கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி கல கல பேச்சு
(Wednesday, 28th August 2024)
“கலைஞர் எனும் தாய்” புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டு விழா மேடையில் சிறப்புரையாற்றினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் முதல் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் அந்நூலை பெற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இந்த நிகழ்ச்சியில் வந்தால் பேசி தான் ஆக வேண்டும். நான் ஏதேனும் தப்பாக பேசினால் மன்னித்து விடுங்கள். எந்த கட்சித் தலைவருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை. அரசியல்வாதிகள் எந்த கஷ்டங்கள் இருந்தாலும் பொது வாழ்வில் காட்ட முடியாது. எதைப் பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்று முதலமைச்சர்கள் கவனம் செலுத்துவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுமையும், அவருடைய உழைப்பும் தான் காரணம். பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்களை வழிநடத்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் பழைய மாணவர்களை வழிநடத்துவது மிகவும் பிரச்னையாக இருக்கும். அதுபோல தான் தமிழ்நாட்டிலும் அதிகப்படியான பழைய மாணவர்கள் உள்ளார்கள். அவர்கள் சாதாரணமான பழைய மாணவர்கள் இல்லை, அசாத்திய மாணவர்கள்.
இந்த மாணவர்கள் ரேங்க் எடுத்துவிட்டு அடுத்த பள்ளிக்கு போக மாட்டோம் என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் தான் துரைமுருகன். இந்த நூலினை பெற்றுக்கொள்வது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த நூலில் அருமையான தலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தை நான் படிக்கும் பொழுது என்னுடைய தாயை நினைத்து கண்ணீர் விட்டேன்.
கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால் போன்று உள்ளது. ஏ.வ.வேலுக்கு எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாக செய்கிறார். இந்த புத்தகத்தை எல்லாரும் வாங்கி படிக்க வேண்டும். சமூகத்திற்காக மிகவும் போராடி பாடுபட்டவர் கருணாநிதி. அவரை பற்றி இன்னும் பல்வேறு புத்தகங்கள் எழுதலாம். திரைப்படம் கூட எடுக்கலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது.
தற்போது யாரும் செய்தியாளர்களை சந்திக்க முன் வருவதில்லை. கருணாநிதியின் பேச்சு வீணை போல் ஒரே நேராக இருக்கும். அவர் எப்பொழுதுமே சந்தோசமாக விசாரிப்பார். முரசொலி மாறன் மருத்துவமனையில் இருக்கும்போது கருணாநிதி சோகமாக என்னிடம் பேசினார். ஏதேனும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.