இடைவிடாத
படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்
1979-ம் ஆண்டு,
ரஜினிக்கு சோதனையான ஆண்டு. இரவு - பகல் பாராமல் தொடர்ந்து படங்களில்
நடித்ததால், அவர் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டன.
உடல் சோர்வை போக்கிக்கொள்ள மது அருந்தினார்; ஜரிதா பீடா, ஜாதிக்காய்
ஆகியவற்றை சாப்பிட்டார்.
நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் எதைக் கண்டாலும் எரிச்சல்.
யாரைக்கண்டாலும் கோபம்.
மயக்கம்
1979 மார்ச் முதல் தேதி. பஞ்சு அருணாசலத்தின் "ஆறிலிருந்து
அறுபதுவரை'' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது, மயக்கம்
போட்டு விழுந்தார்.
உடனடியாக டாக்டர் வந்து பரிசோதித்தார். "ஓய்வு - ஒழிச்சல் இன்றி,
தூக்கம் இன்றி நடித்ததால் ஏற்பட்ட மயக்கம் இது. நன்றாக ஓய்வு
எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று டாக்டர் கூறினார்.
டாக்டர் சொன்னதற்காக ஒரே ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
மறுநாள் "அன்னை ஓர் ஆலயம்'' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
பத்திரிகையாளர் புகார்
ரஜினிகாந்தைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து தாக்கி எழுதி
வந்தார்.
ஒரு நாள் ரஜினி காரில் சென்றபோது, அந்த பத்திரிகையாளர் முன்னால்
போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தார். `ஏன் என்னை சதா தாக்கி
எழுதுகிறீர்கள்?' என்று கேட்பதற்காக, காரை அவர் அருகே
ஓட்டிச்சென்றார்.
தன் மீது காரை மோதுவதற்கு ரஜினி வருவதாக, பத்திரிகையாளர் நினைத்து,
போலீசில் புகார் செய்தார். ரஜினி கைது செய்யப்பட்டு ஜாமீனில்
விடுதலை செய்யப்பட்டதாக, மார்ச் 8-ந்தேதி பத்திரிகைகளில் செய்தி
வெளிவந்தது.
சிவாஜியின் 200-வது பட விழா
சிவாஜிகணேசனின் 200-வது பட விழா, மார்ச் 10-ந்தேதி மதுரையில்
நடந்தது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். சிவாஜியின்
காலைத்தொட்டு வணங்கி, வாழ்த்து பெற்றார்.
இதன்பின் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி, 13-3-1979 அன்று பத்திரிகைகளில்
கீழ்க்கண்டவாறு செய்திகள் வெளியாயின:-
விமான நிலையத்தில் பரபரப்பு
"மதுரையில் சிவாஜிகணேசனின் 200-வது பட விழாவில் கலந்து கொண்ட
நடிகர்-நடிகைகள் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் சென்றனர்.
அவர்களுடன் சென்ற ரஜினிகாந்த், விமான நிலையத்தில் உள்ள ஒரு
கடைக்குச் சென்றார். "சோடா வேண்டும்'' என்று கேட்டார்.
`சோடா தீர்ந்துவிட்டது' என்று கடை ஊழியர் கூறினார். உடனே
ரஜினிகாந்த், அவர் கன்னத்தில் அறைந்தார்.
பிறகு, தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி,
அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினார். இதைப் பார்த்தவர்கள் பயந்து
போய் ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவத்தின் விளைவாக, ரஜினியை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள்
மறுத்தனர். மற்ற நடிகர்கள் வந்து, "நாங்கள் அவரை பத்திரமாக
அழைத்துப் போகிறோம்'' என்று உறுதிமொழி கொடுத்ததால், அனுமதித்தனர்.
விமானத்தில், நடிகர் எம்.என்.நம்பியார், ரஜினிகாந்தின் அருகில்
உட்கார்ந்து, அவரை பத்திரமாக அழைத்து வந்தார்.
சென்னை வந்து சேர்ந்த பிறகும், ரஜினிகாந்த் இயல்பான நிலைக்கு
வரவில்லை. இதனால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள விஜயா நர்சிங்
ஹோமில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகியோரும்
சென்றனர்.
சிகிச்சை
ரஜினிகாந்துக்கு, டாக்டர் செரியன் சிகிச்சை அளித்தார்.
பிறகு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின் ரஜினி அயர்ந்து
தூங்கினார்.
நிருபர்களிடம் மேஜர் சுந்தரராஜன் கூறியதாவது:-
"கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் சரியான தூக்கமின்றி, இரவு பகலாக
நடித்து வருகிறார்.
கடந்த ஒரு வருட காலமாகவே அவருக்கு ஓய்வு இல்லை என்றும், தூக்கம்
இல்லாததால் அவர் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்டு
இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
அவர் 72 மணி நேரம் (3 நாள்) தொடர்ந்து தூங்க வேண்டும் என்றும், அதன்
பிறகுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள்
கூறியிருக்கிறார்கள்.''
இவ்வாறு மேஜர் சுந்தரராஜன் கூறியதாக, பத்திரிகைகளில் வெளியான
செய்திகள் கூறின.
>>> Part 25
|