ரஜினி… இந்த மந்திரச் சொல்லை நண்பர்கள் உச்சரித்தாலும் செய்தி. எதிரிகள் விமர்சித்தாலும் செய்தி. அப்படியொரு மகிமை அவருக்கு!
அரசியல், பொது இயக்கம் இரண்டுக்குமே இப்போதைக்கு இடமில்லை என உறுதியாகக் கூறிவிட்ட ரஜினி, எந்திரன் படத்துக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
அதற்கு மேல் இந்த அறிக்கைக்கு கோனார் தமிழுரை கணக்காக விளக்கம் சொல்லாமல் (ஏற்கெனவே நிறைய விளக்கங்கள் வந்துவிட்டன… திருக்குறளுக்கு எழுதப்பட்டது போல!!), ரஜினியின் நண்பர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என களத்தில் நான் சேகரித்தவற்றைத் தருகிறேன்.
இவர்களில் பெரும்பாலானோர் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தவர்கள்.
சு.திருநாவுக்கரசர் எம்.பி.:
அந்த அறிக்கையை நானும் பார்த்தேன். நான் அவரை அரசியலுக்கு அழைத்தது அரசியலை கவுரவப்படுத்தவே. இது அவருக்கும் தெரியும். நான் முன்பே சொன்ன மாதிரி எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னும் காலமிருக்கிறது, பார்க்கலாம்.
சோ எஸ்.ராமசாமி:
ரஜினி முடிவில் எந்தத் தவறும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறுவதற்காக அவர் விட்ட அறிக்கையல்ல இது. தன் பெயரை தவறாகப் பயன்படுத்தும் சிலருக்காக விடுத்த எச்சரிக்கை.
அவர் பெயரில் கட்சி என்றால் அதை அவர்தான் அறிவிக்க வேண்டும். போவோர் வருவோரெல்லாம் ரஜினி படம் போட்டு, அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தால், அவர்கள் தவறுக்கு இவரல்லவா பொறுப்பேற்க வேண்டும். மேலும், அது எந்த வகையிலும் பலமாகவும் இருக்காது. எல்லா விதத்திலும் பலவீனப்பட்டு நிற்கும். இப்படி ஒரு கட்சி தேவையா?
மற்றபடி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த அறிக்கை என்று தெரிகிறது.
நடிகர் சரத்குமார்:
அவர் விட்ட அறிக்கைக்கு நான் என்ன கருத்து சொல்வது? அவர் தெளிவாகத்தான் இருக்கிறார், அவரது ரசிகர்கள்தான் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. உள்ளுக்குள் அரசியல் ஆசை இன்னும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மற்றபடி, தன் நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார்.
தொல் திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்):
அரசியலுக்கு வருவதும் வராமல் போவதும் அவர் விருப்பம். இதை யாரும் வற்புறுத்தவோ திணிக்கவோ முடியாது. மற்றபடி நான் அவரை வாருங்கள் என்று அழைத்து ஏமாறவுமில்லை, வராமல் போனதற்காக சந்தோஷப்படவுமில்லை!
தங்கர் பச்சான் (இயக்குநர்)
முதல்ல இப்படியெல்லாம் கூப்பிடறது, கட்டாயப்படுத்தறதே தப்பு சார். மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னா அதை அரசியலுக்கு வந்து பதவியைப் பிடிச்சுதான் பண்ண வேண்டியதில்லை.
இந்த நாட்டில் எவ்வளவோ நல்ல அரசியல்வாதிகள் களத்துக்கு வந்த பின்னரும் போதிய ஆதரவின்றி மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, வராத ஒருவரைப் பிடித்துக் கொண்டு இந்தபாடு படுத்துகிறார்களே… அவரை விடுங்க. ஒரு நடிகரா அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்பவும் சொல்றேன், அண்ணாமலை மாதிரி நல்ல படத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை!
ஜெ.செல்வகுமார் (முகவர், எல்ஐசி)
அரசியலுக்கு வருவேன் இல்ல வரல… இதுல ஒண்ணை தெளிவா சொல்லிவிட வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு, வந்தா தடுக்க முடியாதுன்னா… யார் தடுக்க முயற்சி பண்றாங்க. எல்லாருமே இவர் வரட்டும், என செய்வார்னு பார்ப்போம்னுதானே காத்துக்கிட்டிருக்காங்க….
இவரைப் போன்றவர்கள்தான் சார் அரசியலுக்கு வரணும். அப்படி வந்தா கண்டிப்பா நிச்சயம் விஜய்காந்த் மாதிரி கேவல அரசியல் செய்யமாட்டார். என்னைக் கேட்டா, இந்த விஜயகாந்துக்கு ஓட்டுப் போடறதை விட திமுகவுக்கு ஓட்டுப் போட்டுடுவேன். ரஜினி போன்றவர்கள் வந்தாதான் விழிப்புணர்வு ஏற்படும்!
ஜார்ஜ் (மெக்கானிக், வள்ளுவர் கோட்டம் சாலை):
எனக்கு அவர் மேல இருந்த நம்பிக்கை போய்டுச்சு. ஆனா நல்ல மனுசன். தேர்தல்ல நின்னா நிறைய பேரைத் திட்ட வேண்டி வருமேன்னு பயப்படறாரான்னு தெரியல.
தாமரை (தையல் கலை நிபுணர், திருவல்லிக்கேணி):
இந்த மனுசன் இன்னும் எத்தனை நாளைக்குதான் நம்பிய மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கப் போகிறாரோ? நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு தெளிவா சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே. இப்படி குழப்பமா பதில் சொல்லிக்கிட்டே இருந்தா வெறுப்பதான் மிஞ்சும்.
களப்பணி உதவி: கோபி, ராஜி
- Vinojasan
|