சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான எந்திரன் – தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவியின், சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இன்று மாலை 5 மணிக்கு இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் சூப்பர் ரஜி. சன் பிக்சர்ஸ் நிறுவனமும், சன் டிவியும் இந்த செய்தியை இன்று மாலையிலிருந்தே சிறப்புச் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.

இதன் மூலம், தயாரிப்பு நிறுவனம் துவங்கிய உடனே மிகப் பெரிய ஜாக்பாட் பரிசைப் பெற்றுள்ளது அந்நிறுவனம்.

ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் 150 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய், ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயமான மாச்சு பிக்குவில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் விலகிக் கொண்டது.



இதனால் அய்ங்கரன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது. இந்நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.
பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதி பூண்டுள்ளது.

இதுகுறித்து முறையான அறிவிப்பை இன்று மாலை வெளியிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனுமதியுடன் பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு முன் இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு கலாநிதி மாறனை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

சன் பிக்சர்ஸ்…

சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டு 6 மாதங்கள்தான் ஆகின்றன. இந்த நிறுவனத்தின் முதல் படம் காதலில் விழுந்தேன் பிரமாண்ட வெற்றி பெற்றது. அடுத்த படம் தெனாவட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

விரைவில் சிவா மனசுல சக்தி, தீ, பூக்கடை ரவி, திண்டுக்கல் சாரதி போன்ற படங்கள் வெளி வர உள்ளன.

-சங்கநாதன்