Related Articles
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 5 - உழைப்பாளி
பாடகர் மலேசியா வாசுதேவன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 75 இயர்ஸ் ஆஃப் மலேசியா வாசுதேவன் !!
தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த சிவாஜி !!!
ஃப்ளாஷ்பேக் : பெத்தராயுடு படத்தின் 200 வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி (1995)
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 4 - அருணாச்சலம்
அரசியலுக்காக ரஜினியை எதிர்ப்பது எந்த பயனும் இல்லை!! இறங்கி வந்த திருமாவளவன் !!
எம் ஜி ஆர் உருவாக்கி வைத்திருந்த மாஸ் ஹீரோ பார்முலாவை மாற்றியமைத்த ரஜினி
அவ்வளவு அழகான பாடலை படத்தில் இருந்து நீக்குவதற்கு எப்படி மனம் வந்தது?
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 3 - வீரா
எம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா?

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
நான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..
(Monday, 22nd June 2020)

சிறுவயதில் ஒரு நாள்..
இப்ப எந்திரிக்கிறயா இல்லையா,
அப்பா குரலின் கம்பீரமான கண்டிப்பு என்னை சடாரென எழுந்து உட்கார வைத்தது.
என்னடா ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்கலாம்னு கனவுகண்டது தப்பாபோச்சே.
வாசலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன்.அப்பா
வஜ்ரதந்தி பல் பொடியின் காவிக் கலர் பற்களிலும் விரலிலும் படிந்திருக்க ..
எந்திருச்சு வா .பல்லை வெளக்கீட்டு காபியகுடி பாபு கடைக்குப் போகலாம்
என்று சொல்லிக்கொண்டே சொம்பில் இருந்த தண்ணீரை ஊற்றி வாய் கொப்பளித்தார் .
எனக்கு தூக்கி வாரி போட்டது.
முடியை நெற்றிபுருவம் வரை இழுத்து பார்த்ததில் இன்னும் இரண்டு வாரங்களாவது தேவைப்படும். 
அன்னை ஓர் ஆலயம் படம் கண் முன்னே ஓடியது. ரஜினி போல முடிவளர்க்க முடிவெடுக்கும் போதே அப்பாவை நினைத்துப்பார்த்திருக்க வேண்டும்.
அம்மாவின் சிபாரிசுக்காக அடுப்படிக்கு சென்றேன்.

நின்று கொண்டு சமையல் செய்வது போன்ற சின்ன அடுப்பு திட்டு, திட்டிற்கு மேலே புகைப்போக்கி அதற்கு கீழே விறகு அடுக்கப்பட்டிருக்கும். அடுப்படியில் இருந்து அண்ணார்ந்து பார்த்தால் புகைப்போக்கியின் கருப்பு செங்கல் சுவற்றில் கட்டி தொங்கவிட்டிருக்கும் பூண்டு கத்தையும், உப்புகண்டமும்.அந்த புகைபோக்கி வழியாக வரும் சூரிய ஒளி கீற்று இட்லிப்பானையில் பட்டு பிரதிபலிக்கும் அம்மாவின் முகம் அத்தனை அழகு.
அம்மாவின் அருகில் போய் மெதுவாக அம்மா ரஜினி ஸ்டைல்மா இன்னும் ஒரு ரெண்டு வாரம் அப்பறமா வெட்டிக்கிறம்மா.
தொட்டாங்குச்சிகளை உடைத்து விறகுகளுக்கு இடையே சொருகி ஊதாங்குழலில் ஊதுவுவதற்கு இடையே 
ஒதை வாங்கப்போற அடிக்கற வெயில்ல எப்படி வேர்த்து ஊத்துது முடிய வளத்துக்கிட்டு திரியற.போ மொதல்ல முடிய வெட்டிகிட்டு வா. 
கண்டிப்பாக சொல்லி விட்டு இட்லி மாவை கரண்டியால் எடுத்து துணி நனைத்து போட்ட இட்லி தட்டில் ஊற்றினார். இனி அம்மாவிடம் தலைகீழாக நின்றாலும் தலைமுடியை காப்பாற்ற முடியாது.
அப்பாவிடம் சொல்ல தைரியம் இல்லை.
பயம்னு சொல்ல முடியாது.
பயமில்லைன்னும் சொல்ல முடியாது.
மனதில் முழுவதுமாக ஜீப்பில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக உட்கார்ந்து இருக்கும் ரஜினி.
ரஜினிக்கு அவங்கப்பா ஒன்னும் சொல்லியிருக்க மாட்டாரோ..
அப்பா சைக்கிள் ஸ்டாண்டை தள்ளிவிட்டு, லுங்கியை லேசாக முட்டிவரைதூக்கி ஒரு காலை தரையிலும் ஒருகாலை பெடலிலும் வைத்தவாறு திரும்பி என்னை பார்த்தார்..

அ.அ..அப்பா..
அடுத்த வாரம் .ம். ம்.. என்று இழக்கும் போதே,
தலைலமுடி நெறையா இருந்துச்சனா தலை வேர்க்கும் வேர்த்துச்சுன்னா சளிப்புடிக்கும்பா.. 
என்றார்.
அப்ப அம்மாவுக்கு மட்டும் சளி புடிக்குல..என்ற என்னை பார்த்து.
இப்ப வர்றையா இல்லையா என்று முறைத்தார்.
தயங்கி கொண்டே சைக்கிள் கேரியரில் ஏறி இருபக்கமும் காலை தொங்க விட்டு உட்கார்ந்து போலாம்ப்பா என்றேன் எனக்கே கேட்காத குரலில்.
போகும் வழியில் எல்லாம் சுவற்றில் அன்னை ஓர் ஆலயம் பட போஸ்டர்கள் . ஜுப்பின் மேல் துப்பாக்கி பிடித்த ரஜினி என்னைபார்த்தார்.
பெருசாகி நம்ம இஷ்டத்துக்கு முடி வளர்த்து நம்ம இஷ்டத்துக்கு முடி வெட்டிக்கணும்...இது அப்பா மேல சத்தியம்..
மனசெல்லாம் நாம எப்ப ரஜினி மாதிரி..என்ற திட்டங்களை யோசிக்கும் முன் பாபு அண்ணன் கடை வாசலில் சைக்கிளை நிறுத்தினார்..
மரப்பலகை கதவுகள் மடித்து கடையின் இரண்டு பக்கமும் ஒதுக்கி இருந்தது. கடையின் ஒருபக்கம் மரத்தாலான பார்டிசனின் மேல் பாதியில் கண்ணாடி .. கண்ணாடியில் வரைந்த பாபு சலூன் என்ற எழுத்துக்கள் . மறுபக்கம் கௌபாய் படங்களில் வருவது போல பாதிக்கதவு.

கடைக்கு உள்ளே நான்கு ஃப்ரேம்களில் சீனரி சார்ட் பேப்பரில் வரைந்தது.அது போன்ற ஓவியங்கள் சலூன் கடைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அந்த scenary பார்க்கும் போது எல்லாம் எனக்குள் ஒரு உணர்வு.. அந்தscenaryக்குள் நான் இருப்பது போல கற்பனை செய்து பார்ப்பேன்.அதுதான் visualisation என்பது அப்போது தெரியாது..
ஒரு பலகை பெஞ்ச் அதன்மேல் வார இதழ்களும் செய்தித்தாள்களும் இருக்கும். முடிவெட்ட உட்காரும் சேரைப்பார்க்கும் போது எனக்கு அந்த சேர் அந்நாளைய மிக பெரிய கண்டு பிடிப்பாக தோன்றியது.. சேரின் கைவைக்கும் பகுதியின் மேல்சிறு பலகை வைத்தால் சிறுவர்களை உட்கார வைக்க முடியும்.. சில வருடங்களுக்கு முன்பு வரை பலகை மேல்தூக்கி உட்கார வைத்து சேரை மெதுவாக ஒரு சுற்று சுற்றி விடுவார் பாபு அண்ணன்.
பலகையில்லாமல் சேரில் உட்கார்ந்த காலத்தில் ஏதோ பெரிய மனிதனாக ஆகிவிட்டது போன்ற உணர்வு.
அங்கு அடுத்த அதிசயிக்கத்தக்க பொருட்களில் இன்னொன்று trimmer . அப்போது அதன் பெயர் தெரியாததால் அதன் பெயர் மிஷின்..அதைபார்க்கும்போதே ஆச்சரியம் பொங்கும்.. இன்று எத்தனையோ மாடல்களில் trimmerகள் வந்தாலும்.. அந்த Manuel trimmerஐ மறக்க முடியாது..
ஆனால் மனது வேண்டிக்கொள்வது எல்லாம் அந்த trimmer என் தலையை தண்டித்து விடக்கூடாது.. 
அதுபோல சுவற்றில் ஸ்டாண்ட் அடித்து அதன்மேல் வைத்துள்ள மர்பி ரேடியோ, கத்தியை சானை பிடிக்கும் தோல், படிகாரக்கல், பாபி படத்தின் டிம்பிள் கபாடியா காலண்டர் எல்லாவற்றையும் பல மடங்காக பிரதிபலிக்கும் கண்ணாடிகள் இன்றும் நியாபகமிருக்கிறது..

அப்பாவும் பாபு அண்ணனும் மூக்கு பொடி நண்பர்கள்..அப்பா கடைக்குள் நுழையும் போதே பாபு அண்ணன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு வாழைமட்டையில் மடித்த பொடி பொட்டலத்தை நீட்டுவார்.. 
அப்பாவின் முகத்தில் வரும் சந்தோஷத்தை பார்க்கணும் அப்படி இருக்கும்..அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான்..
அந்த வாழைமட்டையின் மடிப்பை லாவகமாக திறந்து வலது கை ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் உள்ளே விட்டு மெதுவாக பொடியை நுள்ளி எடுத்து இடது மூக்கை இடதுகை கட்டை விரலால் அடைத்துக்கொண்டு மூக்கின் வலது பக்கம் கொண்டு போய் சரியாக பகுதி பொடியை மட்டுமே உறிஞ்சி..மீத பகுதி பொடியை இடது பக்கம் வழியாக உறிஞ்சும் போது அப்பாவின் முகத்தில் நான் பார்த்த உணர்வு (நான் இன்று வரை எந்த ஒரு விசயத்திலும் அனுபவித்ததில்லை) 
சில நேரங்களில் தோன்றும் அவர் மூக்கு பொடி போடத்தான் என்னை முடிவெட்ட அழைத்து வருகிறார் என்று. அப்படி இருந்தால்தான் என்ன .என்னை என் இஷ்டப்படி முடிவெட்ட விடலாமில்ல..
அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் இருந்த இன்னொரு பழக்கம் லாட்டரி சீட்டு வாங்குவது..
பொடி போட்டு முடிந்ததும்..
சட்டை கை மடிப்பிற்குள் மடித்து வைத்திருக்கும் லாட்டரி சீட்டுகளை எடுத்து பேப்பரில் பரிசு விழுந்த நம்பர் பார்க்க தொடங்கி விடுவார்..
பாபு அண்ணன் பாட்டிலில் மேலே இருந்த கொக்கி போன்ற பைப்பை இழுத்து என் தலையில் தண்ணீரை ஸ்ப்ரே பண்ணிக்கொண்டு அப்பாவிடம் பேச்சு கொடுத்தார்.
ஏண்ணா இப்ப இந்த சீட்டு அடிச்சுதுன்னா என்னவெல்லாம் பண்ணுவீங்கண்ணா..

முதல்ல ஒரு ஃபேன் வாங்கனும்யா..
புள்ளைங்களுக்கு விசிறி வீசி கைவலிக்குதுங்கறா என்ற அப்பா காரியத்தில் கண்ணாக, பையனுக்கு மிஷின் போட்டுவிடு, முடிய புடிச்சா புடி கிடைக்கக்கூடாது
என்றார்.
நான் கண்ணாடி வழியாக பார்க்கும்போது பத்து பதினைந்து அப்பாவும் பாபு அண்ணனும்..என் ரஜினி ஸ்டைல் கனவைத்தகர்க்க .. தலைமுடியை பறிகொடுத்த நான் பரிதாபமாக பாபு அண்ணனைப்பார்த்து அண்ணா மிஷினாவது போட வேண்டாம்ணா என கெஞ்ச,
அவர் கத்தரிக்கோலை சீப்பு வைத்திருக்கும் கைக்கு மாற்றிக்கொண்டு வலது கையை நீட்டிக்காசு கேட்டார்.
அப்பாட்ட வாங்கிக்கங்க என்றேன்.
அதற்கு அவர்.. நீ எப்ப காசு தர்றயோ அப்ப நான் நீ சொல்லறமாதிரி வெட்டுறேன் கலெக்டரே..என்றார்.. ( நான் காசு சம்பாதிக்கும்போது வெட்ட முடியுமில்லை பாபு அண்ணனும் இல்லை )
அப்பா என்னை கலெக்டருக்கு படிக்க வைக்க போவதாக கண்ணுல கண்ட எல்லாத்துகிட்டயும் சொல்லுவார்.. அவருடைய சக்திக்கு படிக்க வெச்சதே பெரிசு என்று பெரியவனாகி தெரிந்து கொண்டேன்.. அப்பாவின் கண்டிப்பு அப்பொழுது வில்லத்தனமாக தோன்றினாலும் எப்பொழுது என்னுடைய கல்லூரி படிப்பிற்காக ஊரை விட்டு வந்தேனோ அன்று முதல் நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் அனுபவத்திலும்
அவரின் அன்பை புரிந்து கொண்டேன்.. 
.. இப்பொழுது.
என் மகன் முடி வெட்டிக்கொள்ளும்போது.. அப்பாவிடம் இருந்து பேரனுக்கு சிபாரிசு..
ஏம்ப்பா அவன் இஷ்டப்படி முடிவெச்சுக்கட்டுமே.. என்கிறார்.
ஒரு வேளை என் மகன் என்னை வில்லனாக நினைத்துவிட கூடாது என்பதனால் தானிருக்கும்.. ஏனென்றால் அவரின் ஒவ்வொரு செயலும் சொல்லும் என் நன்மைக்காக மட்டுமே.
அப்பாவால்தான் இன்று நான் நானாக இருக்கிறேன்.
ஒரு முறை ரஜினிசார் என்னை செட்டில் பார்த்து, முத்துராஜ் சார் ,சூப்பர் சார் நீங்க.. கலக்கிட்டீங்க சார்.என்றபோதே அப்பா வெற்றி பெற்று விட்டார்..
என் இளவயதில் என்னை அப்பா என்னவெல்லாம் பண்ணவைத்தார் என்பது அவருக்கு நியாபகமில்லை...... எனக்காக அவர் என்னவெல்லாம் பண்ணினார் என்பதும் அவருக்கு நியாபகம் இல்லை.. வயதானதால் வரும் நியாபகமறதி.

என் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட ஹேர்ஸ்டைல் வைக்கமுடியாமல் போனதும் , நான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..

இப்பவும், அப்பா மாதிரி நான் இருக்கணும்னு ஆசைப்படுவதும் அவருக்கு தெரியாது..

தங்கவேலு மகன் முத்துராஜ்

Courtesy : https://m.facebook.com/story.php?story_fbid=4660133524012125&id=100000465715324






 
0 Comment(s)Views: 868

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information