கே: ரஜினி ஏன் தெளிவா அரசியலுக்கு வருகிறேன் அல்லது வரமாட்டேன்னு சொல்ல மாட்டேங்கிறார்?
ப: முதல்ல, சினிமாவில அவர் சொன்ன வசனத்தை வைத்து அப்படிச் சொல்லாதீங்க.
நிஜ வாழ்வில் அவர் கிட்ட எப்போ இந்தக் கேள்வி கேட்கப்பட்டாலும், ஒண்ணு "நோ கமெண்ட்ஸ்"ன்னு சொல்லுவார் அல்லது "ஆண்டவன் கையில்", "நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாது"ன்னு சொல்லுவார்.
இப்படிப் பதில் சொல்வது அவருடைய உரிமை.
அவர் பல வருடங்களாக ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்பதையும் நாம் இங்கே நினைவு கூறவேண்டும். ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு இறைவன்தான் எல்லாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் அடுத்த 5 வருடம் கழித்தது என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்று என்னிடம் கேட்டால், "யாருக்குத் தெரியும்" என்கிற ரீதியில் தான் பதில் வரும்.
அது தான் எதார்த்தம்.
ஊடகங்கள் தங்கள் அகோர பசிக்குத் தீனி போட்டுக்கொள்ள அவ்வப்போது அவர்களே இந்தப் பதில்களை வைத்துக் கட்டுரைகள் எழுதியும், விவாத நிகழ்ச்சிகள் நடத்தியும் கல்லா கட்டிக்கொண்டன.
சில சமயங்களில், அவர் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் அல்லது அவரை எந்த அரசியல் தலைவர் சென்று சந்தித்தாலும், உடனே இந்த டாப்பிக்கை மறுபடியும் கிளறி கட்டுரைகளைப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன.
அடிக்கடி இவற்றையெல்லாம் பார்க்கும் பொது மக்களுக்கு, ரஜினி எப்போதுமே குழப்புகிறார்/தெளிவான நிலைப்பாடு இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது.
சமீபத்தில் கூட, அவர் "No Comments" என்று சொல்லியதை வைத்து, "First Channel to Speak exclusively to Rajini" என்று "Breaking News" போட்டு ஊரை ஏமாற்றியது.
ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடக்கவில்லை என்றால், ஊடகங்கள் என்ன கூறும்? "அன்றைக்கு அப்படி சொன்னீங்களே இப்ப மாற்றி கூறுகிறீர்களே?" என்று கேட்பார்கள்.
நடக்குமோ நடக்காதோ என்று இருக்கும் நிகழ்வை உறுதியாக கூற முடியாத காரணத்தால், "கடவுள் கையில் உள்ளது" என்று கூறுகிறார்.. அவ்வளவே!
சூழ்நிலை தான் எதையும் தீர்மானிக்கிறது.
கே: ரஜினி எப்போ தான் அரசியலுக்கு வருவாரு?
ப: அவர் அரசியலுக்கு வந்தால் முதலில் களத்திலிருந்து வேலை செய்யப்போவது ரசிகர்கள் தான். அவர்களே தலைவருக்காகப் பொறுத்திருக்கிறார்கள்.
அவர் சொன்ன மாதிரி, அவரவர் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்கள் ஏன் பொறுமையை இழக்கிறார்கள்?
ரஜினி முக்கியமில்லை என்றால் அவர் கூறும் "ஆமாம் / இல்லை" என்கிற பதிலால் மற்றவர்களுக்கு கிடைக்கப்போவதென்ன?
ரசிகர்களாகிய நாங்களே அமைதியா இருக்கும் போது மற்றவர்கள் ஏன் பதட்டமடையனும்?
அவரிடமிருந்து அறிவிப்பு வரும் வரை தேவைப்படுகிறவர்கள் காத்திருக்கலாம் மற்றவர்கள் அவர்களுடைய மற்ற பணிகளில் கவனம் செலுத்தலாம்.
கே: சரி! ஏன் இப்போது கூடத் தன் அரசியல் நிலைப்பட்டைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை?
ப: "போர் வரும்போது பாத்துக்கலாம்" என்று அவர் சொன்னது அவருடைய ரசிகர்களுக்கு அவர் சொன்ன மெசேஜ்.
அவர் அரசியலுக்கு வரும் சாத்திய கூறுகள் அதிகம் என்பதை இப்பேச்சு உணர்த்தினாலும், அவர் மிகத்தெளிவாக "உங்களுக்குக் கடமை இருக்கிறது, அதைப் பாருங்கள்" என்று சொல்லியிருக்கிறார்.
அவருக்கும் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் காலா படத்தின் பணிகள் இருக்கிறது. ஆக, நாள்தோறும் அவரிடமிருந்து ஒரு அறிவிப்பை எதிர்பார்க்காதீர்கள்.
அவரை அவர் வேலையைச் செய்ய விடுங்கள்... அவரை விரட்டி விரட்டி அதே கேள்வியைக் கேட்டால் அதே பதில் தான் வரும்.
அப்புறம் "ரஜினி குழப்புகிறார்" "ஒரே பதிலையே கூறுகிறார்" என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. நேரம் வரும் போது அவரே சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார்.
கே: கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்றால் அரசியல் பற்றி ஏன் இப்போது பேசி ரசிகர்களை உசுப்பேற்ற வேண்டும்?
ப: இங்கே உசுப்பேற்றுதல் எங்கே வந்தது?!
"போர் வரும்போது பாத்துக்கலாம்" என்பது "காலம் வரும் போது பாத்துக்கலாம்" என்ற அர்த்தத்தில்.
முதல் நாள் ரசிகர்களின் சந்திப்பின் போது பேசுகையில் அரசியலுக்குத் தான் வருவேன் என்று நம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு "அப்படி நான் அரசியலுக்கு வரவில்லையென்றால் ஏமாந்து போய் விடுவீர்கள்" என்றும் "அவரவர் குடும்பம் தொழிலை கவனியுங்கள்" என்றும் கூறினார்.
வழக்கம்போல, ஊடகங்கள் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு பரபரப்பாக்கி விட்டது.
கே: உங்க ரசிகர்களே அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறாங்களே?
ப: ரசிகர்கள் சிலருக்கு ரஜினி அரசியலுக்கு வந்து இங்குள்ள சாக்கடையில் அவர் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற அவர் மீதான அன்பே அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறக்காரணம்.
"நானும் ரஜினி ரசிகன் தான்"ன்னு பல பேர் திடீர் திடீர்ன்னு கிளம்புவாங்க.
வழக்கமா ரஜினி படம் வரும் போது எதிர்மறையான விமர்சனங்களை ஊடகங்களிலும், சமூகத்தளங்களிலும் பரப்ப அந்த "tag" யை பயன் படுத்திக்கொள்வார்கள்.
இவர்கள் உண்மையான ரஜினி ரசிகர்கள் அல்ல.
படம் வரும்போது முதல் காட்சி பார்ப்பவர்களெல்லாம் ரஜினி ரசிகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
உண்மையான ரசிகன், ரஜினியை திரைக்கு அப்பாலும் ரசிப்பவன். அவர் எந்த முடிவெடுத்தாலும் அதைப் புரிந்து கொண்டு அவர் பின்னால் நிற்பவன்.
தற்போது ரஜினியைப் பிடிக்காதவர்கள் கூட, அவரைச் சிறுமைப்படுத்த ரஜினி ரசிகன் என்ற பெயரில் கருத்து கூறுவதால், மற்றவர்கள் ரஜினி ரசிகரே கூறுவதாக நினைக்கிறார்கள்.
இது ரஜினிக்கு மட்டுமல்ல மற்ற முன்னணி நடிகர்களுக்கும் இது போல ரசிகர் போர்வையில் வந்து கருத்துக் கூறுவது வழக்கம்.
சமூகத்தளங்களில் இது போன்ற பிரச்சனைகள் வழக்கமானது.
கே: அப்போ ரசிகர்களுக்கு என்று அரசியல் சார்ந்த சொந்த கருத்துக்கள் இருக்கவே கூடாதா?
ப: நிச்சயமாக இருக்கும், இருக்கக் கூடாது என்று யாரும் கூறவில்லையே!
ஒன்று, அவர் அரசியலுக்கு வருவதை ஆதரிக்க வேண்டும் அல்லது "ஐயோ, அரசியல் வேண்டாமே" எங்கிற ரீதியில் பதிவு செய்யலாம்.
அதை விடுத்து, ரஜினி ரசிகன் என்கிற போர்வையில், ஊடகங்களில் எதிர்மறையாகப் பேசுபவர்களும், காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துபவர்களும் ரசிகர்களே அல்ல.
உண்மையான ரசிகன் அவர் தர்மசங்கடப்படும் படியான கருத்துக்களைக் கூற மாட்டான், அப்படிக் கூறினால் அவன் உண்மையான ரசிகனாக இருக்க மாட்டான்.
மாற்றுக்கருத்துகளை மனதில் நினைப்பதோ நண்பர்களுடன் விவாதிப்பதோ வேறு அதையே பொது இடங்களில் அநாகரீகமாக விமர்சிப்பது வேறு.
"பணம் சம்பாதிக்க முயல்பவர்களை அருகில் கூடச் சேர்க்க மாட்டேன்!" என்று சொன்னதிலிருந்து சில பேர் பயந்து போய் /கோபப்பட்டுப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கருப்பு ஆடுகளை இப்போதே கண்டுபிடித்துக் களையெடுத்தல் நன்று.
உண்மையான ரசிகர்களின் கருத்தை ரஜினி என்றைக்குமே மதிப்பார்.
அவர் National Media முதல் Social Media வரை பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று அன்று அவர் பேசியதைக் கேட்டவர்களுக்குப் புரியும்.
கே: சினிமாவில் அரசியல் அர்த்தம் பொதிந்த வசனங்களைப் பேசி ஏன் பரபரப்பை உண்டு பண்ண வேண்டும்?
ப: ரஜினி என்பது ஒரு மிகப்பெரிய "Brand".
ரஜினியின் கால்ஷீட் கிடைத்து, அவரை இயக்கும் டைரக்டர்களும் சரி, தயாரிப்பாளர்களும் சரி, கதை, திரைக்கதை இவற்றையெல்லாம் தாண்டி, அவருடைய brand-ஐ leverage செய்து கொள்ளப் பார்ப்பார்கள்.
அப்படி ரஜினியின் Brand Value-வை மனதில் வைத்து, சில இடங்களில் அரசியல் பூச்சுடைய வசனங்களை எழுதுவார்கள்.
அப்படி எழுதப்பட்ட வசனம் தான் "நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்".
இது மாதிரி வசனங்களைத் தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வசனத்தை அவர் உச்சரிக்கும் போது, கைத்தட்டல் விண்ணைபிளக்கும். அது நிச்சயமாக Provocation அல்ல.
அப்படியே பார்த்தாலும், அவர் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரி consistentஆகத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
"முத்து" படத்தில் அவரும் "குலுவாலிலே" பாடலில் கூட "கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு? காலத்தின் கையில் அது இருக்கு" என்று ஒரு வரி வரும்.
அதைத்தானே அவர் எப்போதுமே சொல்கிறார்?
முத்துப் படத்தில், இயக்குனர் குழுவில் முக்கிய நபராக இருந்த நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தார்.
மேற்சொன்ன வசனத்தை எழுதியதும் அவரே.
அவர், கோச்சடையான் படத்தில் பணியாற்றிய போது இதே மாதிரி ஒரு அரசியல் வசனத்தை வைக்கலாம் என்று கூற, வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் ரஜினி.
மேலும், "ஏற்கெனவே நீ முத்துப் படத்தில் எழுதிய வசனத்தினால் படும் அவஸ்தையே போதும்" என்று சொல்லியிருக்கிறார்.
சமீப திரைப்படங்களில் அவர் அரசியல் வசனங்களை முற்றிலும் தவிர்த்தே வந்து இருக்கிறார்.
கே: அரசியல் ஒரு சாக்கடை. அது ரஜினிக்கு ஒத்து வராது. அவர் ஏன் அரசியலுக்கு வந்து தன் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும்?
ப: உங்கள் கேள்வி நியாயமானது தான்.
அனைவரையும் அனைத்துச் செல்லும் குணம் தலைவருடையது.
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, சாக்கடையை விடக் கேவலமாக உள்ளது.
அவர் அனைவரையும் அணைத்துச் சென்றாலும், நெஞ்சு நிறைய வன்மத்தோடு தான் இங்கே முக்கால்வாசி பேர் அவரை எதிர்க்கிறார்கள்.
ஆனால், தன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு அரசியலின் மூலம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தால், அது தான் ஆண்டவனின் விருப்பம் என்றால், அது நடந்தே தீரும்.
அரசியல் சாக்கடை தான் ஆனால், யாராவது அதைச் சுத்தம் செய்ய முன் வரணுமே? If he decides to get his hands dirty, then why not?
யாராவது, எப்படியாவது, எங்கேயாவது ஒரு மாற்றத்தைத் தொடங்கியாக வேண்டும். அது ரஜினியாக இருக்கட்டுமே!
கே: சினிமா வேறு, அரசியல் வேறு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், அதை வைத்து அரசியலில் வெற்றி பெற்று விட முடியுமா?
ப: காமராஜரையே தோற்கடித்த நாடு இது. அந்தக் காலத்தில் செய்தித்தாள், வானொலி, சினிமாவைத் தவிர வேறு ஊடகங்களோ சமூகத்தளங்களோ இல்லை.
அப்போது, சினிமா உருவாக்கிய பிம்பத்தை முதலீடாக வைத்து அரசியலில் காலூன்றவும், வெற்றி பெறவும் முடிந்தது.
இன்று அப்படியா? ஒருத்தருடைய இமேஜை ஆக்கவும் அழிக்கவும் ஊடகங்களாலும் சமூகத்தளங்களாலும் முடிகிறது.
அதையெல்லாம் தாண்டி, ஒருவரை வெற்றி பெற செய்வது காலத்தின் கையில். ரஜினியை for no reason degrade செய்ய நிறையப் பேர் காத்திருக்கிறார்கள்.
பாபா தோல்வியடைந்ததும் ரஜினி அவ்வளவு தான் என்றார்கள். லிங்கா தோல்வி அடைந்ததும் எழாத விமர்சனமா?
அதே ஊடகங்கள் தான் கபாலி வருவதற்கு முன்பே அதைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. கபாலி வந்து வசூலில் செய்யாத சாதனையா?
Again, அது மாதிரி தான் அரசியலும் என்று நான் சொல்லவில்லை. We know it's a different ball game.
அவர் 1995-96லிருந்து அரசியலில் ஒரு force ஆக இருக்கிறார். தேர்தல் நேரத்தில் அவரைச் சந்திக்காத அரசியல் தலைவர்களா?!
அவர்தான் இன்னும் அரசியலில் இல்லையே தவிர, அவர் இல்லாமல் அரசியல் இல்லை.
அப்போது அவருக்கு இல்லாத அழுத்தமா இப்போது இருக்கிறது? அதையல்லாம் கடந்தது தான் அவரும் வந்திருக்கிறார், நாங்களும் அவருடன் பயணித்திருக்கிறோம்.
கே: சினிமாவுல ரஜினி ஒரே பாட்டுல ஊரை மாற்றிடலாம், எவ்வளவோ நல்லது பண்ணலாம், அரசியல்ல அதெல்லாம் சாத்தியமே இல்லை...
ப: சினிமாவில வர்ற மாதிரி ஒரே பாட்டுல ஊரையே மாத்துறது எல்லாம் நடக்கும்ன்னு நம்புறதுக்கு நாங்க என்ன 1950லையா இருக்கோம்?!
அரசியலன்னா சும்மா இல்லைன்னு நிச்சயமா எங்களுக்குத் தெரியும்.
கடுமையான களப்பணி, அயராத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இவற்றையெல்லாம் தாண்டி, வன்மம் கொண்டு திரியும் எதிரிகள்.
சமாளிப்பதற்கு இத்தனை இருக்கிறது. இதில் எதையுமே செய்யாமல் நேரடியாக முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து விட முடியாது என்று அவருக்கும் தெரியும்.
இதையெல்லாம் யோசித்துத் தான் அவசரப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்காமல் உள்ளார்.
இவரை முடிவுகள் எடுப்பதில் தாமதம் செய்கிறார் என்று கூறி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று இருக்கும் நிலை என்ன?
ரஜினி அரசியலுக்கு வந்தால், நிச்சயமாக நல்லது நடக்கும் என்று ரசிகர் அல்லாதவரும் நம்புகிறார்கள்.
அரசியல்வாதிகள் கூறும் மாற்றுச் சிந்தனைகள் வழக்கமான அரசியல் வசனங்களாகவே இருப்பதால் எவர் கூறினாலும் மக்கள் நம்புவதில்லை.
ஆனால், ரஜினி குறைந்தபட்சம் முயற்சிப்பார் என்று மக்கள் நம்புவதால் இது விவாதப்பொருளாகி உள்ளது.
அதற்கான உண்மையான முயற்சியை, உழைப்பை அவர் கொடுப்பார். இத்தனை நாட்களாகச் சீரழிந்திருக்கும் நம் அரசியல் அமைப்பு மாறும் என்று நம்புவோம்.
அதை விட்டு, ஒரு விஷயம் நடக்கும் முன்பே, "இது சரி வராது", "இதைப் பண்ண முடியாது"ன்னு சொல்வது, ஒரு குழந்தை பிறக்கும் முன்பே, "இது ஊனமா பிறக்கும்"ன்னு சொல்வதற்குச் சமம்.
கே: ரஜினி அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான அரசியலை எதிர்பார்க்கலாம்?
ப: இன்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்து முக்கிய முடிவுகள் எடுப்பதில்லை. ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும், சட்டையைக் கிழித்துக் கொள்வதையும் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்றொரு கட்சியைச் சேர்ந்தவரிடம் நட்புடன் பேசினாலே ஆச்சரியமாகப் பார்க்கும் நிலைமை இங்கு இருக்கிறது.
அப்படி ஏதாவது நடந்து விட்டால், அது பத்திரிக்கை செய்தியாகக் கூட வருகிறது.
இதுவே நம் ஊரின் அரசியல் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்குச் சான்று. ரஜினி வந்தால், அந்தச் சூழ்நிலை நிச்சயம் மாறும்.
Divisive politics-ஐ மட்டுமே செய்து கொண்டிருக்கும் நம் அரசியல்வாதிகளுக்கு inclusive politics என்ன என்பதைப் புரிய வைக்கும் நேரம் வந்து விட்டது.
தன்னை மோசமாக விமர்சிப்பவர்களையும் புன்முறுவலுடன் அணுகும் ரஜினியின் குணம் அந்த மாற்றத்திற்கு வித்தாக அமையும்.
உதாரணத்துக்குத் தன்னை விமர்சித்த அன்புமணி ராமதாஸ், சீமான் போன்றோரை தனது பேச்சில் அவர்களின் தனித்திறமைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை அநாகரீகமாக விமர்சிக்க மாட்டார் என்று உறுதியாக நம்பலாம்.
முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன், மற்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பது, மாநிலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள அனைவருடனும் சேர்ந்து குழுவாகச் செயல்படுவது, போன்ற நேர்மையான அரசியலை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
சுருக்கமாக அரசியலில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழ்நாடு இருக்கும்.
கே: ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குச் சமூக ஊடகங்களில் நிறைய எதிர்ப்பு இருக்கிறதே?
ப: சென்னையை வெள்ளம் உலுக்கிய போது சமூக ஊடகங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பலமான எதிர்ப்பலை இருந்தது.
ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்ததே?!
ஆங்கிலத்தில் "Take it with a pinch of salt" என்று சொல்வார்கள். அது போல, ஃபேஸ்புக்கில் வருகிற கருத்துகளும், Memes களும் பெரும்பான்மையின் ஒருமித்த கருத்தாகி விடாது.
ரஜினி அரசியலுக்கு வருவதை 90% அரசியல் கட்சிகள் வெளிப்படையாக எதிர்க்கின்றன, மீதமுள்ள 10% கட்சிகள் மறைமுகமாக எதிர்க்கின்றன.
முன்பெல்லாம், ஒரு கட்சிக்குச் சாட்டிலைட் சானல் இருந்தால் போதும், அதை அவர்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, மற்ற கட்சித்தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும், அதில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பயன்படுத்தினார்கள்.
ஆனால், இன்று ஃபேஸ்புக் பக்கங்கள், ட்விட்டர் கணக்குகள் இருந்தால் போதும், அவற்றையெல்லாம் மிகச் சுலபமாகச் செய்து விடலாம்.
நேரடியாகச் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இவ்வாறு, நிறைய "Likes" இருக்கும் பக்கத்திற்குச் செல்வாக்கு அதிகமாகிறது.
இன்று இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தோ, குறிப்பிட்ட சாதியை ஆதரித்தோ தான் இயங்குகின்றன.
மேலும், மற்ற சில நடிகர்களின் ரசிகர் பக்கங்களும் இவ்வாறான அவதூறுகளைப் பரப்புகின்றன. அவர்கள் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பும் போது, அது மிகச் சுலபமாக நிறையப் பேரை சென்றடைகிறது.
லட்சக்கணக்கில் Likes இருக்கும் பக்கங்களுக்கு அரசியல் கட்சிகள் காசு குடுத்து அவதூறு பரப்ப செய்கிறார்கள்! இதெல்லாம் இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதனால், இவற்றையெல்லாம் நாம் பெரிது படுத்தக் கூடாது.
அதோடு ஊடகங்களுக்கு ரஜினி பெயரைக் கூறினால் எப்படி TRP / Hits கிடைக்கிறதோ அதே போல ரஜினி குறித்து Meme போடுவதும் தங்களின் பக்கங்களுக்கான கவன ஈர்ப்பே!
ரஜினி திங்கள் பேட்டி கொடுத்த போது வழக்கம் போலப் பலரும் Meme போட்டுக் கிண்டலடித்தார்கள். பின்னர் வெள்ளி தனது நிலையை வெளிப்படையாக விளக்கிய பிறகு இதன் தாக்கம் குறைந்து விட்டது.
அதோடு தாங்கள் விளையாட்டுக்கு செய்ததைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதை உணர்ந்த பொதுவானவர்கள் இதில் இருந்து விலகிக்கொண்டார்கள்.
பலர் ரஜினியின் நிலை என்னவென்று தெரியாததாலே விமர்சித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தவறு இல்லை.
ரஜினி அரசியலுக்கு அதிகாரப்பூர்வமாக வந்து தனது கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் போது தற்போது எதிர்ப்பவர்கள் புரிந்து கொண்டு தங்கள் நிலையை மாற்றிக்கொள்வார்கள்.
கே: இவ்வளவு பரபரப்பை உருவாக்கிவிட்டு, அவர் அரசியலுக்கு வரவில்லையென்றால்?
ப: இந்தப் பரபரப்பு, ஊடகங்களினால் உருவாக்கப்பட்டது.
இன்று தமிழ் நாட்டில் இருக்கும் ஊடகங்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. அத்தனை ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு இந்தத் தலைப்பை கையிலெடுத்துக் கொண்டு விவாதம் செய்கிறார்கள்.
விவாதம் செய்ய ஒருவர் ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் பேச வேண்டும். இதற்காக ஆட்களைத் தேடுவதில் அவர்கள் அதீதமாக மெனக்கெடுகிறார்கள்.
இதனாலேயே பெயர் கூடத் தெரியாத, லெட்டர் பேடு கட்சிகளைச் சேர்ந்தவர்களையெல்லாம் வரவழைத்து பேசுகிறார்கள். இதனால், இலவசமாக அவர்கள் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இந்தச் சூழல் உருவாக முழுக் காரணமும் ஊடகங்கள் தான். பிழைக்கவும் பழிக்கவும் ரஜினி என்றாகி விட்டது.
அவர் ஆண்டவன் அருளால் உடல்நிலை தேறி வந்ததே போதும் என்று இருந்தோம்! சிறிது காலம் ஓய்வெடுத்தபின் எங்களுக்காக அவர் மீண்டும் திரையில் வந்து விட்டார். இதுவே எங்களுக்குப் போனஸ் தான்!
அவர் வந்தால் தமிழ்நாட்டில் மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்ப்பில் உள்ளவர்களைப் போல எங்களுக்கும் சிறு வருத்தம் / ஏமாற்றம் இருக்கும்.
இது எதார்த்தம், தவிர்க்க முடியாதது.
அனைத்தையும் விட, அவருடைய உடல் நலம் மட்டுமே எங்களுக்குப் பெரிது. அவர் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
இதுவே எங்களுடைய முழுமையான எந்தச் சந்தேகமுமில்லாத விருப்பம்!
- Rajinifans.com Team
|