ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதே உங்களுக்காக சில விஷயங்கள்...
‘கபாலி’ படத்தில் ரஜினி தன்னம்பிக்கை நிறைந்த கோபக்காரராக நடித்திருக்கிறாராம். இப்படத்தில் இவருக்கு பஞ்ச் வசனங்களே கிடையாதாம். ஆனால், நெஞ்சை ஊடுருவும் நிறைய வசனங்களை பேசியிருக்கிறாராம்.
ராதிகா ஆப்தே இப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் தோட்டத் தொழிலாளி குமுதவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின்னர் கணவன், மனைவிக்குள் ஏற்படும் ஒரு அன்யோன்யமான உறவை ரஜினியும், ராதிகா ஆப்தேயும் இணைந்து சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்களாம்.
தன்ஷிகா, இப்படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த படத்துக்காக தனது தலைமுடி கெட்டப்பை மாற்றியிருக்கிறார். ரஜினிக்கு எதிராக சவால்விடுகிற தாய்லாந்து கேங்ஸ்டராக வருகிறாராம்.
கலையரசன், கேங்ஸ்டர் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக ரஜினி நடத்தி வரும் ஸ்கூலில் ஆசிரியராக நடித்திருக்கிறாராம். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ் குமரன்.
அட்டக்கத்தி தினேஷ், இன்னொரு கேங்ஸ்டரின் மகன். ஆனால், ரஜினியின் ஸ்டைலால் கவரப்பட்டு கபாலியுடனே வலம் வருகிறாராம். இதுவரை காமெடி, வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஜான் விஜய், இந்த படத்தில் அமீர் என்ற கதாபாத்திரத்தில் கபாலியின் நண்பனாகவும், ஆலோசகராகவும் நடித்திருக்கிறாராம். அதேபோல், மலேசியா நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்களாம்.
கபாலியின் எதிரிகளாக கிஷோர், வின்ஸ்டன் சாவ் ஆகியோர் வருகிறார்கள். ரஜினி இப்படத்தின் தனது ஒரிஜினல் வெள்ளை தாடியோடு 75 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதத்திலேயே டப்பிங் பணிகளை தொடங்கவிருக்கின்றனர். வெகு சீக்கிரத்தில் கபாலி வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|