சிவாஜி படம் திட்டமிடு ஆரம்பித்த நாள் தொடங்கி வெள்ளித்திரைக்கு வந்தது வரையிலான விஷயங்களை கிழக்கு பதிப்பகத்துடன் இணைந்து எ,ஏவி,எம் நிறுவனம் ஒரு புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது.
சிவாஜி படமாக்கப்பட்ட விஷயங்களை சுவராசியத்தோடு விளக்கும் இந்தப்புத்தகத்தின் முக்கியமான ஹைலைட் சூப்பர் ஸ்டாரின் பேட்டிதான்.
சிவாஜி படம் ஆரம்பமானது முதல் வெளியாகி வெற்றி பெறும் வரை எந்தவொரு பத்திரிக்கையிலும் சூப்பர் ஸ்டாரின் பேட்டி வெளியானது இல்லை. முதல் முறையாக சிவாஜியின் வெற்றி குறித்தும் வெற்றிக்கு பின்னணியாக இருந்தவர்கள் குறித்தும் சூப்பர் ஸ்டார் தனது அனுபவங்களை விவரித்துள்ளார்.
சிவாஜியில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்ப உதவியாளர்கள் வரை படத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் பேட்டி, சூப்பர் ஸ்டார் உடனான அனுபவங்களை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள். புத்தகத்தை எழுதியிருப்பது ராணி மைந்தன். தமிழகத்தின் முன்னணி புத்தக வெளியீட்டு நிறுவனமான கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள சூப்பர் ஸ்டாரின் அலுவலகத்தில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஏ,வி,எம் சரவணன், எஸ்.பி. முத்துராமன முன்னிலையில் புத்தகத்தின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் வெளியிட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி பெற்றுக்கொண்டார். இன்று முதல் சென்னைப் புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பக ஸ்டாலில் புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும்.
சூப்பர் ஸ்டாருடன் படத்தின் தயாரிப்பாளர் ஏவி. எம். சரவணன், அவரது மகன் எம்.எஸ். குகன், கிழக்கு பதிப்பக பதிவாளர் பத்ரி சேஷாத்ரி, நூலாசிரியர் ராணி மைந்தன், இணை தயாரிப்பாளர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் உள்ளனர்.
ஏ,வி,எம் நிறுவனத்தின் வாயிலாக அதிகாரப் பூர்வமாக வந்திருப்பதால் புத்தகம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் உருவான விதம் பற்றி புத்தக வடிவில் வெளிவருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
|