நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரப்போவது நிச்சயம் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் கோரிக்கையான மதுவிலக்கு, லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுபவராக நடிகர் ரஜினிகாந்த் இருப்பார். தற்போது உள்ள இரண்டு அணிகளுமே ஊழல் மனிதர்களை கொண்டிருக்கிற மிக மோசமான அணிகள். தி.மு.க.வை பொறுத்தவரை நேற்றைய மு.க.ஸ்டாலினுக்கும், இன்றைய மு.க.ஸ்டாலினுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இன்றைய ஸ்டாலின் பக்குவபட்டிருக்கிறார்.
முதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவர் ஒரு ஊழல் அற்ற அரசியலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டாலும், அவருடன் இருக்கும் நபர்களை பார்த்தால் மக்களுக்கு அவர் மீது எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. இதனாலேயே தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ரஜினிகாந்தை பார்க்கிறோம். காந்திய மக்கள் இயக்கம் எதிர்பார்க்கும் ஊழலற்ற அரசியலை செயல்படுத்தும் மனிதராக ரஜினிகாந்த் இருப்பார்.
அவரின் அணுகுமுறையை பார்க்கும் போது அவருக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் கொள்கை முறையில் நல்ல தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அரசியலுக்கு வரும் ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது. ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் அரசியல் களத்தில் வந்து நிற்க போவது நிச்சயம். இதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியும். ஒரு படம் வெளியாகும் போது அவர் இம்மாதிரியான அறிவிப்பை அறிவிப்பார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்த முறை அவர் அரசியலுக்கு வந்து நேர்மையான ஊழலற்ற தூய்மையான அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அவர் தனது நேரத்தை செலவிடுவார்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சில கட்சிகள், தனிப்பட்ட சிலர் நடிகர் ரஜினிகாந்தை எதிர்க்கிறார்கள். அரசியலுக்கு வருபவர்கள் தாங்கள் அமர்ந்திருக்க கூடிய பல்லக்கை சுமக்கும் மனிதர்களாக இருந்தால் அவரை வரவேற்க அனைவரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் நடிகர் ரஜினிகாந்தை பல்லக்கில் அமர செய்து தாங்கள் சுமக்க யாரும் தயாராக இல்லை.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த், சாதிய அமைப்புகளின் பக்கத்திலோ, வகுப்பு வாத சக்திகள் வளரவோ துணை போக வேண்டாம். அனைவருக்குமான அரசியலில் ஈடுபட வேண்டும். தமிழ்நாட்டில் வகுப்புவாதத்தை வளர்த்தெடுக்க முயற்சிக்கும் பாரதீய ஜனதாவை விட்டுவிட்டு மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் வந்தால் மக்கள் அவர் பின்னால் செல்வார்கள்.
சீமானை பொறுத்தவரை இந்த மண்ணை தமிழன் தான் ஆளவேண்டும் என்ற அடிப்படையில் பேசுகிறார். ஏற்கனவே சாதி, மதம், மொழியாலே பிரிக்கும் சக்தியாவே அரசியல் இருக்கிறது. இவ்வாறு இருக்கக்கூடாது. தமிழகத்தில் இருக்க கூடிய அனைவரும் தமிழர்கள் தான். தமிழ்நாட்டில் இருந்தாலோ, வாழ்ந்தாலோ அவர்கள் தமிழர் இல்லை என்றால், பெரியாரை தமிழராக ஏற்று கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் தமிழர் தான் ஆள வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 2 திராவிட கட்சிகள் மூலமாக ஆட்சி செய்பவர்கள் தமிழர்கள் தானே.
இவர்கள் ஊழல் செய்யவில்லையா? தமிழன் மட்டும் தடையில்லாமல் திருடிவிட்டு போகட்டும் என்பதா? சீமான் உடன் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழகத்தை அல்லாதவர்களும் தமிழகத்தை திறம்பட ஆட்சி செய்துள்ளனர். இன்றைய தேவை நேர்மையான ஆட்சியாளர் நாற்காலியில் அமர்வது தான். ரஜினிகாந்தை பொறுத்தவரை நேர்மை, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பாரா என்பதை மட்டும் பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
|