்கு ரஜினி வாழ்த்து!
இந்தியர்களின் முக்கால் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.
ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளி வந்திருக்கிறார், ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்த 81-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்.
விருதுபெற்ற ரஹ்மானை தமிழ் திரையுலகமே கடந்த இரு தினங்களாகக் கொண்டாடி வருகிறது.
தமிழ்த் திரையுலகின் முதல்வரான (அதாவது சூப்பர் ஸ்டார்!!) ரஜினிகாந்த் ரஹ்மானுக்கு போனில் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்.
வருகிற 28-ம் தேதி அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பும் ரஹ்மானுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினி.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற கையோடு, ரஹ்மான் அளித்துள்ள ஒரு தொலைக்காட்சிப் பேட்டியை இங்கே தருவது பொருத்தமாக இருக்கும்.
விருது பெற்ற கையோடு நமது இசைப் புயல் அந்நாட்டு தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டி தொகுப்பு:
‘ஸ்லம்டாக் மில்லினர்’ இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை. மும்பை சேரிப்பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா?
முதலில் டேனி பாய்ல் திரைக்கதையை அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் டேனி அவரது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய ‘டிவிடி’யை பார்த்தேன். படம் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். மூன்று வாரங்களில் இசையமைத்துக் கொடுத்தேன்.
இந்தப் படம் உங்கள் வாழ்க்கையையும் படம் பிரதிபலித்ததா?
ஆம், ஆனால் இந்த அளவுக்கு நான் போராடவில்லை என்றே நினைக்கிறேன். நானும் நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்களை எட்டவில்லை. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.
பாய்ல் உங்களிடம் எவ்வாறான இசையை எதிர்பார்த்தார்?
சென்டிமென்ட், சோகமான இசை வேண்டாம் என ஆரம்பத்திலேயே அவர் கூறிவிட்டார். சிலகாட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதை மாற்றும் வகையில் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும்.
இந்திய படங்களுக்கும், ஆங்கிலப்படங்களுக்கும் இசையமைப்பதில் என்ன வித்தியாசம்?
‘ரோஜா’ படம் பல விருதுகளை பெற்ற போது மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில் இப்போதுதான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற்றுள்ளேன். இது புதிய அனுபவம். இனிமையாக, த்ரில்லிங்காக உள்ளது.
முதலில் பெற்ற சம்பளம்?
முதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள் என நினைக்கிறேன். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.
ஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்?
சில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன்.பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
எந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது?
‘லார்ட் ஆப் த ரிங்ஸ்’ படத்தில் வேலை அதிகமாகவும் இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது.’எலிசபத்’ படத்திற்காக இது வரை செய்யாத புதிய பாணியில் இசையமைத்தேன்.