வழக்கமான ரஜினி படங்களிலிருந்து மாறுபட்ட படமாக வேட்டையன் வெளியாகியுள்ளது.
வேட்டையன்
துஷ்ரா கொடூரமாகக் கொல்லப்படுகிறார், அவரைக் கொலை செய்த நபரைத் தவறான தகவலின் அடிப்படையில் ரஜினி என்கவுண்டர் செய்து விடுகிறார் ஆனால், அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வருகிறது.
அப்படியென்றால் குற்றவாளி யார்? என்று விசாரிக்க ஆரம்பிக்கும் போது மிகப்பெரிய தலை சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் என்ன ஆனது? உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டாரா? என்கவுன்ட்டர் செய்யப்பட்டாரா? என்பதே வேட்டையன்
ஞானவேல்
ஞானவேல் நேர்முகத்தில் ரஜினியை முள்ளும் மலரும் நடிப்பு போல இதில் காண்பிக்க முயற்சித்து இருக்கிறேன், அவர் ஒரு சிறந்த நடிகர் என்று கூறி இருந்தார்.
ஆனால், வித்தியாசமான நடிப்பாக எதையும் காணவில்லை, வழக்கமான ரஜினி மட்டுமே எனக்குத்தெரிந்தார் குறிப்பாக கபாலியில் இருந்த நடிப்பு கூட இல்லை.
ஞானவேல் கூறிய ஒன்று மிகச் சரியாக வேலை செய்துள்ளது.
அதாவது கருத்தைக் கூறுகிறேன் என்று முழுக்க அவர் பாணியில் எடுத்தால், படமும் ஓடாது, சொல்ல வந்த கருத்தும் மக்களையும் சென்றடையாது என்றார்.
இதை அற்புதமாகக் கையாண்டு கூறியபடியே கருத்தான படத்தில், ரஜினி மாஸையும் நுழைத்து அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்துள்ளார்.
திரைக்கதை
சமீப காலங்களில் இது போன்று முயன்ற படங்கள் ஒன்றே ஒன்று கபாலி.
அதாவது மாஸ் மற்றும் கதை கூறிய விதம் ஆனால், மாஸ் குறைந்து மற்றவை அதிகரித்ததால் ரசிகர்களிடையே விமர்சனங்களுக்குள்ளானது.
ஆனால், இதில் இரண்டுமே சரிவிகிதத்தில் கலந்து படத்தின் ஜீவன் தொலைந்து போகாமல் அசத்தலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமான கருத்தை, வறட்சியாகக் கொண்டு சென்று விடாமல் இயக்கியதே இப்படத்தின் வெற்றி. இதே போன்று அவர் கூறிய கதாபாத்திரங்கள் தேர்வு.
கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்களின் தேர்வு எவ்வளவு முக்கியம் என்பதற்கு அமிதாப், ஃபகத், துஷாரா, ரித்விகா, ராணா சிறந்த எடுத்துக்காட்டு.
அமிதாப் அவர்களின் அனுபவம் படத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை தெரிகிறது. அலட்டிக்கொள்ளாமல், பதட்டப்படாமல் அப்படியொரு இயல்பாக நடித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதியாக வரும் அமிதாப்பை தவிர்த்து வேறு ஒருவரை இக்கதாபாத்திரத்தில் நினைத்தே பார்க்க முடியவில்லை.
எதனால் மக்கள் என்கவுன்ட்டரை விரும்புகிறார்கள் என்பதற்கும், என்ன நடந்தால் தேவையில்லை என்பதையும் நீதிமன்றத்தில் அமிதாப் கூறுவது செம லாஜிக்.
இப்படம் முழுக்க அமிதாப் குருவாகவும், தலைவர் சிஷ்யனாகவுமே தெரிந்தார்கள், இறுதிக்காட்சி அதை உறுதிப்படுத்தியது.
33 வருடங்களுக்குப் பிறகு இணைந்ததின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தியுள்ளார்கள்.
ஃபகத்
அதே போல் எதனால் இரு மாதங்கள் காத்திருந்து ஃபகத்தை ஞானவேல் நடிக்க வைத்தார் என்பதும் புரிந்து கொள்ள முடிந்தது.
இவரைத்தவிர வேறு யாரும் நடித்து இருந்தால், ஒன்று அக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்து இருக்கும் அல்லது சராசரி கதாபாத்திரமாக மாறி இருக்கும்.
தர்பார் படத்தில் தலைவர் கூட யோகி பாபு இருப்பது போல.
இன்ஃபார்மராக இருக்கும் ஃபகத்துக்கு அதிகாரிகள் அளவுக்கு முக்கியத்துவம், சுதந்திரம் கொடுப்பது மட்டுமே நெருடல்.
மீண்டும் ஒருமுறை ரஜினியும் ஃபகத்தும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதே இவர்களின் காம்போ வெற்றி.
ரித்திகா சிங் துஷாரா
ரித்திகா சிங் கதாபாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு யார் இவ்வளவு பொருத்தமாக இருப்பார்கள்?! எனக்கு யாரும் நினைவுக்கு வரவில்லை.
பெண் காவல் அதிகாரிக்கு மிகப்பொருத்தமாக உள்ளார், படம் முழுக்க ரஜினியுடன் பயணிக்கிறார்.
ரித்திகா திரை வாழ்க்கையில் அற்புதமாக அமைந்தது இரு படங்கள். ஒன்று இறுதிச்சுற்று இரண்டாவது Oh My கடவுளே. மூன்றாவதாக வேட்டையன்.
ஒரு ஆரம்ப நிலை அதிகாரியாக துறுதுறுவென்று ஒவ்வொன்றையும் செய்வது சிறப்பு. இவருடன் வரும் இன்னொரு நபரும் மிகை நடிப்பு செய்யாமல் நன்றாக நடித்துள்ளார்.
துஷாரா தவிர்த்து வேறொருவர் நடித்து இருந்தாலும், இதே உணர்வைக் கொண்டு வந்து இருக்க முடியும். இருப்பினும் துஷாரா பொருத்தமாக உள்ளார்.
மஞ்சு வாரியர், ரக்ஷன் ஆகியோருக்கு முக்கியத்துவம் இல்லை. அபிராமி, கிஷோர் ஓகே.
Why?
படத்திலேயே எரிச்சல் படுத்தியது என்னவென்றால், துஷாரா பாதிக்கப்படும் காட்சியைக் கிட்டத்தட்ட 7 முறை வெவ்வேறு தருணங்களில் காண்பிக்கிறார்கள்.
முதலிலேயே எல்லாமே தெரிந்து விட்டது. அப்படியிருக்கையில் ஒவ்வொரு முறையும் விளக்கமாகக் காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சுருக்கமாகக் காண்பித்துச் சொல்ல வந்ததை சொல்லக்கூடாதா? இதை ஏன் ஞானவேல் உணரவில்லை? அவர் திரும்பத்திரும்ப படத்தைப் பார்த்து இருக்கும் போது ஏன் அவருக்குத் தோன்றவில்லை?
ரஜினியை ராணா கையாளும் விதமும், அவரது கெத்தை தொடர்வதும் பின்னர் அதற்கு ரஜினி வழியில் பதிலடி கொடுப்பதும் வரவேற்பு மிகுந்த காட்சிகள்.
மாஸ் தேவையென்றாலும் ஜெயிலர் போலச் சண்டைக்காட்சிகளை நறுக்கென்று அமைத்து இருந்தால் இன்னும் மாஸாக இருக்கும்.
நீட் எதிர்ப்பு பரப்புரை படமாக மாறி விடுமோ என்ற சந்தேகம் இருந்தது ஆனால், பொதுவான நுழைவுத்தேர்வு, பயிற்சி வகுப்புகள் என்று சென்றது பரவாயில்லை.
ஒளிப்பதிவு பின்னணி இசை கலை
ஒளிப்பதிவு மிகச்சிறப்பு, அதே போல கலை. எது செட்டிங்ஸ் எது உண்மையென்றே தெரியவில்லை.
படத்தின் கதைக்குப் பின்னணி இசை அவசியம் ஆனால், கதையின் ஜீவனைச் சிதைக்காமல் இருக்க வேண்டும். அப்பணியை அனிருத் மிகச்சிறப்பாக வேட்டையனில் செய்துள்ளார்.
ஜெயிலர் போல மனதில் நிற்கும் தனித்த இசையாக எதுவும் தோன்றவில்லை ஆனால், படத்தின் எண்ணவோட்டத்திலேயே பின்னணி இசையும் பயணிக்கிறது.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கலாம்.
இரண்டு முறை பார்த்து விட்டேன், முதல் முறையை விட இரண்டாவது முறை பார்க்கும் போது பல தெளிவாகப் புரிந்தது, கூடுதலாக ரசிக்க முடிந்தது.
ஞானவேலின் வேட்டையன் குறி தப்பவில்லை, நினைத்ததைச் சாதித்துள்ளார்.
தலைவரின் திரை வாழ்க்கையில் அவரின் மதிப்பைக் கூட்டிய படங்களில் ஒன்றாக வேட்டையன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- கிரி
|