''ரஜினியை சந்திக்க முஸ்லீம் மதகுருமார்கள் திட்டம்! ஓ.கே. சொன்ன ரஜினி!'' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் வெடித்த வன்முறை சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தை கண்டித்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ’’மத்திய உள்துறை மற்றும் உளவுத்துறையின் தோல்வியே வன்முறைக்கு காரணம். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும். சில அரசியல் கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. போராட்டத்தை எப்படி நடத்தினாலும் சட்டத்தை திரும்ப பெற மாட்டார்கள். டெல்லி போராட்டம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது‘’ என்று ஆவேசமாக பேட்டியளித்திருந்தார்.
ரஜினியின் இத்தகைய கருத்துக்கள் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மத்தியில் நீண்ட விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த சூழலில், முஸ்லீம் சமூகம் மற்றும் ஒட்டுமொத்த ஜமாத்துகளுக்கும் தலைமை பீடம் என கருதப்படும் ‘தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை‘ யின் பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில் ரஜினியின் கருத்துக்கள் அதிர்ப்தியளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டிவிட்டு, ‘’போராட்டக்காரர்களின் கருத்துக்களை அவர் கேட்க வேண்டும். ஜனநாயகரீதியாக போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்கிற பழியிலிருந்து அவர் விடுபட வேண்டும். அவரை சந்தித்து விளக்கமளிக்க உலமா சபை திட்டமிட்டுள்ளது‘’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், உலமா சபையின் துணை தலைவர் இலியாஸ், ரஜினியை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ‘’உங்கள் கடிதத்தைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. உங்களின் கருத்துக்கள் நியாயமானதுதான்’’ என அவர் சொல்ல, ‘’மத குருமார்கள் பலரும் உங்களை சந்தித்து பேச வேண்டும் என விரும்புகிறோம்‘’ என்று சொல்ல, ’’நிச்சயம் சந்திப்போம்’’ என்று உறுதி தந்திருந்தார் ரஜினி.
இந்த விஷயத்தைத்தான் முதன் முதலில் நாம் வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, ''சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. இந்த மூன்றிலும் சொல்லப்பட்ட ஷரத்துக்களின் பாதிப்புகள் எந்த வகையில் வரும் என சொல்லியுள்ளனர். ஏற்கனவே சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவைப் பற்றி படித்து தெரிந்திருந்த ரஜினிகாந்த், அதில் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். ரஜினிகாந்த்தின் கேள்விகளுக்கு மதகுருமார்கள் உரிய பதிலை விளக்கமாக எடுத்துரைத்திருக்கின்றனர். அப்போது ரஜினி, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களது போராட்டங்கள், உங்களுடைய உணர்வுகள் நியாயமானதாக இருக்கிறது. நீங்கள் சொல்லக்கூடிய விசயங்களை நான் ஏற்கிறேன் எனவும் கூறியிருக்கிறார் ரஜினி.
அப்போது சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவைகளை விளக்கி நாங்கள் கருத்தரங்கம், கூட்டம், நிகழ்ச்சி என தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படி நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என மதகுருமார்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு ரஜினி, ஏற்பாடு பண்ணுங்கள் நிச்சயம் கலந்து கொள்கிறேன் என்று மதகுருமார்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ஜமாஅத்துல் உலமா சபையின் மதகுருமார்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், ''ரஜினிகாந்த் ஜமாஅத்துல் உலமாவின் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா முழுக்க சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சம்மந்தமாக முஸ்லீம்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் எழுந்துள்ள அச்சத்தின் நியாயங்களை அவருக்கு விளக்கிச் சொன்னபோது அது சரிதான். அதில் நியாயம் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அத்தோடு இந்த அச்சத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் தங்களைப் போன்ற மதகுருமார்கள் தீர்மானித்து சொன்னால், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் அகன்று அமைதி ஏற்பட தன்னால் இயன்ற அனைத்தையும் உங்களோடு சேர்ந்து செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் பாதுகாவலராக நான் இருப்பேன் என்பதை மதகுருமார்களுக்கு உணர்த்திருக்கிறார் ரஜினி. இந்த நிலையில் ரஜினிகாந்தின் ஆதரவு வேண்டும் என்பதால் விரைவில் கருத்தரங்கத்தையோ அல்லது பொதுக்கூட்டத்தையோ நடத்த உலமா சபை திட்டமிட்டிருககிறது. அதற்கான நடவடிக்கையில் மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளனர். உறுதி அளித்தப்படி மதகுருமார்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்து கொண்டால் பாஜகவுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும்!
ரஜினி ஒரு Legend : அவருக்கு CAA பற்றி சொல்லி கொடுக்க வேண்டியதில்லை -
இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர்
இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டதாக கூறினார். CAA குறித்து வெறுப்பு பேச்சை பேசி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இது பற்றி பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ரஜினிகாந்திற்கு சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் ஒரு லெஜெண்ட் என, இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
|