தலைவர் ரஜினியன் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட நேரம்.

ஒரு பக்கம் எந்திரன் - திரோபோவின் அசத்தல் டிசைன்கள் வெளிவந்த மகிழ்ச்சி... இன்னொரு பக்கம் தலைவரைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்துள்ள விருது அறிவிப்பு.

சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் சிறந்த நடிகராக இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மதிப்புக்குரிய சினிமா ரசிகர்கள் அமைப்பான சினிமா ரசிகர்கள் சங்கம் இந்த விருதினை தலைவருக்கு வழங்குகிறது. முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வுசெய்து, விருது வழங்கி வருகிறது.

2007-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் முன்னிலையில் சினிமா ரசிகர்கள் சங்க செயலாளர் பார்த்தசாரதி நேற்று வெளியிட்டார்.

இதில் சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகமெங்கும் புதிய வசூல் சாதனை நிகழ்த்திய தலைவரின் சிவாஜி – தி பாஸ் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, தலைவரின் சிவாஜி – தி பாஸ் திரைப்படத்துக்கு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.

சிவாஜி படத்துக்கு இன்னொரு விருதும் கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி பாடகியாக சிவாஜியில் வாஜி வாஜி.. பாடல் பாடிய சின்மயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பங்கேற்கிறார்!

அக்டோபர் மாதம் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.

பொதுவாக விருது விழாக்களில் பங்கேற்காத சூப்பர் ஸ்டார், இம்முறை விருதினைப் பெற்றுக்கொள்ள விழாவுக்கு வருகிறார் என சங்க நிர்வாகிக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த சங்கத்தின் விருதினை நேரில் வந்து பெற்றுக் கொண்டவர் தலைவர். காரணம் இந்த விருது சினிமா ரசிகர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுவது.
ரசிகர்களுக்கு மரியாதை தரவேண்டும் என்பதால் இந்த விருதினை நேரடியாகப் பெற்றுக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

மீடியாவின் ஒரு பிரிவினர் தொடர்ந்து நம்மை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டாலும், ரசிகர்களின் மாறாத அன்பும் ஆதரவும் தலைவருக்கு எப்போதும் உண்டு என்பதை நிருபிக்கும் விதத்தில் விருதினை அறிவித்துள்ள சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!

-சங்கநாதன்