வழக்கமான வார இறுதியில் இல்லாமல் வார நாளான செவ்வாயன்று இசை வெளியீட்டு விழா நடந்ததால் ஒரு நண்பர் மூலமாக அனுமதிச்சீட்டு பெற்று, எனது வேலைகளை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டேன். பிடித்த நாவலான ‘பொன்னியின் செல்வன்’ ஒரு காரணம் என்றால் தலைவர் கலந்து கொள்ள இருந்ததுதான் முக்கிய காரணம். தூரத்தில் இருந்தாவது அவரைப் பார்த்து அவரது பேச்சை ரசிக்க வேண்டும் என்கிற ஆவல். அதுவும் அவருக்குப் பிடித்தமான ‘பொன்னியின் செல்வன்’. பட்டையைக் கிளப்புவார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகவில்லை. இரண்டு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்து நள்ளிரவு வரை நீண்ட விழா முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் பசி, களைப்பு மறந்து உற்சாகமாக வெளியில் வரக் காரணமாக இருந்தார் தலைவர். கண்டு களித்த அந்த விழாவிலிருந்து சில பகிர்வுகள்.
* அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரமான மாலை ஆறு மணிக்கெல்லாம் இருக்கையில் அமர்ந்து விட்டோம். அந்த நேரத்தில் விழா அரங்கில் இருந்த விஐபிக்கள் மணிரத்னம், சுகாசினி மற்றும் அதிதி மட்டுமே. விழா ஆரம்பித்தது எட்டு மணிக்கு. சொதப்பலுக்கு பெயர் போன லைகா நிறுவனம் அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டது.
* தொகுப்பாளர்கள் ராஜ்மோகனும் டிடியும் பெரிதாக எந்த முன் தயாரிப்பும் செய்யாமல் ஆழமில்லாத வெற்று வார்த்தைகளால் தங்கள் பேச்சையும் நேரத்தையும் நிரப்பிக் கொண்டிருந்தனர். ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்’ குறளை டிடி தப்பு தப்பாக சொல்லியதும் எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தை மேடைக்கு அழைத்து விட்டு ‘சொல்லுங்க ஆனந்த் சார்’ என்று ராஜ்மோகன் உளறியதும் ஏதாவது பதட்டத்தாலா அல்லது அலட்சியத்தாலா என்று தெரியவில்லை.
* டிடி பல கலைஞர்களிடமும் ‘சுபாஷ்கரன் பத்தி சொல்லுங்க’ என்று வற்புறுத்தி பேசவைத்துக் கொண்டிருந்தார். சுபாஷ்கரனோ ‘எப்படா முடிப்பாங்க… போய் தூங்கலாம்’ என்பது போல கண்கள் சிவந்து போய் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பயணக்களைப்பு போல.
* தலைவர் உள்ளே வரும்போது பெரும் ஆரவாரம் கை தட்டல். மணிரத்னத்தையும் ரஹ்மானையும் ஆத்மார்த்தமாகத் தழுவிக் கொண்டு தட்டிக்கொடுத்தார். ஐஷ்வர்யா ராய், விக்ரம் ஆகியோர் அவர் காலைத் தொட்டு தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.
* கருப்பு முழுக்கை டிஷர்ட்டில் ஸ்லிம்மாக ஜம்மென்று இருந்தார் தலைவர். பேசும்போது ஆரம்பத்தில் குரல் சற்று ஒத்துழைக்கவில்லை. ‘எனக்கு கொஞ்சம் கோல்டா இருக்கு’ என்று அதற்கான காரணத்தை சொன்னார்.
* தலைவர், கமலுக்கு அடுத்து அரங்கில் ஆரவாரம் அள்ளியது நடிகர் விக்ரமுக்குதான். தலைவருக்கு ஆனது போலவே அவர் மேடை ஏறியபோதும் ஓரிரு நிமிடங்கள் பேசவே முடியவில்லை. அதேபோல தலைவர் தனது தளபதி அனுபவத்தைப் பகிரும்போது விக்ரம் ரசிகர்களுக்கு இணையாக விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். கூடவே ஐஸ்வர்யா ராய்க்கு மொழிபெயர்ப்பும் செய்து கொண்டிருந்தார்.
* மிகத் தாமதமாக விழா நடந்து கொண்டிருக்கும் போது வந்தார் கமல். வழக்கம் போல ஒரு ராஜஸ்தான் உடையை அணிந்து வந்து ‘தனியாக’ தெரிந்தார்.
* கமல் வந்து முன் வரிசையில் இருக்கும் பலரிடமும் கை கொடுத்தாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் ஷங்கரை திரும்பிக்கூட பார்க்க வில்லை. ஷங்கரும் அப்படியே. வெகுநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.
* தரணி, ராதாமோகன், சத்யஜோதி தியாகராஜன் என்று பலரும் மணிரத்னத்தைப் பலவாறு புகழ்ந்தார்கள். இவற்றில் ‘எங்களுக்கு முதல் பான் இந்தியா படம் ரோஜா, முதல் பிரம்மாண்டமான பாடல் காட்டுக்குயிலே’ என்று ஷங்கர் ஒரு சிஷ்யனைப் போல புகழ்ந்ததுதான் ஹைலைட்.
* ஷங்கர் மேடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு அப்டேட் கொடுத்து விட்டு வந்த பின்னர்தான் கமல் அவர் பக்கம் திரும்பி ஏதோ பேசினார்.
* மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியின் முப்பதாவது வருடம் என்று மேடையில் கொண்டாடினார்கள். இசைக்குழுவினர் இந்தக் கூட்டணியின் 90s மற்றும் 2Ks பாடல்களை மெட்லி போல இசைத்தார்கள். நன்றாக இருந்தாலும் விழா நீள இதுவும் ஒரு காரணம்.
* கவனம் பெற்ற பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனை மேடையேற்றி புகழ்ந்தார் ரஹ்மான். இளங்கோ கிருஷ்ணன் மிக சிக்கனமாகப் பேசி இறங்கி விட்டார்.
* மேடையில் படத்தின் ஆறு பாடல்களையும் பாடினார்கள். நேரத்தைக் கருதி இரண்டு மூன்றோடு நிறுத்தி இருக்கலாம்.
* என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் ரஹ்மான் ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடியதைப் பார்க்க பரவசமாக இருந்தது. ‘காண கண்கோடி வேண்டும்’ என்பார்களே… அப்படி…
* டிடியின் மொக்கை கேள்விகளிலிருந்து தப்பிக்கவோ என்னவோ ஐஸ்வர்யா ராய் நீளமாகப் பேசி எல்லோரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லி முடித்தார். அப்போதும் டிடி ‘Ma’am, we have some questions’ என்று இழுக்க, ‘you still want to ask?’ என்று அதிர்ச்சி ஆனார்.
* மூத்த நடிகை ஜெயசித்ரா முன்வரிசையில் அமர்ந்திருந்தாலும் யாரும் அவ்வளவு கவனிக்க வில்லை. தலைவராவது ஒரு வார்த்தை பேசினார். கமல் அது கூட இல்லை.
* பார்த்திபன் - ஜெயராம் கூட்டணியின் ரகளை தாறுமாறு. படப்பிடிப்பு அனுபவங்களை சொல்லுமாறு பார்த்திபன் ஜெயராமிடம் கேட்க அவர் மணிரத்னம், ஜெயம் ரவி, பிரபு படப்பிடிப்பில் பேசியதை அவர்கள் போலவே மிமிக்ரி செய்து பேசி கலக்கினார். ‘சூட்டிங் ஆரம்பிச்சா இந்த மணி சாப்பிட விடமாட்டான்பா’ என பிரபு அதிகாலை மூன்று மணிக்கு சாப்பாடு பொட்டலத்தோடு நின்றதை சொல்லும்போது அரங்கம் வெடித்துச் சிரித்தது.
* விக்ரம், கார்த்தி எல்லாம் ஹோம் வொர்க் செய்து வந்து பேசினார்கள். இது ஒரு Historical fiction என்று விளக்கினார் கார்த்தி. சோழர் கல்வெட்டுகளில் இருந்த சில தகவல்களைப் பகிந்தார் விக்ரம்.
* ஒரு வழியாக ரஜினி-கமல் மேடையேறும்போது மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கு முன்னால் இருவரையும் வைத்து ஒரு காணொலி திரையிட்டார்கள். அட்டகாசமான எடிட்டிங். கைதட்டல் அள்ளியது.
* ஆச்சரியமாக குறைவாகப் பேசினார் கமல். அப்போதும் அங்கங்கே சுயபுராணம் எட்டிப்பார்த்தது.
இனி தலைவர் பேசியதிலிருந்து…
* தலைவர் ஆரம்பிக்கும்பொழுது ‘பொன்னியின் செல்வனை’ சாத்தியப்படுத்தியதற்கு சுபாஷ்கரனை வெகுவாகப் புகழ்ந்தார்.
* மணிரத்னம் born with silver spoon என்றாலும் சாதாரண நட்சத்திரங்களை வைத்து வெற்றிப்படங்ளைக் கொடுத்து தன்னை நிரூபித்த பின்னரே எங்கள் பக்கம் (ரஜினி-கமல்) வந்தார் என்று பாராட்டினார்.
* ‘நான் ரெண்டு மூணு விஷயம் ஷேர் பண்ணனும்’ என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த கமலிடம் ‘நீ உக்காந்துக்கறியாப்பா’ என்று கேட்டது அவரது பரிவைக் காட்டியது. கமல் மறுத்துவிட்டு நின்று கொண்டே இருந்தார்.
* ‘குமுதம் கேள்வி-பதில்ல வாசகர் ஒருவர் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு யார் பொருத்தமா இருப்பாங்கன்னு கேட்டதுக்கு ஜெயலலிதா ரஜினிகாந்த்னு ஒரே வார்த்தையில பதில் சொல்லியிருந்தாங்க’ என்று சொல்லிவிட்டு ஹாஹாஹா என சிரித்துக்கொண்டே கமலின் தோளைத் தட்டியது அக்மார்க் தலைவர் சேட்டை. அதன்பிறகுதான் பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்தேன் என்றார்.
* ‘நான் பெரிய பழுவேட்டரையரா நடிக்கிறேன்னு சொன்னேன். வேற யாராவதா இருந்திருந்தா உடனே சரின்னு சொல்லியிருப்பாங்க.. மணிரத்னம் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதான் மணிரத்னம்’ என்று அப்ளாஸ் அள்ளினார்.
* தனது ‘தளபதி’ அனுபவத்தை சொல்ல சொல்ல அரங்கமே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. ‘நம்மகிட்ட stock expressions இருக்கும். இந்த சீனா இந்த எக்ஸ்பிரஷன்னு போயிட்டே இருப்பேன். இவர் என்னன்னா ஃபீல் பண்ணனும்றார்’ என்று மணியைக் கலாய்த்தார். கமலுக்கு போன் செய்து யோசனை கேட்டு அதன்படி செய்தேன் என்று சொல்லிவிட்டு மேடையிலேயே ‘தேங்க்ஸ் கமல்’ என்று சொல்ல மணிரத்னம் குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தார்.
* பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மன் அறிமுகமாகும் இடத்தை விளக்கும்பொழுது அப்படி ஒரு ஆர்வம் தலைவரிடம். ‘அப்படியே வந்தியத்தேவன் மார்பில காலை வச்சு அழுத்தி அந்த ஓலையை உருவி தீப்பந்தத்தை பக்கத்துல வச்சு ஓலையைப் பிரிக்கறாரு… அந்த நெருப்பு வெளிச்சத்துல அறிமுகமாகிறாரு அருள்மொழிவர்மன்’ என்று தலைவர் மடைதிறந்த வெள்ளமாக பக்கங்களை விவரிக்கும்போது ஒரு சிறந்த கதைசொல்லியும் ஒரு தேர்ந்த இயக்குனரும் வெளிப்பட்டனர்.
* மொத்தத்தில் தமிழர், சோழர்கள் என்று எதையோ பேசி ஜல்லியடிக்காமல் மணிரத்னத்தையும் பொன்னியின் செல்வன் நாவலையும் முதன்மைப் படுத்தி தனது பேச்சின் மூலமாக படத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டி வந்த வேலையை சரியாகச் செய்தார் சூப்பர்ஸ்டார்.
இருவரும் பேசி முடித்ததும் முன்னோட்டம் திரையிடப்பட்டது. அட்டகாசமாக இருந்தது. எனது கைபேசி சார்ஜ் இழந்து அணைந்து விட்டதால் பாதி விழாவிற்கு மேல் அமைதியாக அமர்ந்து விழாவைக் கவனிக்க முடிந்தது. அருமையான அனுபவம் ஆனால் நள்ளிரவு வரை விழித்திருந்து நேரு ஸ்டேடியம்-வண்டலூர் வரை பயணம் செய்ததில இன்னமும் களைப்பு தீரவில்லை. அந்த நள்ளிரவில் வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்ட நல்ல நட்புகளுக்கு நன்றி.
- சூர்யா குமார்
|