ரஜினிக்கு மத்திய அரசால் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது, அதையொட்டி ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டோடு ஒப்பிட்டும், ரஜினியின் பாஜக தொடர்பும் உள்ளீடாக விமர்சிக்கப்படுகிறது, இது இயல்பாக அரசியல் தளத்தில் உருவாகும் பேச்சுக்கள் தான், ஆனால் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து கமலஹாசனை உள்ளடக்கி உருவாகும் விவாதமென்பது எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தமிழகத்தில் வழமையாக நடக்கும் பைனரி மனநிலையில் இருந்து தொடங்கப்படுகிறவையாகும், தமிழகத்தில் இது ஒரு மாறா பண்பாடாகவே தொடர்கிறது.
இந்த விவாதங்களில் பெரும்பாலும் கமலஹாசன் ஒப்பற்ற நடிகனாகவும், ரஜினி காந்த் ராசி, அதிருஷ்டம், ஸ்டைல், கமர்ஷியல் உள்ளிட்டவற்றோடு தொடர்புபடுத்தப்படுவதை கவனிக்கலாம். கமலஹாசன் குறித்த சிலாகிப்புகளில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை, ஆனால் ரஜினியின் சினிமா குறித்த மதிப்பீட்டை தான் கட்டுடைத்து பேச வேண்டியிருக்கிறது.
ரஜினி - கமல், இவ்விருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று எடுத்த முடிவு ரஜினிக்கு சாதகமோ இல்லையோ, நிச்சயம் அது கமலுக்கு சாதகமாக அமைந்தது என்பதே நிஜம். திரை மொழி, தோற்றம், வசீகரம், எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தல் என்று ரஜினிகாந்த் தன் எல்லைகளை வகுத்துக்கொண்டு அதற்குள்ளாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறவர். 16 வயதினிலே படத்தில் கமலஹாசன் நடையை மாற்றி, கோமணம் கட்டி, குரலை மாற்றி என்று இத்தனை மெனக்கீடல் செய்வதே நடிப்பு என்று பெரும்பான்மையானோர் புரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ரஜினி தன் கருப்பு வெள்ளை படத்திலிருந்து காலா வரை, காமடி, ஆக்சன், காதல், சோகம் என்று படம் எந்த ஜானராக இருந்தாலும் அதில் எந்த ஆர்பாட்டமுமில்லாமல் அசாத்தியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், சொல்லப்போனால் படத்துக்கான நியாயத்தை செய்திருக்கிறார், ஆனால் ரஜினியின் நடிப்பென்றாலே வெறும் "முள்ளும் மலரும்" படத்தோடு நிறுத்திக்கொள்வது நடிப்பு பற்றி நமக்கிருக்கும் exaggeration னே தவிர வேறில்லை.
கமலஹாசன் நடித்த பல காட்சிகளில் "கமல் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்" என்று கீழே scroll லில் போடுமளவு ரொம்பவும் மெனக்கிட்டு அப்பட்டமாய் நடித்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம், கமலஹாசனின் blockbuster படங்களான நாயகன், மூன்றாம் பிறை, புன்னகை மன்னன் போன்ற படங்கள் கூட இதிலிருந்து தப்பியதில்லை. ரஜினியை உயர்த்தி கமலை தாழச்செய்ய இதை குறிப்பிடவில்லை, கமல் என்னும் நடிகனின் நடிப்பையோ, புகழையே நான் குறைத்து விட முடியாது, ஆனால் கமலஹாசனை மட்டுமே முதன்மை படுத்தி நடிப்புக்கு இலக்கணம் வகுப்பதானால் உருவான சிந்தனாமுறையை சுட்டிக்காட்ட வேண்டி இதை குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த சிந்தனை மரபில் இருந்து வெளிவந்தால் தான் ஆறிலிருந்து அறுபது வரை தொடங்கி பாட்ஷா தொடர்ந்து, ரஜினியிடம் வெளிப்பட்ட நடிகனை நம்மால் கொண்டாட முடியும். உடலை வருத்துவது, சப்தமிட்டு அழுவது, நடிப்பை உடல் முழுவதும் கடத்துவதாக எண்ணி உடல் பாகங்களை தேவைக்கு அதிகமாக அசைப்பது போன்றவற்றையே நடிப்பென்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இவை நாடகங்களில் இருந்து உருவான நடிப்புக்கான இலக்கணம், நாடகத்துக்கு அது தேவையும் கூட, கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பவனுக்கும் மேடையில் இருக்கும் கலைஞன் நடிப்பது தெரிய வேண்டும், அது அனைத்தையும் கொஞ்சம் கூட்டும், ஆனால் சினிமா தன் பரிணாமத்தால் அனைத்தையும் அதற்கேற்ற வடிவத்துக்கு மாற்றிக்கொண்டது, அந்த திரை மொழிக்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக்கொண்டதால் தான் ரஜினி தன்னை இத்தனை வருடம் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது, கமர்ஷியல், ஸ்டைல் என்று அதை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
ரஜினியின் வெற்றியே தன் எல்லைகளை வகுத்துக்கொண்டது தான், எல்லோராலும் எல்லாமும் முடியும் என்பது சாத்தியமேயில்லை. "எனக்கும் தெரியும்" என்று முயற்சிப்பது வேறு, செய்வதில் உச்சம் தொடுவது என்பது வேறு. கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல முயற்சிகள் செய்தாலும் கங்கை அமரன் காலத்தால் நின்றது பாடலாசிரியராக தான் என்பது என் கருத்து, அது மாத்திரமே "கங்கை அமரன் எழுதின பாட்டா இது?" என்று காலத்தால் நிற்கும். ஆகையால் எல்லைகளை வகுத்துக்கொள்வதும், தன் அளவுகோலை தெரிந்து வைத்திருப்பதும் கூட கலையின் அம்சம், கலைஞனுக்கு முக்கியம், ரஜினி என்னும் மகா நடிகனின் வெற்றியும் இதில் உள்ளடக்கியது தான்.
ஆனால் கமல் ஒரு தீரா தேடல் கொண்டவராக இருந்தார், அந்த தேடலில் அவரது மகத்தான பங்களிப்புகளை புறந்தள்ள முடியாத அதே வேளையில், தசாவதாரம் போல "என்னால் இதுவும் முடியும்" என்று முயன்று தோற்றும் இருப்பார். தசாவதாரம் திரைக்கதை ஒட்டப்படாத அக்கக்கான படம். பத்து கதாபாத்திரத்தின் நடிப்பு, மேக்கப் என்று "ஒரு முயற்சி" என்கிற அளவில் குறை சொல்ல மனம் வராமல் நகர்ந்து இருப்போமே ஒழிய, கமல் நினைத்தை செய்ய முடியாத படமாகத்தான் தான் அது முடிந்தது.
நடிப்பென்பது இத்தகையான மெனகீடல்கள் தான் என்று புரிந்து வைத்திருந்த பல பேர் இங்கு தோற்று இருக்கிறார்கள், அதில் முக்கியமானவர் விக்ரம். ஜிம்மிலும், டயட்டிலும், ஹோம் வொர்க்கிலும் காலத்தை கழித்து "மொத்த வித்தையையும் இறங்குவதை" போல கதையை தேடிக்கொண்டிருந்தாரே ஒழிய, ஒரு நல்ல கதையில் அந்த கதைக்கு தேவையானவற்றை செய்தால் போதுமானதாக இருந்திருக்கும் என்கிற யதாரத்துக்கு இன்னும் வரவில்லை.
கமல் நல்ல நடிகன், அது நான் சொல்லி ஊர் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, ஆனால் ரஜினியின் நடிப்பை மதிப்பிட கமலின் நடிப்பு அளவுகோளில்லை. ஸ்டைல், முள்ளும் மலரும், கமர்ஷியல் என்கிற ரஜினி குறித்த கிளிஷேக்களுக்கு அப்பாற்பட்டு ரஜினி மகத்தான நடிகன்.
நன்றி : வாசுகி பாஸ்கர்
|