வேட்டையன் அக்டோபர் 10 ரிலீஸ்... வேட்டையனுக்கு வழிவிட்ட கங்குவா
(Friday, 6th September 2024)
Aug 19, 2024 : லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று மட்டுமே வெளியீடு பற்றி அறிவித்திருந்தார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படம் எப்போது வெளியாகும் என்று கேள்வி இருந்து வந்தது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகுமா அல்லது அக்டோபர் 10ம் தேதி வெளியாகுமா என்று ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள்.
அக்டோபர் 10ம் தேதி சூர்யா நடித்கும் 'கங்குவா' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அந்தப் படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகியது. பான் இந்தியா படமாக அந்தப் படத்தை வெளியிடப் போகிறார்கள்.
தற்போது ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு வந்துள்ளதால் 'கங்குவா' அதே நாளில் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வெளியாகிறது என்றால் அப்படத்திற்கே அதிக தியேட்டர்களைக் கொடுக்க முன்வருவார்கள். அப்படி நடந்தால் 'கங்குவா' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்த நிலையில, நடிகர் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் சூர்யா, ”கடந்த 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் மூத்தவர் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி அவரது வேட்டையன் வருவது தான் சரியாக இருக்கும். நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்க வந்தவர் அவர்.
ரஜினி 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். மூத்தவர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ல் வருவது தான் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என கூறினார்.