வெளியானது தலைவர் 169 அதிகாரபூர்வ அறிவிப்பு..கலக்கல் ப்ரோமோவில் அசத்தல் ரஜினி..!
(Thursday, 10th February 2022)
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட, அண்ணாத்த என 3 படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். இந்த மூன்று படங்களுமே பெரும் வெற்றி பெற்று, ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றி படங்களாக அமைந்தன. இப்போது 4வது முறையாக ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அவர் தனது நான்காவது படத்தை ரஜினி நடிப்பில் இயக்குகிறார். இதன் மூலம் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் கூட்டணி முதல்முறையாக இந்த படம் மூலம் இணைகிறது. பீஸ்ட் படத்துக்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த பட அறிவிப்பு, தற்போது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
டிவிட்டரில் ‘தலைவர் 169’ என இந்த படத்திற்கான ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த படத்துக்கான அறிவிப்பை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நான்காவது முறையாக ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படம் தொடர்பான அடுத்தடுத்து அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.