கேப்டன் பெயர் பொருத்தமானது : விஜயகாந்த்திற்கு தலைவர் ரஜினிகாந்த் அஞ்சலி
(Friday, 29th December 2023)
உடல்நலக் குறைவால் நேற்று காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு, தலைவர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றிருந்த தலைவர் ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவுச் செய்தி அறிந்ததும், உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இன்று காலை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு, நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களுக்கும் ஆறுதல் கூறினார்.
தீவுத்திடலில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, வெளியே வந்த ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‛‛நடிகர் விஜயகாந்த்தை இழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு முறை விஜயகாந்த் உடன் பழகினால் அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். நட்புக்கு இலக்கணமானவர். கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது. சினிமாகாரர்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது. நான் மருத்துவமனையில் இருந்தபோது தொந்தரவாக இருந்த கூட்டத்தை 5 நிமிடத்தில் விரட்டி அடித்தவர் விஜயகாந்த். மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கியபோது களத்தில் இறங்கி என்னை பூ போல் அங்கிருந்து கூட்டி வந்தவர் விஜயகாந்த். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் யார் என்றால் அது விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம்.
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் : ‛‛அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மனவுறுதி கொண்ட மனிதர் அவர். எப்படியாவது உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு என அனைவரும் நினைத்தோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவர் சோர்வாக இருந்ததை பார்த்தபோது, எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது, வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்திருக்கிறோம்'' என்றார்.