சென்னை: உலகெங்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் வெளியீட்டுத் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சென்சார் குழு படம் பார்த்து யு சான்றிதழ் வழங்கியது. மாலை 6.30 மணிக்கு தணிக்கை முடிந்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
அதன்படி வரும் ஜூலை 22-ம் தேதி உலகெங்கும் இந்தப் படம் வெளியாகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 5000க்கும் மேற்பட்ட அரங்குகள் இந்தப் படத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு திருவிழாவுக்கும் மேலாக கபாலி வெளியீட்டைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். இணையத்தில் எங்கும் கபாலிமயமாகவே உள்ளது.
ரிலீசுக்கு 10 நாட்கள் உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளைக் கைப்பற்ற ரசிகர்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.
கபாலி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் உருவாக்கிய டிசைன் இது!
கபாலியின் முதல் பிரிமியர் எனும் சிறப்புக் காட்சி பிரான்சில் உள்ள பிரமாண்டமான ரெக்ஸ் திரையரங்கில் நடைபெறுகிறது. 21-ம் தேதி மாலையே இங்கு கபாலி திரையிடப்படுகிறது.
இதேபோல உலகின் முக்கிய நாடுகளிலெல்லாம் கபாலி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முதல் நாள் முதல் காட்சிக்கான கட்டணம் 22 டாலரிலிருந்து துவங்குகிறது. அதிகபட்சமாக 40 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஹாலிவுட் படத்துக்கே அதிகபட்சம் 15 டாலர்தான் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கபாலி சிறப்புக் காட்சிகளை 21-ம் தேதி இரவே நடத்த ரசிகர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதிகாலை 4 மணிக்கு 6 அரங்குகளில் சிறப்புக் காட்சி நடக்கும் என்று தெரிகிறது. புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான அரங்குகள் கபாலி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 5000க்கும் அதிகமான அரங்குகளில் கபாலி வெளியாகிறது. சில முக்கிய நாளிதழ்கள் 10000 அரங்குகளில் கபாலி வெளியாவதாக இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் மொத்தம் 1100 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் தொன்னூறு சதவீதம் மல்டிப்ளெக்ஸ் திரைகள்தான். பெரும்பாலான அரங்குகள் கபாலிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கபாலியின் மலாய் டப்பிங் ஒரு வாரம் கழித்து ஜூலை 29-ம் தேதி வெளியாகிறது. இதற்காக 400 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மலேசிய சினிமா வரலாற்றில் எந்த ஹாலிவுட் படமும் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை.
-என்வழி
|