ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினி ரசிகர்களால், ரஜினியை வைத்து, ரஜினித்தனமாக எடுக்கப்பட்டதே இந்தப் பேட்ட.
ரஜினித்தனம்... இன்னும் சொல்லப்போனால் ரஜினிமேனியா... இது தான் பேட்ட படத்தின் One Line...
பேட்ட என்ற பெயருக்குப் பதிலாக ரஜினியிஸம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.
பைரவி, பில்லா போன்ற படங்கள் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. பாட்ஷா, படையப்பா போன்றவை அவரைத் தலைவர் ஆக்கியது.
எந்திரன் , 2 .0 போன்றவை அவரை இமயம் ஆக்கியது. ஆனால் பேட்ட ரஜினியை "ரஜினி" ஆக்கியது . ஆம் ரஜினியிஸம் எனும் சித்தாந்தத்தை உணர்த்தியது.
மேல் கூறிய எந்தப் படத்துடனும் பேட்டயை அடக்க முடியாது. காரணம் இது தலைவருக்கு 'One of the 165 Films" தான்.
ஆனால் தலைவரின் ரசிகர்களுக்கு இது ரஜினியிஸத்தின் "One and Only Film" நாம் ஏன் ரஜினியின் ரசிகராக இருக்கிறோம் என்பதைப் பாடம் எடுத்து புரிய வைக்காமல் அனுபவிக்கவிட்டு புரிய வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள்.
"நான் வீழ்வேன் என நினைத்தாயோ!" எனும் வசனத்தைப் புரட்சி படங்களான காலா மற்றும் கபாலியில் பேசி இருந்தால் கூட இவ்வளவு மாஸாக இருந்து இருக்குமா எனத் தெரியவில்லை.
"பாக்க தானே போற இந்தக் காளியோட ஆட்டத்தை" என்ற தலைவர் நேற்று வெறியாட்டம் ஆடி விட்டார். அத்தனை நட்சத்திரங்கள் படத்தில் தோன்றினாலும் உச்ச நட்சத்திரத்தின் அனலில் அவைகள் மின்னுவதற்குக் கூட அவகாசம் இல்லை.
தலைவரின் படத்தில் ஓப்பனிங் சீனுக்கு ரசிகர்களிடம் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அதற்கு ஏற்றார் போலக் கிட்ட தட்ட எட்டு நிமிடங்கள் ஆனது தலைவரின் முகத்தை முழுமையாகக் காட்டுவதற்கு.
சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டுக்கே நாங்கள் போட்ட ஆட்டத்தில் களைப்படைந்து விட்டோம்.
அப்புறம் இப்போ காட்டுவார் அப்போ காட்டுவார் எனத் தலைவரின் முழு உருவத்தைத் தேடுகிறது கண்கள்.
ஆனாலும் "இருங்கடா, பொறுமையா ரசிங்க" என்றபடி அணு அணுவாகத் தலைவரின் உருவத்தைக் கொண்டு வருகிறார் கார்த்திக்.... போதும் கார்த்தி, கண் கலங்க வெச்சிடீங்க.
ஒரு வழியாக டைட்டில் கார்ட் முடிஞ்சி தலைவரின் முகத்தைப் பார்த்தாச்சு. சரி, படத்தைப் பாப்போம் என உட்கார்ந்தால் ஒரு நிமிடம் கூட அமைதியாக உட்கார விடவில்லை.
கண் அடிப்பது, முடியை சிலுப்பி விடுவது, கேட்டை திறப்பது, கண்ணாடியை சுழற்றுவது என ஒவ்வொரு சீனிலும், ஏன் ஒவ்வொரு நொடியும் நம்மை மறந்து தலைவரை ரசிக்க வைத்தார்.
பாடல் வரிகளின் போது கூட நாம் பட வெளியீட்டிற்கு முன்னர் ரசித்த வரிகள் திரையில் வரும் போது, தலைவரை ரசிக்கும் கோணத்தில் காட்டி ஒரு பரவச நிலையை அடைய வைத்து விட்டார்.
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை நினைவூட்டியது.
"ரெண்டு மொட்டை ஒரு மீசை" எனும் போது ராஜாதி ராஜா, "கண்ணா, அண்ணா" எனும் இடத்தில் தர்மத்தின் தலைவன், "அண்ணனுக்கு ஜே" முரட்டு காளை என 165 படமும் நினைவுக்கு வந்து விட்டது.
ஏதோ ஒரு நாள் ஓரிடத்தில் தலைவர் கையைப் பின்னாடி கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்ததை நாங்கள் ரசித்தோம் என்பதற்காகவே அதையும் ஒரு சீனாக வைத்ததெல்லாம் என்னவென்று சொல்ல !!
அது போல ஒரு சின்ன அரசியல் பஞ்ச், அனுபவத்தில் சொல்கிறேன் சிகெரட் வேண்டாம், ஒரு குட்டி கதை போன்ற விஷயங்களைச் சேர்த்து , நாம் திரையில் தோன்றும் 'Actor" ரஜினியை மட்டும் ரசிக்கவில்லை, ரஜினி என்றாலே ரசிப்போம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.
வெளிச்சம் என்பதும் நினைவுக்கு வருகிறது. உண்மையில் இந்தப் படத்தின் தூண் DOP (Director of Photography) திரு அவர்கள் தான்.
ஒரு ரசிகனாக நமது கனவை சுமந்த கார்த்திக் அவர்களுக்கு அந்தக் கனவை செயல் படுத்தும் இடத்தில் இருந்தார் திரு அவர்கள்.
எந்த ஆங்கிளில் எல்லாம் தலைவரை காண்பித்தால் மாஸ் கிளாஸ் ரசனை என அனைத்து உணர்வும் வருமோ, அச்சுப் பிசகாமல் தந்தார்.
அந்தக் குளிர் பிரதேசத்தின் குளிரையும் எழிலையும் கண் முன்னே நிறுத்திய அவர், கதை வட நாட்டில் நடக்கும் போது ரத்தம் தெறிக்கும் அந்தச் சூட்டையும் நமக்குக் கடத்துகிறார்.
படத்தில் தேவை இல்லாத காட்சிகள் பல உள்ளன. ஆனாலும் சில ரஜினி மொமெண்ட்ஸை காட்ட அந்தச் சீன் தேவை படுவதால், கதையோடு தொடர்பு படுத்திக் காட்சிகள் வைத்ததெல்லாம்...... அட போ பா கார்த்திப் புகழ வார்த்தையே கிடைக்கல.
ஒபெனிங்கில் பழைய பாடலை போட்டு வின்டேஜ் தலைவர், அங்கங்கே பழைய பாடல்களைப் போட்டு நம்மையும் டைம் ட்ராவல் செய்ய வைக்கிறார்.
மொத்தத்தில் பேட்ட எப்படி ?
என்னைப் போன்ற 90's கிட்ஸ் பாட்ஷா படையப்பாவை தியேட்டரில் பார்த்ததில்லை. இது எங்களுக்கு ஒரு பொக்கிஷம். ரிப்பீட் ஆடியன்ஸாக இருப்போம்.
80's 90's Adult தலைவர் ரசிகர்களுக்கு இது ஒரு டைம் ட்ராவல் படம். அனைவருக்கும் இருபது வயது குறையும். அவர்களும் ரிப்பீட் ஆடியன்ஸ் தான்.
அப்போ பேமிலி ஆடியன்ஸ்.... ??
இதென்ன கேள்வி ? ரஜினி படம் என்றாலே ரிப்பீட் ஆடியன்ஸ் தான்..
சரி எனக்கு அடுத்த ஷோவிற்கு டைம் ஆச்சு.. மீண்டும் சந்திப்போம்... Once Again Thanks A Lot Karthik Subbaraj Sir !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|