திருச்சி: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை, தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
காரணம் இந்த மாநாட்டுக்குக் குவிந்த கூட்டம் மற்றும் போலீஸ் கெடுபிடிகளுக்கு அவசியமின்றி அவர்கள் நடந்து கொண்டவிதம்.
இது ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி அறிவிக்க, ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்ய நினைக்கிறார் என்பதை அறிவிக்க நடத்தப்பட்ட கூட்டம். ஆனால் இந்தக் கூட்டத்துக்கு அனைவரும் செல்லுங்கள் என்று ரஜினியோ, அவரது ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியோ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதேபோல ரஜினியோ அவரது நண்பர்களோ கூட கலந்து கொள்ளவில்லை.
ஆனாலும் தமிழகம் முழுவதிலும் இருந்து தங்கள் சொந்த செலவில் பேருந்து, வேன், கார்கள் மூலம் பல ஆயிரம் ரசிகர்கள் நேற்று திருச்சியில் வந்து குவிந்துவிட்டனர்.
ஈரோடு மாவடத்தைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் பைக் முருகேஷ், சாம்ராஜ் ஆகியோர் 100க்கும் அதிகமான வாகனங்களில் தங்கள் பகுதி மக்களை அழைத்து வந்திருந்தனர்.
“நாங்கள் யாருக்கும் பணம் தரவில்லை. இவர்களில் ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் உண்டு. விருப்பமிருப்பவர்கள் வாங்க என்று அழைத்தோம். வந்தார்கள். குறுகிய கால ஏற்பாடு இது. ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக வரச் சொல்லியிருந்தால், நிலைமையே வேறு..,” என்றார் சாம்ராஜ்.
வேலூர் மாவட்ட தலைவர் சோளிங்கர் ரவியும் 100-க்கும் அதிகமான வாகனங்களில் ரசிகர்களை அழைத்து வந்திருந்தார்.
விழுப்புரம், திருப்பூர், சேலம், மதுரை, நெல்லை என பல மாவட்ட ரசிகர்களும் மாநாட்டுக்கு வந்திருந்தனர்.
மாலை 6 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பமாவதாகச் சொல்லியிருந்தனர். ஆனால் 4 மணிக்கே குவிந்துவிட்டனர். சரியாக 8.45க்கெல்லாம் கூட்டம் முடிந்ததால், மக்கள் திரும்பிச் செல்வது சுலபமாக இருந்தது. போலீசுக்கும் வேலையில்லாமல் போனது.
மாநாட்டுத் திடலிலோ, வெளியிலோ மதுப்புட்டிகள் இல்லாதது இன்னொரு ஆச்சர்யம்.
மொத்தத்தில் ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்த இந்த முதல் மாநாடு, ரஜினி பங்கேற்காமலேயே, பெரிய வெற்றியாக அமைந்துவிட்டது.
திருச்சியை நிஜமாகவே அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்!
நேற்று ஞாயிற்றுக் கிழமை.. விடுமுறை நாள். பொதுவாக இந்த நாளில் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் நேற்று விதிவிலக்கு. திருச்சிக்கு வரும் அத்தனை நெடுஞ்சாலைகள் ஏகத்துக்கும் பிஸி. எங்கும் ரஜினி ரசிகர்களின் வாகனங்கள்மயம்.
வழியில் உள்ள கடைகளிலெல்லாம் ரசிகர்களின் வாகனங்கள் நின்றிருக்க, கடைகளில் திடீர் நெரிசல்.
பகல் 2 மணிக்கெல்லாம் சாலையோர உணவகங்களில் பகலுணவு தீர்ந்து போயிருந்தது.
“வழக்கமா 4 மணி வரைக்கும் சாப்பாடு இருக்கும். பல நாட்கள் சாப்பாடு மீந்து போய், வெளியில் கொட்டுவோம்… இல்லன்னா யாருக்காவது தருவோம். ஆனா இன்னிக்கு 2 மணிக்கே தீந்து போச்சி… ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாராமில்ல…நிறையப் பேரு வந்துட்டாங்க. அதான்,” என்றார் ஒரு ஓட்டல்காரம்மா.
காலையிலிருந்தே நிறைய வாகனங்கள் ரஜினி படம், ரஜினி கொடி கட்டிக் கொண்டு சுங்கச் சாவடிகளைக் கடந்த வண்ணமிருந்தன. கவனமாக இவற்றைப் பார்த்து, குறிப்பெடுத்துக் கொண்டனர். சில வாகனங்களை மடக்கி, “என்னப்பா இவ்ளோ வண்டில வரீங்க… உண்மையிலேயே கட்சி ஆரம்பிக்கிறாரா ரஜினி? இந்த ஆளுங்களையெல்லாம் எங்கே புடிச்சீங்க… எவ்ளோ கொடுத்தீங்க?,” என்றெல்லாம் விசாரித்தனர்.
“சார்… யாருக்கும் காசு தரல.. வேணும்னா கேட்டுப் பாருங்க…,” என்று தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டு வந்தனர்.
திருச்சி – கரூர் பைபாஸ் சாலை மாலை 4 மணிக்கே ஜாமாகிவிட்டது. வாகனங்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சாலையை இரு பக்கத்திலும் மூடி விட்டனர் காவல் துறையினர். பின்னர் மேலிடத்தில் பேசிய பிறகு 5 மணிக்கு சாலையைத் திறந்துவிட்டனர். ஒரு பெரிய ஊர்வலம் மாதிரி மக்கள் வெள்ளம் திரண்டுவிட, அங்குலம் அங்குலமாக நகர்ந்தது கூட்டம்.
வந்த கூட்டத்தின் எண்ணிக்கை குறித்து ஒரு போலீஸ் அதிகாரியிடம் பேசினோம். “12 மணி வரை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ரஜினி ரசிகர்களின் வாகனங்கள் வந்தன. ஆனால் திடீரென்று பார்த்தால் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் வண்டிகள் வந்துவிட்டதால் பார்க்கிங் பிரச்சினை வந்துவிட்டது. அதனால்தான் சிறிது நேரம் சாலையை மூடினோம். எப்படிப் பார்த்தாலும் 50 ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். துல்லியமாகச் சொல்ல முடியாது,” என்றார்.
-என்வழி
|