“அக்கா பெயருக்குப் பின்னாடியும், என் பெயருக்குப் பின்னாடியும் ‘ரஜினிகாந்த்’னு இருக்கிறதே பெரிய பாக்கியம். ‘ஒரு விஷயம் வேணும்னு கடவுள் கிட்ட எவ்ளோ பிரார்த்தனை பண்றோம், அது கிடைச்ச பிறகு, அதே அளவுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லணும்’னு அப்பா அடிக்கடி சொல்வார். நான் தினம் தினம் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்.” கணவர் விசாகனின் கரம் பற்றிக் கொண்டு நம்முடன் பேசுகிறார், சௌந்தர்யா ரஜினிகாந்த்.
முதலில் ‘நீயே பேசு’ என்று அர்த்தம் தொனிக்கும் புன்னகையோடு விசாகன், சௌந்தர்யாவைப் பார்க்கிறார். “எங்களுக்குத் திருமணமாகி ரெண்டு மாசம் ஆகுது. ஆனா, ரொம்பநாள் பழகுன மாதிரி ஒரு ஃபீலிங். ஒருவருக்கொருவர் அனுசரிச் சுட்டுப் போறது, புரிஞ்சுக்கி றதுன்னு வாழ்க்கை நிம்மதியா, அமைதியா இருக்கு. இன்னும் நல்ல விஷயங்களை எதிர்நோக்கி யிருக்கோம்” என்கிறார், சௌந்தர்யா ரஜினிகாந்த்.
“சௌந்தர்யாவை முதன் முதலா தாஜ் கோரமென்டல் காபி ஷாப்ல மீட் பண்ணேன். கொஞ்சம் தைரியம், கொஞ்சம் அழகு, ரொம்ப எளிமை... இப்படிக் கலவையா இருந்தாங்க, செளந்தர்யா. பேச்சிலும் அதே குணம்தான். இவங்ககிட்ட எல்லாமே பிடிச்சிருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகி, இப்போ மனைவியா கொண்டுவந்து நிறுத்திட்டேன்!” எனச் சிரிக்கிறார், விசாகன்.
“எல்லோருக்கும் எது, எந்தக் காலத்துல நடக்கணும்னு ஆண்டவன் முடிவு பண்ணி, அந்த நேரத்துல நடத்துவார். எங்க ஃபேமிலிக்கு ரொம்ப நெருக்கமான அமர்நாத் அங்கிள், ‘ஒரு பையன் இருக்கான்’னு இவரைப் பத்தி அப்பாகிட்ட சொன்னார். எனக்கு அப்போ கல்யாணத்துல விருப்பமில்ல. ஆனா, இவரைச் சந்திக்கணும்னு தோணுச்சு.
விசாகன் குடும்பத்துக்கும், எங்க குடும்பத்துக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் சார் நண்பர். உடனே, அப்பா அவர்கிட்ட பேசினார். பிறகு, வீட்டுல பேசி நாங்க ரெண்டுபேரும் சந்திச்சுக்கிட்டோம். நான் இவரைப் பார்க்கக் கிளம்பும்போது அப்பா ‘பேட்ட’ ஷூட்டிங்ல இருந்தார். ‘கண்ணா, கிளம்பிட்டீங்களா, ரெடியா?’ன்னு கேட்டார். என்னைவிட அவர்தான் பரபரப்பா இருந்தார். காமெடி என்னன்னா, சந்திக்கும்போது, என் போன் நம்பர் இவர்கிட்ட இல்ல; இவர் போன் நம்பர் என்கிட்ட இல்ல. போட்டோவுல பார்த்த அந்த முகத்தை காபி ஷாப் முழுக்கத் தேடி, பிறகு கண்டுபிடிச்சேன். நிறைய பேசினோம், பழகினோம். கல்யாணம் பண்ணிக்க லாம்னு நம்பிக்கையும் வந்தது” என செளந்தர்யா சொல்ல, விசாகன் தொடர்ந்தார்.
“முதல் முறையா பார்க்கிறப்போ, ‘தலைவர் பொண்ணைப் பார்க்கப் போறோம்’னு ஒரு சின்னப் பரபரப்பு இருந்தது. தெளிவா பேசுனாங்க, செளந்தர்யா. பேசி முடிச்சதும், இவங்களை அனுப்பிட்டு உடனே அப்பாவுக்கு போன் பண்ணி, ‘எனக்கு இந்தப் பொண்ணு பிடிச்சிருக்குப்பா’ன்னு சொல்லிட்டேன்” என்கிறார்.
“மாமனாரை எப்போ முதல் முறையா சந்திச்சீங்க?” என்றோம், விசாகனிடம். “அவரைப் பார்க்கப் போறதுக்கு முன்னாடி, கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். ‘ரஜினி சாரைப் பார்த்ததும், பரபரப்பாகிடும். ஆனா, அவரும் நமக்கு அப்பா மாதிரிதான். கூலா பேசுங்க’ன்னு பெரிய மாப்பிள்ளை தனுஷ் எனக்கு டிப்ஸ் கொடுத்தார். பேசினேன். அவருக்கும் என்னை ரொம்பப் பிடிச்சிருக்கிறதா சொன்னார்” என அவர் பக்கம் பார்க்க, செளந்தர்யா தொடர்கிறார்.
“ஆமா, இந்த மீட்டிங் நடக்குறதுக்கு முன்னாடி தனுஷ் - ஐஸ்வர்யா ரெண்டுபேர்கிட்டேயும் ஒரு இன்டர்வியூ மாதிரி கூட்டிக்கிட்டுப் போயிட்டேன். இவர்கூட கொஞ்சநாள்தான் பழகியிருக்கேன். அதனால, தனுஷ் - ஐஸ்வர்யாகிட்ட கூட்டிக்கிட்டுப் போலாம்னு தோணுச்சு. அங்கே கூட்டிக்கிட்டுப் போனா, மூணுபேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. தனுஷ் - ஐஸ்வர்யா ரெண்டுபேரும் அப்பாவுக்கு போன் பண்ணி, ‘இவர் சரியா இருப்பார்’னு சொன்னாங்க. உண்மை என்னன்னா, இவர் அப்பாவைப் பார்த்துப் பேசுறதுக்கு முன்னாடியே, நாங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டோம். எனக்கு போயஸ் கார்டன்ல எங்க கல்யாணம் நடக்கணும்னு ஆசை. ஆனா, டிராஃபிக் பிரச்னை வரும்னு, லீலா பேலஸ்ல வெச்சுட்டாங்க’’ என்ற செளந்தர்யாவுக்கு, விசாகனைப் பிடித்துப்போக ஆயிரம் காரணம் இருக்கிறது.
“விசாகன்கிட்ட துளியளவும் போலித்தனம் இருக்காது. அநியாயத்துக்கு நல்லவனா இருப்பார். நானே சமயத்துல அதைக் கன்ட்ரோல் பண்ணச் சொல்வேன். ‘நல்லவனா இரு; ரொம்ப நல்லவனா இருக்காதே’ன்னு அப்பா சினிமாவுல ஒரு வசனம் பேசுவாரே அப்படித்தான். முதல் சந்திப்புல யாரா இருந்தாலும், எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கமாட்டோம். ஆனா, இவர் எதையும் மறைக்காம, முகத்துக்கு நேரா எல்லாத்தையும் பேசினார். ‘என்னய்யா எல்லாத்தையும் கொட்டிட்ட’ன்னு நினைச்சு சிரிச்சேன்” என செளந்தர்யா சொல்ல, விசாகன் தொடர்கிறார்.
“இவங்களும் ரொம்ப ஹானஸ்ட்தாங்க. எல்லா விஷயத்திலும் ரொம்ப ஈடுபாட்டோட இருப்பாங்க. என் குடும்பத்தையும் சரி, அவங்க குடும்பத்தையும் சரி... ரொம்பவே நேசிக்கிறாங்க. அவங்க நேசிப்பை என்னால வார்த்தையால சொல்ல முடியல!” என்கிறார்.
“ரெண்டுபேர்ல யார் ரொமான்டிக்?” என்றேன். “கண்டிப்பா, செளந்தர்யாதாங்க!” என எஸ்கேப் ஆகிறார், விசாகன்.
“நான் கேண்டில்ஸ், சாக்லேட்ஸ்... இப்படி இருப்பேன். விசாகன் ரொமான்ஸ் வேறமாதிரி இருக்கும். ‘சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸ் வராத ஆள்’னு சொல்லமாட்டேன். ஒரு ஆண், தன்னோட துணைவியை அப்படியே ஏத்துக்கிறதுதான் காதல். அந்த வகையில பார்த்தா, விசாகன் ரொம்ப ரொமான்டிக்கான ஆளுதான்!” எனச் சிரிக்கிறார், செளந்தர்யா.
“கரம் பிடிச்சுக் கொடுக்கும்போது கண் கலங்கி நின்னுக்கிட்டிருந்தார், ரஜினி. அந்தத் தருணம் உங்களுக்கு எப்படியிருந்தது?”
“அவர் ஸ்டைல்ல, ‘விசாகன்ன்ன்’னு சொன்னார். அதிலேயே ‘எல்லாம் ஓகேதானே?’ன்னு கேட்கிற மாதிரி இருந்தது” என விசாகன் சொல்ல, செளந்தர்யா தொடர்ந்தார். “நான் ரொம்ப நன்றியோட அம்மா, அப்பாவைப் பார்த்துக்கிட்டிருந்தேன். என்னோட எல்லாத் தருணத்திலும் என்கூட இருந்தவங்க அவங்க. என் அப்பா, அம்மா எனக்குக் கிடைச்ச வரம். இந்தக் கல்யாணத்துல எனக்கு எவ்ளோ சந்தோஷமோ, அதைவிட அவங்களுக்கு அதிக சந்தோஷம். என் எதிர்காலமும், பையன் வேத் எதிர்காலமும் நல்லா இருக்கும்னு அவங்க நினைக்கிறாங்க. விசாகன் எனக்குத் தாலி கட்டுனதும், அப்பா கையைப் பிடிச்சுக்கிட்டு ‘தாங்க்ஸ்ப்பா’ன்னு சொன்னேன். அப்போதான் அவர் கண்கலங்கிட்டார்” என்கிறார், நெகிழ்வாக!
“மாமனார் வீட்டு அனுபவம்?” - இது இருவருக்குமான பொதுவான கேள்வி. முந்திக்கொண்டு பதில் சொல்கிறார், விசாகன். “மாமனார் ரஜினி சார், மாமியார் லதா அம்மா ரெண்டுபேருக்கும் நான் செல்லம்தான். அடிக்கடி நலம் விசாரிக்கிறாங்க” என விசாகன் சொல்ல, புகுந்த வீட்டின் சிறப்புகளைச் சொல்கிறார், செளந்தர்யா.
“நான் மாமியார் செல்லம்தான். அவங்ககூட தான் அதிகம் பேசிக்கிட்டி ருப்பேன். மாமனார் அதிகம் பேசமாட்டார். ஆனால், ரொம்ப நல்ல குணம் அவருக்கு. இவர்தான் அவங்க அம்மாகிட்ட, ‘மருமகள் வந்ததுல இருந்து என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிற’ன்னு கலாய்ப்பார். இவரோட அக்கா, தம்பியும் ரொம்ப இயல்பா பழகுவாங்க. மொத்தத்துல நான் வாழப் போயிருக்கிற குடும்பத்துல, அன்பு நிறைஞ்சுகெடக்கு!”
“வேத் - விசாகன் - செளந்தர்யா... இந்தக் குடும்பக் கதையைச் சொல்லுங்களேன்?!” என்றால், “வேத், விசாகனை முதல்முறையா மீட் பண்ணப்பவே ஓரளவுக்கு செட் ஆகிட்டான். அடிக்கடி, ‘அப்பாவைப் பாரு’ன்னு விசாகன் போட்டோவை அவன்கிட்ட காட்டியிருக்கேன். அவனும், விசாகன்கிட்ட ஒரு பாதுகாப்பை ஃபீல் பண்றான். சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன்னு நடந்த எல்லா நிகழ்ச்சியிலேயும் குழந்தை இருந்தான். இவனுக்கு அது தெரியணும்னுதான் முடிவு பண்ணோம். முக்கியமா, அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்டமாதிரி, வேத்கிட்டேயும் கல்யாணத்துக்குப் பெர்மிஷன் கேட்டார், விசாகன். ‘யெஸ்’னு தலையாட்டினான், வேத். அதையெல்லாம் வீடியோ எடுத்து வெச்சிருக்கோம். அவனுக்கு 18 வயசு ஆகும்போது போட்டுக் காட்டலாம்னு பிளான். முக்கியமா இதையும் சொல்லணும். தாலி கட்டுற நேரத்துல வேத் பக்கத்துல இல்லை. ‘வேத் வரட்டும், அதுவரைக்கும் வெயிட் பண்ணலாம்’னு சொல்லி, அவன் வந்த பிறகுதான் தாலி கட்டினார், விசாகன். அவருக்கு வேத், நான் ரெண்டுபேரும் ஒண்ணுதான்” என செளந்தர்யா சொல்ல, “எனக்கு வேத் ஒவ்வொரு முறையும் ‘அப்பா’ன்னு கூப்பிடும்போது, அவ்ளோ சந்தோஷமா இருக்கும்!” என நெகிழ்கிறார், விசாகன்.
“சோஷியல் மீடியாவுல ரஜினி ரசிகர்கள் இந்தக் கல்யாணத்தைக் கொண்டாடினாங்க. அதேசமயம், எதிர்மறை விமர்சனங்களும் வந்தது. அதை எதிர்பார்த்தீங்களா?”
“பெண்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு திருமணம் தோல்வியில முடிஞ்சதுன்னா, அதுக்குப் பிறகு வாழ்க்கையில அவங்களுக்கு எதுவும் இல்லைங்கிற எண்ணம் எல்லோர்கிட்டேயும் இருக்கு. நான் ஏன் சோஷியல் மீடியாவுல என் சந்தோஷத் தருணங்களைப் பகிர்ந்துக்கிறேன்னா, ஒரு பாசிட்டிவ் எனர்ஜிக்காகத்தான். எங்க திருமணப் புகைப்படங்களைப் பார்க்கிற சிங்கிள் மதர், சிங்கிள் ஃபாதர் யாராவது சந்தோஷப்படுவாங்க. அவங்க வாழ்க்கையிலும் இதுமாதிரி ஒரு நல்ல விஷயம் திரும்ப நடக்கும்னு நம்பிக்கை வரும். அதனால, நெகட்டிவ் விஷயங்களை நான் எடுத்துக்கலை. பாசிட்டிவ் விஷயங்கள் போதும்”
அழுத்தமாய்ச் சொல்கிறார் சௌந்தர்யா. ஆமோதிக்கிறார் விசாகன்.
- நன்றி : விகடன்
வீடியோ : சௌந்தர்யா விசாகன் இதய திறந்த பேட்டி
|