வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எதிரிகளுக்கு எதிராக வெவ்வேறான முறையில் கம்பேக் கொடுக்கும், கம்பேக் என்றால் சாதாரணமாக அல்ல, எதிரிகள் மீள முடியாத அளவு வலுவான கம்பேக்காகக் கொடுக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த்.
ஆரம்பக் காலகட்டத்தில் அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி ஒழித்துக் கட்ட நினைத்த போது, தர்மயுத்தமாகக் கம்பேக் கொடுத்துத் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் எனும் அந்தஸ்தினை பெற்று வெற்றி இளவரசனாக வலம் வந்தார்.
பின் பத்தாண்டுகள் கழித்து "நாட்டுக்கொரு நல்லவன்" மிக மோசமாகத் தோற்ற போது ரஜினி அவ்வளவு தான் எனப் பேசியவர்களுக்குப் பதிலடியாக அண்ணாமலையாய் விஸ்வரூபம் எடுத்துத் தமிழ் சினிமாவின் ஒரே மன்னன் தான் என நிரூபித்தார்.
பின் பத்தாண்டுகள் கழித்துப் பாபாவாகத் தோல்வி அடைந்த போது சந்திரமுகியாய் மீண்டெழுந்து வசூல் சக்கரவர்த்தியாக நிரூபித்தார்.
இதோ இந்தப் பத்தாண்டு கழித்து ரஜினி அவ்வளவுதான் எனப் பேசியவர்கள் இனி அந்த வசனத்தையே சொல்ல முடியாதவாறு 2.0 ஆகச் சரித்திரத்தை திருத்தி எழுதியிருக்கிறார்.
நான் அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு துறையில் இத்தனை ஆண்டுகாலம் நம்பர் ஒன்னாக இருக்க முடியுமா என்று யோசிக்க முடியாத அளவு 40 வருடங்களாக நம்பர் ஒன்னாகத் தொடர்ந்து வருகிறார் என்பது ஆச்சர்யமான உண்மை..
2014 லிங்கா தோல்விக்குப் பின் ரஜினியின் இடத்தினைத் தட்டிப்பறிக்கப் பல கட்ட முயற்சிகள் நடைபெற்றன.
குறிப்பாக ரஜினிக்கு வயதாகி விட்டது இனி வெற்றி பெற முடியாது என்ற கோஷத்தை அழுத்தம் திருத்தமாக மக்களின் எண்ணத்தில் பதிய வைக்க முயன்றனர்.
கம்பத்தில் கோல் போடுபவன் எல்லாம் சூப்பர் ஸ்டார் தான், இனி நான் எம்.ஜி.ஆர் ரசிகன் , சமூக வலைதள எழுச்சி, பொதுப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கவில்லை எனும் பிரச்சாரம், எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி கன்னடன் என்ற இனவாத கோசம் என.. இவை எல்லாம் இன்றும் நடந்து கொண்டிருகின்றன என்பது வேறு விசயம்.
அந்த நேரத்தில் கபாலியாக அவதாரம் எடுத்து "நான் தாண்டா ரஜினி" எனச் சிலருக்கு காட்ட வேண்டி இருந்தது.. மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது.. படம் ரஜினி படமாக இல்லை என்ற விமர்சனங்களையும் தாண்டி பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
எதிர்த்த வாய்கள் கொஞ்ச நாட்கள் கப்சிப்.. அடுத்து அதே இயக்குநருடன் "காலா".
காலா வெளியான நேரம், ரஜினி அரசியல் அறிவிப்புக்கு பின்பு வந்த திரைப்படம் என்பதால் இதை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் பெரும் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது.
தூத்துக்குடியில் ரஜினி கூறியதை திரித்து மக்களிடையே எதிர்மறை எண்ணங்களை ஊடகங்கள் மூலமாகக் கொண்டு சென்றனர்.
மீண்டும் அதே கோசங்கள்..இம்முறை மிக மிக வலுவாக அடித்தனர் . ஆனாலும் ரஜினி எனும் ஒற்றை மனிதனால் படம் காப்பாற்றப்பட்டது.
வேறு யார் நடித்திருந்தாலும் அப்படம் வெளிவந்திருக்குமா என்பதே சந்தேகம். அப்படியே வந்து இருந்தாலும், ஓடி இருக்குமா?! என்பது அதை விடச் சந்தேகம்.
வணிக ரீதியில் காலாவின் வெற்றி கபாலியின் பாதி அளவே இருந்தது. ரஜினியின் இந்தச் சுமாரான வெற்றியே மற்றவர்களுக்குப் பிளாக்பஸ்டர் வெற்றி.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் இத்தனை பெரிய வெற்றியை பெற்றதே அதிசயம் எனச் சமாதானம் கொண்டாலும் ரஜினி ரசிகனுக்கு ஒரு திருப்தி வரவில்லை.
மேலும் வணிக ரீதியாக ரஜினி எனும் ப்ராண்டிற்கு ஒரு சறுக்கலாகவே இருந்தது காலா.. இதை மாற்றி எழுதாமல் அரசியல் செய்வது கடினம்.
தலைவர் சினிமாவில் சக்கரவர்த்தியாக இருக்கும் போதே அரசியலில் மகுடம் சூட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்த நேரத்தில் தான் 2.0 வெளியானது.
2.0 வெளியான நேரமும் பல ரசிகர்களுக்கு உவப்பானதாக இல்லை.. தீபாவளி முடிவு, சாதாரண வேலை நாள், வியாழக்கிழமை, கஜா புயல், மழைக்காலம் என அத்தனையும் நெகட்டிவ் தான்.
இருந்தாலும் ரசிகர்கள் நம்பியது தலைவரின் அந்த ட்ரெய்லர் வெளியீட்டு பேச்சு மட்டும் தான்.
"புரோமோசன் இல்லை எனக் கவலைப்படாதீர்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ப்ரொமோட் செய்வார்கள்" எனப் பேசியது தான் ஒரே நம்பிக்கை.
படம் வந்தது.. வசீகரனாக, சிட்டியாக என முதல் பாதியில் கதையோடு பயணித்தாலும் என்னடா தலைவர் மொமண்ட்ஸ் வரலையே என ரசிகன் கொஞ்சம் சோர்வடைய ஆரம்பித்த அந்தக் கணத்தில் வந்தது பாருங்கள் 2.0 வின் அறிமுகம்.
யப்பா.. இப்போது நினைத்தாலும் தியேட்டர் அலறிய அந்தத் தருணம் புல்லரிக்கச் செய்கிறது.. இது தாண்டா ரஜினி படம் என அடுத்த அரை மணி நேரம் தலைவர் பின்னி பெடலெடுத்திருப்பார்.
பக்சி இனிமே நீ பறக்கவே கூடாது, நான் தான் சூப்பர் ஒன், வாங்கடா செல்பி புள்ளங்களா, அந்த வில்லனிக் ஹா ஹா ஹா சிரிப்பு என அதகள ரஜினி.. இதோடு கூட 3.0 வின் அறிமுகம்.
ரகுமானின் அந்த ராஜாளி தீமில் ஏய் ஏய் ஏய் என மிரட்டல் எண்டரி கொடுக்கும் மினிபாட் வேற லெவல் சுட்டி ரஜினி.
க்ளைமாக்ஸில் 3D யில் நம் அருகே வந்து ப்ளையிங் கிஸ் கொடுக்குமாறு செய்ததெல்லாம் ப்யூர் சங்கர் டச்.. கபாலி, காலா எனும் ரஜினியின் நடிப்பை ரசித்த ரசிகர்கள் 2.0 வில் தங்களின் அதிரடி ரஜினியை ரசித்த திருப்தியோடு வெளியே வந்தனர்.
பொது மக்களுக்கும் படம் பிடித்துப்போக, இதோ சாதாரணத் தமிழ்சினிமா ஒன்று கடந்த வார இறுதி உலகப் பாக்ஸ் ஆபீசில் ஹாலிவுட் படத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றிருக்கிறது.
1996 க்குப் பின் தமிழ் சினிமாவின் தொடர்சியான தனது 6 வது இண்டஸ்ட்ரி ஹிட்டை ரஜினி கொடுத்திருக்கிறார் 2. 0 மூலம்.
2014 க்குப் பின் தலைவர் ரசிகன் மனம் எங்கும் பாசிட்டிவ் வைப்.. எங்களுக்குத் தேவை உடனடியாக ஒரு வணிக வெற்றி.
வணிக வெற்றி என்றால் சாதாரணமானதாக இல்லை..எவரும் கேள்விகேட்க அஞ்சுகிற வணிக வெற்றி.. அதை ஷங்கரின் துணையோடு தலைவர் புத்தாண்டு பரிசாக அளித்திருக்கிறார்.
ஹேட்டர்ஸ்கள் வழக்கம் போல வயிறு எரிச்சலில் ஜெலுசில் தேடிக்கொண்டிருக்கின்றனர்...வீக்கெண்ட் முடிந்த திங்களன்று சென்னையில் 1 கோடிக்கும் மேல் வசூலை பெற்ற முதல் தமிழ்படமாக 2.0 சாதனைசெய்திருக்கிறது.
இதோடு விட்டார்களா?! போலி ட்ராக்கர்ஸ் துணையுடன் பொய் வசூல் கணக்கை காட்டி படத்தை கீழிறக்கப் பார்க்க முயற்சித்த போது, தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு கொடுத்து அவர்களை அசிங்கப்படுத்தியது.
தலைவர் அரசியலுக்கு வந்துவிட்டார் எனவே எல்லாப் படங்களுமே இனி காலா அளவு தான் ஓடும் என அச்சப்பட்ட ரசிகர்களுக்கு...
அடேய் முட்டாள், படம் நன்றாக இருந்தால் ஓடும்.. அரசியலோடு போட்டுக் குழப்பிக் கொண்டு மக்கள் நிராகரித்துவிட மாட்டார்கள் என நமக்கெல்லாம் தலைவர் ஒரு கொட்டும் வைத்திருக்கிறார்.
சினிமா அரசியல் என இரட்டைக் குதிரையிலும் சவாரி செய்ய நினைக்கிறார் ரஜினி எனச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்தச் சவாரிக்கு எங்களிடம் தெம்பும் வலுவும் இருக்கிறது என 2.0 மூலமாகப் பதிலும் சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர்.
அரசியலுக்கு வந்த பின் உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி எந்த அளவு எம்.ஜி.ஆருக்கு முக்கியமானதாக இருந்ததோ அதே அளவு 2.0 வின் வெற்றியும்.
அவ்வெற்றி இன்றைக்குச் சரித்திர வெற்றியாகச் சாத்தியமாகியிருக்கிறது. அரசியல் வெற்றியும் விரைவில் சாத்தியப்பட இருக்கிறது ;) .
பேட்டயில் சந்திப்போம்... கோட்டைக்குத் தயாராவோம் :) 😎🤘
- Jeyaseelan
|