ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
இது ஏற்கனவே அலசி ஆராய்ந்த விஷயம். ரஜினியை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்த அறிக்கை ஆச்சர்யத்தை தராது. என்ன நடக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஒருவருக்கு ஒரு விஷயத்தில் ஆர்வமிருந்திருந்தால் அதை எப்போதே செய்திருக்க முடியும். இதை நாம் இரண்டு விதமாக எடுத்துக் கொள்ள முடியும்.
முதல் பார்வை
என்னுடைய கணிப்பின்படி ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்திருக்கலாம். அவரது பாப்புலாரிட்டியை தவறாகபயன்படுத்தி அவரை சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்திருக்கலாம் அதன் விளைவாக அரசியல் வாடை வீசும் டயலாக்கு வந்திருக்கலாம்.
ரஜினியின் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறார் என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரியும். அப்படி படங்களில் நடிப்பதை நிறுத்திவிடும் பட்சத்தில் ரஜினியையும் அவரது படங்களையும் இதுவரை ஆராதித்தவர்களுக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லாத நிலை வரும்.
இதற்கு ரஜினியை மட்டுமே குறை சொல்ல முடியும். அவருடைய தவறுகள் அவருக்கு தெரிந்திருக்கலாம். அதை திருத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். ஆனாலும் இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவரால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. அவரது ரசிகர்களில் பாதி பேர் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் இன்னும் பாதிபேர் அரசியலுக்கு வரத்தேவையில்லை என்கிற நிலையில் உறுதியான முடிவெடுக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு எப்படியிருக்கும் என்பதை அவரால் கணிக்க முடியவில்லை. இது நிச்சயம் Catch 22 நிலைமைதான்.
ரஜினி நிலைமையில் நாம் இருந்தாலும் அதே நிலைமைதான். ரஜினி அளவுக்கு மிதமிஞ்சிய புகழும், செல்வாக்கும் நமக்கிருந்தால் அதுவே நமக்கெதிராய் போய் நம்மை தவறுகள் செய்ய வைக்கும். நாம் எல்லோரும் மனிதப்பிறவிகளே. எல்லாருக்கும் இருக்கும் பலவீனங்கள் உண்டு, ரஜினி உட்பட.
இந்த நிலையில் ரஜினியை கட்டாயப்படுத்தி முடிவெடுக்கச் சொல்வது சரியான முறையல்ல. அவருக்கு அரசியலில் விருப்பம் இருந்தால், என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று சரியான நோக்கங்கள் இருந்தால் அதை அவர் நிச்சயம் செய்து முடிப்பார். அப்போது நம்முடைய ஆதரவு அவருககுத் தேவைப்படும்.
மாற்று பார்வை பார்வை
ரஜினிக்கு உண்மையில் அரசியலில் ஆர்வமுண்டு என்று வைத்துக்கொள்வோம். சரியான நேரத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். கட்டாயப்படுத்தி வந்தே ஆகவேண்டும் என்று யாராவது வற்புறுத்தினால் என்ன நடக்கும்? நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யாராவது அப்படி உங்களை கட்டாயப்படுத்தினால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? தன்னிலை மறந்து கோபப்படுவீர்களா? நிச்சயம் அதைத்தான் செய்வீர்கள்.
ரஜினியின் கடந்த கால வாழ்க்கை பார்க்கும்போது அதிலிருந்து உங்களால் ஒரு விஷயத்தை தெளிவாக தெரியும். பரபரப்பான சினிமா வாழ்க்கை பல நேரங்களில் அவரை தன்னிலை மறந்து கோபப்பட வைத்திருக்கிறது. கோபத்தை மறக்க அவரை கோப்பையை நாடினார். பின்னர் ஆன்மீகத்தையும் முயற்சி செய்தார். இதில் எந்த தவறும் இல்லை. ரஜினி போன்றவர்களால் வெளியிலிருந்து வரும் வற்புறுத்தல்கள், கட்டாயப்படுத்தல் இவை எதற்கும் இணங்கிப் போக முடியாது. ஆகவே, கெடுபிடிகளிலிருந்து வெளியே வந்து அமைதியாக யோசித்து முடிவெடுக்க அவர் நினைக்கலாம்.
அவர் பொறுமையாக முடிவெடுக்க இடம் கொடுத்து சரியான முடிவெடுக்க நாம்தான் அனுமதிக்க வேண்டும். இங்கே கட்டாயப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது.
முடிவுரை
ரஜினியின் முடிவு அவரது பாப்புலாரிட்டியை பாதிக்குமா? நிச்சயமாக இல்லை. ரஜினிக்கு ரசிகன் உருவாவது எப்படி? அவர் அரசியலுக்கு வருவார் அதன் மூலம் நமக்கு ஏதாவது லாபம் கிடைக்கும் என்று நினைத்துதான் ஒரு ரசிகன் உருவாகிறானா? அதுவே உண்மையென்றால் எத்தனை காலம் அவனால் ரசிகனாக இருக்க முடியும்? ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைக்கும் ரசிகன் நிச்சயம் மைனாரிட்டிதான். பெரும்பாலான ரசிகர்கள் அவரை அரசியலில் எதிர்பார்ப்பதில்லை.
ரஜினி ரசிகர்களை அடிக்கடி சந்திக்காதது அவரது பெரிய குறை. ரசிகர்களை சரியான இடைவெளியில் அவர் சந்தித்திருக்கலாம்.
இதெல்லாம் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. உங்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது லட்சியங்கள் இருந்தால் வேறு யாரையாவது அரசியலில் எதிர்பார்க்கலாம். யாரையாவது உங்களுக்கு தலைமை ஏற்கச் சொல்லலாம். ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரஜினியால் என்கிற தனிநபரால் இந்த அரசியல் அமைப்பை மாற்றி அமைக்க முடியாது.
அதுவொரு கஷ்டமான வேலை. ஒரு இயக்கமாக நடத்தப்படவேண்டியது. அனைவருக்கும் கல்வியிலிருந்து அது ஆரம்பமாக வேண்டியது. படித்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டியிருக்கும். குறைந்தபட்ச அதிகபட்ச வயது வித்தியாசமெல்லாம் அரசியலில் அவசியம். இந்திய அரசியலமைப்பு சட்டடத்தை மாற்றாமல் எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரிதாக மாற்றத்தை கொண்டு வரமுடியாது.
ஆக ரஜினி அரசியலுக்கு வருவதால் என்ன பெரிய மாற்றங்கள் வந்துவிடப்போகிறது? எதுவுமில்லை. மற்றவர்களைப் போல் இன்னொரு அரசியல்வாதியாக மட்டுமே ரஜினியை நாம் பார்க்க முடியும். இது ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துபவர்களக்கும் தெரியும். தெரிந்தும் அவர்கள் வற்புறுத்துவதறகு காரணம் அவர்களது சுயநலமே அன்றி வேறில்லை.
சுயநலத்தையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு மனசாட்சியை தொட்டு கேட்டுப்பாருங்கள். ரசிகர்கள் என்கிற போர்வையில் ரஜினியை சங்கடத்தில் ஆழ்த்துபவர்களின் கபட நாடகம் புரியும். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. ஆனால் இங்கே சொல்லப்பட்ட கருத்துக்களின் பின்னாலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள இதுதான் சரியான சமயம்.
யார் என்னை குறை சொன்னாலும் நான் கவலைப்படப்போவதில்லை. அவர் ஒரு நல்ல ஜனரஞ்சக கலைஞர் அதையும் தாண்டி ஒரு மாபெரும் மனிதர். அந்த மனிதருக்கு நான் என்றும் நிரந்தர ரசிகன். அதை நினைத்து எப்போதும் பெருமைப்படுவேன்.
அன்புடன்
ராஜ் நாராயணன்.