லிங்கா
இப்படம் ஏற்படுத்திய காயங்களை எந்த ஒரு தலைவர் ரசிகனும் தன் வாழ்நாளில் மறக்க மாட்டான். தோல்வி என்பது எவருக்குமே இயல்பான ஒரு நிகழ்வு ஆனால், அந்தத் தோல்வி திட்டமிடப்பட்டு முதுகில் குத்தப்பட்டு நடைபெற்றது தான் மறக்க முடியாத நினைவுகளுக்குக் காரணம்.
பல ரசிகர்களுக்கு லிங்கா இன்னும் பிடித்த படமாக இருந்தாலும், எனக்குத் திருப்தியளிக்காத படமே! இதைக் கடந்த முறை கூறிய போது ரசிகர்கள் பலர் கோவித்துக்கொண்டார்கள்.
பார்வை என்பது ஒவ்வொருவருக்கும் மாறும். எனவே ஒரு படம் குறித்தான மாற்று கருத்து என்று கருதி விட வேண்டியது தான்.
படம் சரியில்லை, பொதுமக்கள் பலருக்கு பிடிக்கவில்லை என்பதெல்லாம் சரி! ஆனால், நியாயம் என்ற ஒன்றுள்ளது.
தகுதிக்கு மீறி அதிக விலைக்கு விற்கப்பட்ட படம்
இதுவே பலரின் குற்றச்சாட்டு. சரி! நீங்க ஏன் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்? யாரும் வாங்கியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்களா?! இல்லையே.
பின் ஏன் வாங்க வேண்டும்? காரணம் பண ஆசை. படம் வெற்றி பெற்றால் அதன் மூலம் கிடைக்கும் லாபம்.
அதாவது, நான் லாபம் என்றால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன். நட்டம் என்றால் சண்டைக்கு வருவேன்!
இது என்னங்கய்யா நியாயம்? இவர்கள் லாபம் அடைந்தால் அதில் தயாரிப்பாளருக்கு பங்கு கொடுப்பார்களா? இல்லை. பின் நட்டத்தில் மட்டும் பங்கு என்றால்.. அது என்ன வியாபாரம்.
லாபம் மட்டுமே கிடைக்கும் வியாபாரம் உலகில் எதுவும் உள்ளதா? அப்படி இருந்தால் எல்லோரும் அதையே செய்யலாமே!
சிங்காரவேலன்
லிங்கா எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, வசூல் ஆகவில்லை சரி.. அதைக் கூறும் தருணம் எது? படம் வெளியாகி நான்கு நாட்களில் நட்டம் என்று அறிவுள்ளவன் எவனாவது, வியாபாரம் தெரிந்தவன் எவனாவது கூறுவானா?
நான் ரசிகன் என்பதால் கேட்கவில்லை.. லாஜிக்காகக் கேட்கிறேன்.
நீ ஒரு திரைப்படத்தில் பணம் முதலீடு செய்து இருக்கிறாய்.. அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்று கருதுகிறாய்.. சரி நியாயம்.
ஒரு வியாபாரி இந்த நிலையில் நட்டத்தைக் குறைக்கப் பார்ப்பானா? அல்லது அதிகரிக்கப் பார்ப்பானா?
மூளை உள்ளவனாக இருந்தால் குறைக்கப் பார்ப்பான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மேலும் விளம்பரத்தை அதிகப்படுத்த வேண்டும்.. சும்மாவாவது பாசிட்டிவான செய்திகளைக் கூற வேண்டும். அதன் பிறகும் எடுபடவில்லையா.. அது வேறு பிரச்சனை.
படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து, இது போல எங்களுக்கு இவ்வளவு நட்டம் ஏற்பட்டு இருக்கிறது. என்ன செய்யலாம் என்று தலைவரையோ தயாரிப்பாளரையோ சந்தித்துக் கேட்டு இருந்தால், ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் இவர்கள் செய்தது என்ன? தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சொன்னது போலத் தினம் தினம் படத்தைக் கொன்றார்கள்.
படம் வெளியாகி நான்காவது நாள் முதல், படம் தோல்வி என்று கூறிக் கொண்டு ஒரு விநியோகஸ்தரே தினம் தினம் பேட்டி கொடுத்தால், அது இனி வரும் வசூலை பாதிக்குமா பாதிக்காதா?
இதை யோசிக்க நீங்க ஒன்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் படித்து இருக்க வேண்டியதில்லை. சுய அறிவு என்ற ஒன்று இருந்தாலே போதுமானது.
நம்ம படத்தை நாமே கீழிறக்கினால் படம் பார்க்கலாம் என்று நினைப்பவர் போகலாம் என்று நினைப்பாரா?!
"என்னையா.. விநியோகஸ்தரே படம் சரியில்லை, நட்டம் என்று கூறிட்டு இருக்கிறார். நாம் ஏன் போகணும்? பணத்தை வீணாக்கனும்" என்று ஒரு பொது ஜனம் நினைப்பானா நினைக்க மாட்டானா?
இது இவருக்கு மட்டுமல்ல மற்ற விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் அனைவருக்கும் பிரச்சனையையே ஏற்படுத்தும் என்று தெரியாதா? அறிவு உள்ளவனாக இருந்தால் கண்டிப்பாகத் தெரிந்து இருக்கும்.
சம்பந்தமே இல்லாமல் மற்ற விநியோகஸ்தர்களையும் நட்டத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார் அல்லது லாபத்தைக் குறைத்து இருக்கிறார்.
சிங்காரவேலன் மட்டும் தினமும் பேட்டி கொடுக்காமல் இருந்து இருந்தால், நிச்சயம் இன்னும் கூடுதலாக வசூலித்து இருக்கும். சந்தேகமே இல்லை.
தினமும் இது குறித்துப் பேட்டி வந்தால், படிக்கும் பொது ஜனம் யோசிக்கத்தான் செய்வான்.
இதையும் மீறி செய்தால் அதில் உள் நோக்கத்தோடு செய்வதாகத் தான் கருத வேண்டி இருக்கிறது. தான் இது போலப் பேட்டி கொடுத்தால் மேலும் நட்டம் ஆகும் என்று தெரிந்தே ஒருவர் செய்தால் அதன் பெயர் என்ன?!
சரி அதோடு போனாரா.. பல கோடி ரசிகர்கள் மதிக்கும் ஒரு நபரை, தென் இந்தியா என்றாலே இளக்காரமாக நினைக்கும் வட இந்திய ஊடகங்களைத் தன் ஒரு பேட்டிக்காகக் காத்திருக்க வைக்கும் திறமை கொண்ட நபரை என்னவெல்லாம் பேசி விட்டார்.
'ரஜினி சார் தயவு செய்து புரிஞ்சுக்குங்க.. உங்களுக்கு மார்க்கெட் போய்டுச்சு!" இது மட்டுமா.. எனக்குக் கூறவே அவ்வளவு ஆத்திரமாக இருக்கிறது. கூறவும் விரும்பவில்லை.
இப்ப கபாலிக்கு நடந்துட்டு இருப்பதைப் பார்த்துட்டு தானே இருக்கிறாரு சிங்காரவேலன்.
லிங்கா சமயத்தில் தலைவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் கபாலியின் போது இருக்கும் மதிப்பும் மரியாதையும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்யாசமாக உள்ளது. கபாலி உலக அளவுல பரபரப்பா இருக்கு.
இப்ப தெரியுதா தலைவரோட மார்க்கெட் வேல்யூ என்னென்னு?!
அட்ரா மச்சான் விசிலு
நட்டமான பணத்தையும் தலைவரை அசிங்கப்படுத்தி வாங்கிக் கொண்டு, தலைவரை அவமதித்து வாங்கிய அதே பணத்தில் படத்தையும் எடுக்க என்ன ஒரு கெட்ட எண்ணம் வேண்டும்?!
இதில் இவர் தயாரிப்பாளர் என்று அதிகாரப் பூர்வமாக இல்லை ஆனால், இவர் தான் மறைமுகத் தயாரிப்பாளர் என்று அனைத்து ஊடகங்களும் கூறி விட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதோடு சிங்காரவேலனை ஆபாசமாகத் திட்டி (தயாரிப்பாளர் என்ற முறையில்) படத்தின் இயக்குநர் திரைவண்ணன் தொலைபேசியில் பேசியது WhatsApp ல் ஆடியோவாக வலம் வந்தது.
மற்றவங்க நாம் இருவர் மட்டும் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் கூறியதை, தான் மட்டும் எச்சரிக்கையாகப் பேசி பதிவு செய்து WhatsApp ல் வெளியிட்டு வந்த சிங்காரவேலனுக்கு, அவர் பேசியதே வந்தது அதிர்ச்சியாக இருந்து இருக்கும்.
தன் வினை தன்னைச் சுடும்.
இப்ப படத்தோட நிலை என்ன தெரியுமா ரசிகர்களே?
4 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 40 லட்சம் கூட வசூல் செய்யவில்லையாம்!! இது என்னுடைய சொந்தக் கற்பனை செய்தியல்ல, செய்திகளில் வந்தது தான்.
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைப்பது என்னைக்குமே நிலைக்காது.
இந்தப் படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க இணையத் தளங்களுக்குச் செலவழித்து என்னென்னமோ ப்ரோமோஷன் எல்லாம் செய்தார். ஒரு பெரிய நடிகர் படத்துக்குக் கூட இது போலச் செய்திகள் வருமா என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு அது இதுன்னு ஏகப்பட்டது.
ஈரோஸ் பாடலை வாங்கி விட்டார்கள். பாட்டு அப்படி இப்படி.. GV பிரகாஷ் பாடி இருக்காரு.. செமையா இருக்கு. அது இதுன்னு ஏகப்பட்ட பில்டப்.
எனக்கு முதல்ல சிவா எப்படி நடிக்க ஒத்துக்கிட்டாருன்னு புரியல.. சும்மா தலைவர் ரசிகன்னு சொல்வதெல்லாம் வாயில வடை சுடுவது தான். பணம் கொடுத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.
பவர் ஸ்டார் ஒரு கோமாளி, அவர் மீது எனக்குக் கோபமில்லை அதோடு மற்றவர்கள் சிறு வேடங்களில் வாய்ப்பு கிடைத்து நடிப்பவர்கள். ஆனால், சிவா, GV பிரகாஷ் போன்றவர்களுக்குப் படம் என்னவென்று தெரியும்.. யார் தயாரிப்பாளர் என்று தெரியும்.
தெரிந்தும் நடித்து, பாடிக் கொடுத்துள்ளார்கள் என்றால்... GV தன் படத்தை விளம்பரப்படுத்த தலைவர் வசன தலைப்பு வேண்டும் ஆனால், அவமானப்படுத்தும் படத்திலும் தன் பங்கை தெரிந்தே செய்வார்.
இவர்களை எல்லாம் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. சிவா, GV.. தலைவர் ரசிகர்கள் நீங்கள் செய்ததை மறக்க மாட்டார்கள் .
சிவா தலைவரை கிண்டல் செய்யும் ஸ்பூஃ படத்தில் நடித்ததில் எனக்கு வருத்தமில்லை.. அப்படி நடித்ததற்காகக் கோபப்படுவதில் நியாயமுமில்லை... ஆனால், தயாரிப்பாளர் யார் என்றும் அவர் எதற்கு எடுக்கிறார் என்று தெரிந்தும் நடித்தீர்கள் அல்லவா..! அது தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆனால், இறுதியில் நடந்தது... அனைவரும் படத்தைப் புறக்கணித்து விட்டார்கள். உண்மையில் நானே இதை எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுக்குப் படு மோசமாகப் படம் பப்படம் ஆகும் என்று நினைக்கவில்லை.
இவ்வளவுக்கும் பண்டிகை விடுமுறை நாளில் வெளியான படம். நான்கே நாளில் திங்கள் கிழமையே பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் எடுத்து விட்டார்கள்.
இதோட விட்டார்களா.. "இப்படி ரஜினியை, ரஜினி ரசிகர்களை அவமதித்து இருக்கிறார்கள் உங்களுக்குச் சூடு சொரணை இல்லையா?" என்கிற ரேஞ்சுக்கு உசுப்பி விட்டு விளம்பரம் தேட முயற்சித்தார்கள்.
ஆனால், நல்ல வேளை ரசிகர்கள் உண்மையைப் புரிந்து இவர்களை எல்லாம் பொல்லாதவன் படத்தில் கிஷோர் சொல்வது போல.. "அப்படியே விட்டுடனும்" என்று விட்டு விட்டார்கள்.
இவர்களை எல்லாம் ஒரு ஆள்னு மதிப்பு கொடுத்து எதிர்ப்புக் காட்டியிருந்தால் நமக்குத் தான் நட்டம், அசிங்கம். நான் கூட ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் அவர்கள் எதிர்பார்ப்பதை செய்து விடுவார்களோ என்று பயந்தேன்.
வாழ்த்துகள் ரசிகர்களே! உண்மையாகவே நீங்கள் புறக்கணித்தது படத்துக்குத் தர்ம அடியாகி விட்டது.
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கை விடமாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறையக் கொடுப்பான் ஆனால் கை விட்டுடுவான்.
திரைப்பட வசனங்கள் நிஜ வாழ்விலும் பொருந்துவது தலைவருக்கு மட்டுமே!
சிங்காரவேலன் மட்டுமல்ல இன்னும் பலர் தலைவரை அசிங்கப்படுத்துகிறார்கள், கிண்டலடிக்கிறார்கள், அவதூறாகப் பேசுகிறார்கள். தலைவரை எப்படியாவது தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு இருக்கிறார்களோ அதை விடப் பல ஆயிரம் மடங்கு தலைவர் உயர உயர போய்க் கொண்டே இருக்கிறார்.
என்ன கதறினாலும் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது!
படத்துக்குப் படம் அவர் புகழ் உலகமெங்கும் பரவுகிறது. தமிழன் இல்லை என்றார்கள் ஆனால், இவரால் தரணியெங்கும் தமிழன் புகழ் பரவுகிறது.
பின் குறிப்பு
"கிரி எதுக்குங்க.. சிங்காரவேலன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவருக்கு ஒரு கட்டுரை எழுதி இருக்கீங்க?" என்று சிலர் நினைத்து இருக்கலாம். உண்மையில் லிங்கா சமயத்தில் ஒரு ரசிகனாக எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இது சிறு மருந்து, ஆறுதல்.
அதோட சில விசயங்களை அனைவரும் அறிந்து / புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டது.
கடவுள் இருக்கார்! தவறு செய்பவர்களைத் தண்டிப்பார்! உண்மையாக நடந்து கொள்பவர்களை உயர்த்துவார்! என்பதை இந்த நிகழ்வுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் சிரமங்கள் இருந்தாலும்.
எனவே யாரையும் ஏமாற்றாதீங்க. ஒருவன் கெட்டுப் போகணும் என்று நினைக்காதீங்க. நமக்குத் தீங்கு இழைத்தவர்கள் அவர்களாவே அழிந்து போவார்கள்.
தலைவர் கூறிய தவளைக் கதை போல எதையும் கண்டு கொள்ளாமல் நல்லதை மட்டுமே நினையுங்கள். தலைவரைப் போல நாமும் உயர்வு பெறலாம்.
தலைவர் ரசிகன் என்றால் படத்துக்குச் சென்று ஆட்டம் போட்டு வருவது மட்டுமல்ல. அவரிடம் இருந்து நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு பின்பற்றி நடப்பது தான் ரசிகனாக அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதை.
- கிரி
|