தளபதி
ஒரு பாறையைப் பிளந்து எடுத்து சிகப்பு மையில் துவைத்து போட்ட எழுத்துக்கள். அது தான் தளபதி படத்தின் டைட்டில் பாண்ட். 91ல் படம் வந்த புதிதில் அந்த எழுத்து வடிவம் மிகவும் பிரபலம். அதே வடிவில் தன் பெயரையோ தனக்கு மிகவும் பிடித்தவரின் பெயரையோ எழுதிப் பார்க்காத ரஜினி ரசிகர்கள் என் அக்கம் பக்கத்தில் இல்லவே இல்லை.
தளபதி படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன், எப்படி எல்லாம் பார்த்து இருப்பேன் என்ற கணக்கு தற்சமயம் என் கைவசம் இல்லாவிட்டாலும் மனத்தில் படத்தைப் பற்றிய எண்ணற்ற ஞாபகங்கள் இன்னும் சுற்றி கொண்டுதானிருக்கின்றன.
இதோ சமீபத்தில் ஒரு பின்னந்தி மாலைப் பொழுதில் வானம் விடாது மழையைக் கொட்டிக்கொண்டிருந்தது, அப்போது ஜன்னல் ஓரம் நின்று வானம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு பின்னால் சின்னத்திரையில் எதோ ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் தளபதி படம் ஓடத் துவங்கி இருந்தது. சத்தம் கேட்டு மழை மோகம் கலைந்து திரும்பினேன்.
"கூஊ...."ரொம்ப பழக்கமான அந்த ரயில் சத்தம் வழக்கம் போல என்னை ஈர்த்தது
போகியின் புகை சூழ் பின்னணியில் ஒரு பதின்ம வயது சிறுமியின் வேதனைப் பொதிந்த முகத்தோடு படம் துவங்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்த முகத்தை கொஞ்சம் கவனித்துப் பார்த்தேன், அதற்கு பிறகு அந்த முகத்தை எந்த தமிழ் சினிமாவிலும் பார்த்த நியாபகம் இல்லை.
சமுதாயத்தின் சீற்றத்தை எதிர்கொள்ள பயந்து பெற்ற தாயே புறக்கணிக்க நாயகனின் கடும் வாழ்க்கை பயணம் ஊட்டி மலை ரயில் பாதையில் துவங்குகிறது.
அந்த ரயிலின் பெருங்கூவல் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நம்மைக் கட்டி போட்டு வைக்க போகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை.
இசை சாரலாய் வீச, ஜானகி அம்மாவின் கனிவான குரலில் ஒலித்த "சின்னத் தாயவள் தந்த ராசாவே... முள்ளில் தோன்றிய ரோஸாவே " பாடல் வரிகள் என் காதுவழி பாய்ந்து இதயத்தில் ஒரு இன்பமான வலியைத் தர, என் மனம் காலசக்கரத்தில் பின்னோக்கி பயணித்தது.
தளபதியை முதலில் பார்த்த அந்த அனுபவம் தேடி போய் நின்றது மனம்.
மங்கலாய் மனத்திரையில் படத்தின் காட்சிகள் ஓட ஆரம்பித்து இருந்தன.
கொண்டை போட்டு கையில் வாளோடு கருப்பு உடையில் சாமுராயாக ரஜினியின் கட்டவுட்டை அண்ணாந்து பார்த்து வாய் பிளந்த ஞாபகம்
நன்றாகவே இருந்தது.
"ஏய் ரஜினி குடுமி வச்சிருக்கார்டா, செம்ம ஸ்டைல் மச்சான் "
"அது குடுமி இல்ல கொண்டைடா "
பட்டிமன்றம் நடத்தி முடித்திருப்போம்
ரஜினி, மம்முட்டி (அப்போ கேரளா சூப்பர் ஸ்டார் அவர் தான், இப்போ அவர் பையனே வந்தாச்சு) மணிரத்னம், இளையராஜா, கைகோர்த்த முதல் படம் (இது வரை கடைசி படமும் அது தான்).
அன்றும் சரி, இன்றும் சரி, நான் தளபதி படம் பார்க்க ஒரே காரணம் ரஜினி மட்டும் தான். பார்க்க பார்க்க வேறு பல காரணங்களும் வந்து சேர்ந்துக் கொண்டன என்பது தனிக் கதை.
கால் சட்டையில் இருந்து முழுக்கால் சட்டைக்கு மாறிய வயது இருக்கும் எனக்கு, நான் தளபதியை முதலில் பார்த்த போது!
"ரஜினி மம்முட்டி இரண்டு பேரும் நண்பர்கள்..
ரஜினி கர்ணன் மாதிரி..
மம்முட்டி துரியோதனன் மாதிரி..
அவங்களுக்கு ஒரு எதிரி..
செம்ம சண்டை..
எவ்வளவோ சுட்டும் ரஜினிக்கு மட்டும் ஒண்ணும் ஆகல தெரியுமா?..
ஆனா பாவம் மம்முட்டி மட்டும் செத்துடுறாரு...
அப்புறம் ரஜினி எல்லாரையும் செம்ம அடி அடிச்சு டொப் டொப்ன்னு சுட்டு போட்டுட்டு போயிட்டே இருக்கார்..
ரஜினி எல்லாம் சாவடிக்கவே முடியாது தெரியுமில்ல..."
முதன் முதலில் நான் தளபதி பார்த்துட்டு வந்து, அந்த கதையை என் பள்ளிக்கூட நட்பு வட்டத்தில் எல்லாரையும் என்னை சுத்தி உக்கார வச்சு சொன்னது இப்படி தான்.
அதை தொடாந்து வந்த நாட்களில்
"ஜாங் ஜக்கு ஜாங் ஜக்கு ஜாங் ஜாக் ஜாங்.." என்ற ராகம் தான் எனக்கு பிடித்த ஹம்மிங் ரிதம், அதை எவ்வளவு நாட்களுக்கு விடாமல் பாடிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை ஆனாலும் பாடியது நன்றாக ஞாபகம் உள்ளது.
"ராக்கம்மா கையைத் தட்டு..." என்று பாடி வாயிலேயே வயலின் வாசித்து திரிந்ததை இன்றும் என்னையும் என் விடலைப் பருவத்தையும் அறிந்தவர்கள் மறக்கவில்லை என்பது அவர்களை சந்திக்கும் போது புரிகிறது.
திருப்பி தற்காலத்துக்கு வரும் போது ரஜினியும் மம்முட்டியும் திரையில் வந்தாச்சு, அவங்களுக்குள்ளே காரசாரமா மோதல் ஓடிட்டு இருந்துச்சு.
மம்முட்டி அமைதியான தோற்றத்தில் அழுத்தமான கோவத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார், ரஜினி பட்டாசாய் பொரிந்து கொண்டிருந்தார்.
மனம் மீண்டும் பின்னோக்கி றெக்கை கட்டியது, இம்முறை பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடைப்பட்ட காலம்.
"கேபிளிலில் தளபதி போட்டான்டா செம்மயா சண்டை சீன் எல்லாம் எடுத்துருக்காண்டா, அந்த முதல் ரெய்ன் பைட் பின்னிட்டான்டா, படம்டா...
நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு....?
பிரண்ட்ஷிப்ன்னா தேவா - சூர்யா மாதிரி இருக்கனும்டா...!
நட்புன்னா சூர்யா என்ன வேணும்ன்னா பண்ணுறான் பாத்தியா? அப்படி இருக்கணும்டா...
நண்பன் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து சிலாகித்து கொண்டிருக்கும் போது,
"அந்த கலெக்டர்..எதோ சாமி ஆச்சே பேரு செம்ம கலர்ல" நண்பனின் அக்கா எதோ சொல்ல
"அக்கா. எங்க சூர்யா கருப்பு தங்கம் உரசாதீங்க, தலைவர் கெத்து தெரியுமில்லே"
குரலில் தீயைக் கொளுத்தி சொல்லிட்டு தலையை கலைச்சு விட்டுட்டு, அப்படியே பக்கவாட்டில் திரும்பி வானம் பார்த்தப்போ மனசுல சூர்யா ரஜினியாவே மாறி போய்ட்டேன்.
மீண்டும் நினைவுக்கு வரும் போது, நண்பன் சூர்யாவுக்காக சாருஹாசனிடம் மம்முட்டி பெண் கேட்டு கொண்டிருந்தார்.
கல்லாய் ஹாசன் கல்லின் மீது விழுந்து வெடிக்கும் வெடியாய் மம்முட்டி, அவரை சமாதானம் செய்யும் மனைவி கீதா.
படம் ஓட ஓட, மனம் இன்னொரு முறை தளபதி பார்த்த காலத்திற்கு சென்றது
அது நான் கல்லூரியை முடிக்கும் தருணம், வெட்டியாய் இருந்த ஒரு ஞாயிறு பொழுதில் நண்பனின் விடுதி அறையில் மடிக்கணினியில் ஆழ்ந்து இருந்தோம்.
"தளபதி பாப்போமா, ரொம்ப நாள் ஆச்சுல்ல? "
"இந்தா இந்த Folder இல் இருக்கும் போடு, பார்ப்போம்" நண்பனும் வந்து சேர்ந்துகொண்டான்.
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி...."
எனக்குள் இருந்த எஸ்பிபி பெருங்குரல் எடுத்து கதறிய பொழுது அது.
அப்படியே அந்த சாமுராய் வீரன் தோற்றத்தில் தலைவரைப் பார்த்து மனம் நெகிழ்ந்து நின்றது.
"நான் உன்னை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்..."
என்று உள்ளுக்குள் குரல் குழைந்து கண்கள் மயங்கியது, சற்றே கலங்கியது.
அப்போது எனக்கே எனக்கான சுந்தரி மூடிய கண்ணுக்குள் வந்து போன அந்த நிமிடங்களை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா!!!.
சுந்தரிகள் கண்ணால் சொல்லும் சேதி கிடைக்க பெற்றவர்கள் பெரும் ஆசி பெற்றவர்கள் என்று எண்ண வைத்த விசேஷ தருணம் அது.
கல்லூரியின் கடைசி வருடத்தில் கடந்து வந்த அனுபவம் அது. கடந்து போவது தானே வாழ்க்கை, இப்போது எனக்கு நானே சொல்லி கொள்கிறேன்.
இப்போ திரையில், தனக்காக பெண் கேட்க சென்ற தேவா அவமானப்படுத்தப் பட்டதை நினைத்து சூர்யா பொருமும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பார்த்து கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு முறை மனம் பின்னால் போனது.
வேலை கிடைத்தப் பின், அலுவலக பயணம் காரணமாக எதோ ஒரு வெளியூர் ஓட்டல் அறையில் தனித்து இருந்த சமயம். தனியாக தளபதி பார்க்க நேர்ந்தது.
சூர்யாவின் அடி தடிகளை இறுக்கமாய் கடந்தேன்.
அம்மாவுக்காக உருகும் சூர்யாவின் ஏக்கம் என்னைக் கொள்ளை கொண்டது. முன் நாட்களில் பார்க்கும் போதெல்லாம் இது அழுகை காட்சி என்று அவசரமாய் கடந்து இருக்கிறேன்.
ஆற்றாமை, இயலாமை, இழப்பு, தவிப்பு என சூர்யாவின் உணர்வுகள் குவிந்து எழுந்து அமிழ்ந்து ஆழ்ந்து நம்மிலும் பரவும்,.
அந்த நடிப்பு...
ப்பா.... ரஜினியால் மட்டும் முடிந்த மாயாஜாலம்.
தன் வீட்டு மாடியில் இருந்து தன் தாயைத் தேடி சூர்யா கொடுக்கும் அந்த குரல் இருக்கே !
என்னப் பெத்த அம்மா நீ எங்கே இருக்க?
சூர்யாவின் விட்டேத்தி இயல்புக்குள் புதைந்து கிடக்கும் வலியை நமக்கு சொல்லும் காட்சியும் வசனமும் ஆகும்.
தாயை சந்திக்கும் காட்சிகளில் சூர்யா காட்டும் உருக்கம்.
ஒரு எரிமலை கோபத்தின் மீது பனி பொழிவென அந்த தாய் பாசம் படரும் காட்சி.
அதில் கவித்துவம் மிளிரும்.
சூர்யா வீதிகளில் வளர்ந்தாலும் அவனுக்குள் தாய் பாச ஏக்கம் நிறைந்து இருப்பதை அழுத்தமாய் உணர்த்தும் காட்சிகள் இவை.
அன்று தளபதி தொடர்ந்து இரு முறை ஓடியது நினைவுக்கு வந்தது.
சுப்புவோடு பூத்த காதல் பூ உதிர்ந்து பட்ட மரமாய் நிற்பான் சூர்யா.அந்த மரத்தில் தேவாவின் நட்பு துளிர்த்து செழிப்பது சிறப்பான நகர்வாக இருக்கும். நட்பு போல் ஒரு உறவு உண்டா என்ற கேள்வியும், அதற்கான பதிலில் மகிழ்ச்சியும் பிறந்தது.
பெண்ணுக்கும் ஆணுக்கும் காதல் வழி காமம் தோன்றுவது இயல்பு.
இங்கு காவல் வழி ஒரு மெல்லிய காதல் மலர்கிறது.
அது அன்பென்னும் அக்கறையில் ஜொலிக்கிறது.
"நான் உங்களுக்கு காவல்.. இந்த வீட்டுக்கு காவல்..."
சூர்யா தன்னால் விழைந்த தீங்குக்கு தன்னைத் தானே கடிந்து கொள்ளும் அந்தக் காட்சி அற்புதம்.
ரத்தம் தெறிக்கும் தளபதி என்னும் யுத்தப்பூமியை உற்று பார்த்தால் அதில் நமக்கு தெரிவது அன்பின் வெள்ளைப்பூக்கள் தான்
நினைவு கலைந்து பார்த்தால் இங்கே படம் உச்ச நிலையை நெருங்கி இருந்தது
கலெக்டரை சந்திக்க செல்லும் சூர்யா.
கலெக்டர் வீட்டில் தன் காதலியை கலெக்டரின் மனைவியாகக் காண நேர்ந்து அந்த கணத்தை கண்ணியம் கலையாத ஆண்மையோடு எதிர்கொள்ளும் சூர்யாவின் கெத்து இருக்கே, அட அட..
கண்ணியம் மிளிர அவள் நலம் விசாரிக்கும் இடம் இருக்கே, ஒரு ஆண்மகன் இப்படித் தாண்டா இருக்கணும் என்று மனம் உள்ளுக்குள் சொன்னது.
தளபதி படம் முடியும் போது, சூடா ஒரு டீ போட்டு எடுத்தப்படி எடுத்தபடி வீட்டம்மா வந்து பக்கம் அமர்ந்தார்
டீயை சுவைத்தபடி வீட்டுக்கார அம்மாவோடு பேசிட்டு இருந்தேன். திரையில் காதல் பத்தி பேச்சு வந்துச்சு.
"காதல் எல்லாம் உங்காளு டிபார்ட்மென்ட் கிடையாதே !"
"ஆங்... என்ன நீ இப்படி சொல்லிட்டே?"
ஸ்டைல் சண்டை இது தானே ரஜினி
அதெல்லாம் இல்லை, காதலும் ரஜினி தான், அடிச்சுக்க முடியாது
ரஜினி படத்தில் காதலா? புதுக்கவிதையா?
இல்ல தளபதி
தளபதியா, அது வெட்டு குத்து படமாச்சே
கைகள் you tube இல் விரைந்து போய் அந்த காட்சியில் நின்றது நிற்க,
"ஆமா, நானா உம் பின்னாடி வந்தேன், நானா பிடிச்சி இருக்குன்னு சொன்னேன்...
போ... போ... போ.. ஓ.."
ரஜினி சூரியனின் அந்தி வெட்கம் படிந்த வானத்தின் முன் நின்று ஆவேசமும் ஆற்றாமையும் பிணைய...
குரல் கிட்டத்தட்ட உடைய..
பாசத்துக்குரிய மொட்டை ராசா பின்னணியில் உயிரைக் கட்டி இழுக்க, சூர்யாவாக ரஜினி தன் காதலி போனத் திசையை ஏக்கமும் துக்கமும் சேர்த்து அழுத்த அதை ஒருவாறு விழுங்கி கண்ணோரம் பொங்க காத்திருக்கும் ஈரம் அடக்கி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க...
காதலிக்காதவனுக்கும் மனத்தில் எதாவது ஒரு மூலையில் ஒரு காதல் வலி வந்து போவது நிச்சயம்.
காதலி என்னமோ போய்ட்டா, ஆனா ஆயுசுக்கும் வச்சு சுமக்கிறதுக்கு பாரமான காதலை மொத்தமா கொடுத்துட்டு போய்ட்டான்னு ரஜினி கண்ணும் முகமும் ஒரே திருப்பலில் சொல்லும் பாருங்க, அந்த காதல் தலைவனின் கனமான நடிப்பில் நான் இப்போ வரை கொஞ்சம் கலங்கி தான் போவேன்
காதல் தளபதி
"அட அட, ரொம்பத்தான் ரசனை!!!!"
வீட்ல என்னை சூரிய பார்வை பாக்க, நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கிட்டேன்.
"நல்ல நண்பன், நாலு சொந்தம், கண்ணுக்கு பின்னாடி நெஞ்சு கனக்க சில ஞாபகங்கள், இதெல்லாம் அமைந்தால் அதுவே சிறந்த வாழ்க்கை ஆகிடும் - தளபதி இப்போ பார்த்தப் போது தோன்றியது"
தளபதி - அது நமக்கு எப்போவுமே ரஜினி தான் !
- தேவ்
|