கடந்த 22 வருடங்களில் ரசிகர்கள் எதிர்கொண்ட கேள்விகள், கேலிகள், விமர்சனங்கள், கிண்டல்களுக்கு இன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.
அனைத்தையும் "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்ற ஒரு அறிவிப்பில் ரசிகர்களின் மன அழுத்தத்தை நொறுக்கி தள்ளினார்.
அற்புதமான உணர்வு! எனக்கு அப்படியே பறப்பது போல இருந்தது :-) .
நான் கடந்த இரு வருடங்களாக நேர்மறை எண்ணங்களை மட்டுமே நினைக்கிறேன், பின்பற்றுகிறேன். அதனால் எனக்குக் கிடைத்த பலன்கள் அளவிட முடியாதது.
எனவே, மற்றவர்கள் எல்லாம் தலைவரை சந்தேகப்பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் "தலைவர் நிச்சயம் வருவார்" என்பதில் உறுதியாக இருந்தேன். தலைவர் என்னைப் போன்ற ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்கவில்லை.
முத்துப் படத்தில் "எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனால், வர வேண்டிய நேரத்துக்கு சரியா வருவேன்" என்ற வசனத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.
ஒருவேளை தலைவர் இதை வசனமாக மட்டுமே கடந்து விடுவாரோ என்று சில வருடங்களுக்கு முன்பு நினைத்து இருக்கிறேன். அதோடு இதைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத மன அழுத்தம் ஏற்படும்.
உடன் இருப்பவர் யாராவது "என்னய்யா உங்க ஆளு இப்படி இருக்காரே! எப்பத்தான் சொல்லுவாரு?" என்று கேட்கும் போது புன்னகை மட்டுமே பதிலாகக் கொடுக்க முடியும்.
மீம்ஸ் ல தலைவரின் தாமதத்தைக் கிண்டல் செய்தும், நெருங்கிய நண்பர்களே அன்பாகக் கலாயிக்கும் போது, நமக்கும் ஒரு காலம் வரும் அப்போது பேசுவோம் என்று அமைதியாக இருப்பேன்.
என்னைப் போல எத்தனை பேர் நினைத்து இருப்பார்கள்!
அனைவரது எதிர்பார்ப்பும் கனவும் விருப்பமும் "வருவது உறுதி" என்று தலைவர் கூறிய போது சிறகடித்துப் பறந்தது.
தலைவர் தாமதம் செய்தாரா?
தலைவர் தாமதம் செய்தது போல ஊடகங்களும் மற்றவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க. தலைவர் என்றாவது நான் அரசியலுக்கு இந்த நாளில் வருகிறேன் என்று கூறி இருக்கிறாரா? கிடையவே கிடையாது.
அத்தனையும் ஊடகங்களே செய்தது. இவர்களே ஒரு தேதியை அறிவிப்பார்கள், வழக்கம் போலத் தலைவர் அமைதியாக இருப்பார். உடனே இவர்களே ரசிகர்களே ஏமாற்றம், குழப்பம் என்று எதையாவது கிளப்பி விடுவார்கள், ஊடக தர்மம் இல்லாமல்.
தலைவர் சொல்லாத போது அவர் எப்படி அறிவிப்பை வெளியிடுவார்? பின் ஊடகங்கள் அவரை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?
தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் தலைவர் ஒரே ஒரு முறை தான் அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறினார்.
அதை மிகத் தெளிவாக, குழப்பமில்லாமல் நச்சுனு இன்று கூறி விட்டார். சாதி மதம் இல்லாத ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போகிறார்.
நிருபர்கள் ஆன்மீக அரசியல் என்றால் என்ன? என்று கேட்ட போது தலைவர் கூறியது "தர்மமான நியாயமான அரசியல்."
இதையெல்லாவற்றையும் விட உங்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன்
தலைவரை பல பொதுமக்கள் விமர்சித்ததற்கு "நாமெல்லாம் இவ்வளவு எதிர்பார்க்கிறோம் இந்த ஆளு எதையுமே சொல்ல மாட்டேங்குறாரே" என்ற மன அழுத்தமே காரணம், தலைவர் மீதான வெறுப்பல்ல.
ஒரு நல்ல ஆட்சியை எதிர்பார்க்கும் போது இவர் ஒரு உறுதியான நிலையைச் சொல்ல மாட்டேங்குறாரே என்ற வருத்தமே பலரின் கோபத்துக்குக் காரணம்,
இன்றைய அறிவிப்பு பலரை மகிழ்ச்சி கடலில் தள்ளும். இனி மக்களோட எண்ணம் எப்படி மாறுகிறது என்பதை இனி வரும் காலங்களில் நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள் :-) .
தலைவரின் அறிவிப்புக்குப் பின் ரசிகர்கள் அல்லாதவர்களிடம் இன்று பேசியதில் நான் தெரிந்து கொண்டது, அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது தான். இதில் பொய் கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை.
வழக்கம் போலப் பலர் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். தலைவர் கூறியது போல இவர்களைப் புறந்தள்ளுங்கள். இவர்களால் பேசுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது.
இன்றைய நாள் நம் நாள், இதை நேர்மறை சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
தலைவர் கூறியது போல,
நல்லதையே நினைப்போம், நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
|