27 July 2012
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, ‘கும்கி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க, ‘மைனா’ படத்தை இயக்கிய பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.
பாடல்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில், கலைஞானி கமல்ஹாசன் வெளியிட, சூர்யா பெற்றுக்கொண்டார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினி மேடையில் பேசினார்.
“நான் சினிமா படவிழாக்களில் அதிகமாக கலந்து கொள்வதில்லை. ஒரு விழாவுக்கு போய்விட்டு இன்னொரு விழாவுக்கு போகவில்லை என்றால், அந்த விழா சம்பந்தப்பட்டவர்கள் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எனக்கு எதிரிகள் கிடையாது. எல்லாரும் நண்பர்கள் தான். எனக்கு நானே எதிரி.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். அதுவே ஒரு சுமையாக மாறிவிடுகிறது. எந்த விஷயத்திலும் அப்படித்தான்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த பின், “நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அது முழுமையாக கிடைக்கும் வரை, பொது நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டாம்” என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த படவிழாவுக்கு என்னை அழைத்தபோது, டாக்டர்கள் கூறியதை பிரபுவிடம் சொன்னேன். இருப்பினும், விழா நடப்பதற்கு முன்தினம் காலை நான் வீட்டில் இல்லையென்றாலும், பிரபு நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்து விட்டுப் போய் இருப்பதாக வீட்டில் சொன்னார்கள். ஏன் தம்பின்னு கேட்டேன். அது கடமைன்னு சொன்னார்.
அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. தமிழ் சினிமாவின் முதல் மனிதர், சிவாஜி. அவருடைய அன்னை இல்லத்தில் நடக்கும் விழாவுக்கு நாம் போகவில்லை என்றால், எப்படி? என்று உறுத்தியது. காலையில் பிரபுவுக்கு போன் போட்டு, நான் வருகிறேன் என்று கூறினேன்.
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்றபோது, கமல்ஹாசன் என்னைப்பார்க்க வந்தார். டாக்டர்கள் அனுமதிக்காததால், வருத்தத்துடன் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலில் கமல்ஹாசனிடம் பேசினேன். “நான் புரிந்து கொண்டேன். எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள் ஓய்வு எடுங்கள்” என்று கமல் கூறினார். “லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்” என்ற ஹாலிவுட் படம் எடுத்த டைரக்டரிடம் இருந்து கமலுக்கு அழைப்பு வந்து இருக்கிறது. இது, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே பெருமை.
நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்து வந்தது ஜனங்களின் பிரார்த்தனையாலும், அன்பாலும்தான். அந்த ஜனங்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை. அதனால் அவர்களை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. கூச்சமாக இருக்கிறது. வெட்கமாக இருக்கிறது. கடன் வாங்கி விட்டு, திருப்பிக் கொடுக்க முடியாத கடன்காரனைப்போல் ஓடி ஒளிகிறேன். என்னை போன்ற நடிகர்கள் ஓரளவு நல்ல ஜனரஞ்சகமான படங்களில் நடிப்பதன் மூலம் அதை திருப்பி செலுத்த முடியும் என்று கருதுகிறேன்.
மூளையை மட்டும் பயன்படுத்துவதற்கு நான் டைரக்டரோ, எழுத்தாளரோ இல்லை. நான் நடிகர். எனக்கு உடம்பு வேலை செய்ய வேண்டும்.
நான் சினிமாவுக்கு வந்தபோது, எங்க அப்பா சந்தோஷப்பட்டார். ஆனால், விக்ரம் பிரபு சினிமாவுக்கு வருகிறார் என்றதும் பிரபுவுக்கு கவலை வந்திருக்கும். பையன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டுமே… நம் பெயரை காப்பாற்ற வேண்டுமே என்று கவலைப்பட்டிருப்பார். ஒரு சாதனையாளரின் மகனாக இருப்பது ரொம்ப பொறுப்பு மிகுந்தது.
இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.
‘படையப்பா’ படப்பிடிப்பின்போதுதான் சிவாஜி சாருடன் ரொம்ப நேரம் பேசுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒருநாள் அவர் என்னிடம், ‘நீ புத்திசாலி. காலரை தூக்கி விடுவது இல்லை. தூக்கினால், சட்டை பட்டன் எகிறிவிடும் என்று புரிந்து வைத்து இருக்கிறாய்’ என்றார்.
விக்ரம் பிரபு பயப்படுறதா கமல் சொன்னாரு. பயப்படுங்க, தப்பில்ல. கவலைப்படாதீங்க. பிரபுசாலமன் மாதிரி டெக்னீஷியன்கள் உங்களை கைபிடிச்சு அழைச்சிட்டுப் போவாங்க.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:
‘விக்ரம் பிரபு யானையின் இரண்டு தந்தங்களை பிடித்தபடி, அதன் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்து, அந்த யானையை அவர் தாத்தா (சிவாஜி)யுடன் ஒப்பிட்டார்கள். அதே யானையை பிடித்துக்கொண்டுதான் நானும், ரஜினியும் உயரே வந்தோம். எங்களை தூக்கி விட்டது அந்த அந்த யானைதான். நான் ஒரு தந்தத்தையும், ரஜினி ஒரு தந்தத்தையும் பிடித்துக்கொண்டோம்.
சிவாஜி குடும்பத்தில் என்னையும் ஒரு மகனாக ஏற்றுக்கொண்டது, அவருடைய பெருமிதம். ராம்குமார், பிரபு இருவரும் என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது, எனக்கு பெருமை. அவர் (சிவாஜி) இல்லாதபோதும் எங்கள் உறவு தொடர்கிறது.
விக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து ராம்குமார், பிரபு மட்டுமல்ல, அவருடைய பெரியப்பா நானும் பெருமைப்படுகிறேன். விக்ரம் பிரபு முதல் படியில் அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார் என்றார்கள். அவர் அருவி மீது அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார். அந்த அருவியில் இருந்து கொட்டுவது, எங்கள் அன்பு. இந்த படத்துக்கு மினிமம் கேரண்டி கொடுக்கலாம். ‘கர்ணன்’ படம் ஓடுவதைப் பார்த்தீர்களா?
“ரஜினி ரொம்ப நியாயமான மனிதர். எங்கள் இரண்டு பேரையும் இந்த விழாவுக்கு அழைத்ததில், சந்தோஷம். எங்கள் வீட்டு செங்கலில் சிவாஜியின் பெயர் இருக்கும். நான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம், என் குருநாதர் (சிவாஜி) இருந்தபோதே ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் அவருக்கு சலாம் போட்டதுதான். அது நான் செய்த பாக்கியம்.” மேற்கண்டவாறு கமல்ஹாசன் பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் விபரம் :
விழாவை டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் தொடங்கி வைத்தார். விழாவில் நடிகர்கள் சத்யராஜ், பிரபு, சூர்யா, கார்த்தி, சிபிராஜ், ஷக்தி, அஸ்வின் ராஜா, டைரக்டர்கள் பி.வாசு, பார்த்திபன், பாண்டியராஜன், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சசி, பன்னீர், சரவணன், படஅதிபர்கள் டி.சிவா, ஞானவேல் ராஜா, தனஞ்செயன், இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் சுகுமார், பாடல் ஆசிரியர் யுகபாரதி ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
பட அதிபர் சுபாஷ்சந்திரபோஸ் வரவேற்று பேசினார். டைரக்டர் பிரபு சாலமோன், கதாநாயகன் விக்ரம் பிரபு ஆகிய இருவரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
ஒரு தடவை சொன்னா….
சூப்பர் ஸ்டாரின் ONE OF THE BEST SPEECHES இது என்றே சொல்லலாம்.
* “எனக்கு எதிரிகள் கிடையாது. நானே எனக்கு எதிரி” என்று அவர் கூறியிருக்கும் வாக்கியம் அர்த்தம் மிக்கது. ஆழமானது.
* வருடத்திற்கு மூன்று படங்களிலாவது நடிங்க. ஒன்னு சரியாப் போகலேன்னா இன்னொன்னு கைகொடுக்கும் என்று அவர் இளம் நடிகர்களுக்கு கூறியுள்ள அறிவுரை அவரது துறை சார்ந்த புரிதலை பறை சாற்றுகிறது.
* கமல் அவர்கள் பற்றி குறிப்பிட்டு அவருக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை என்று கூறியிருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. நாமும் கமல் அவர்களை வாழ்த்துகிறோம். மேலும் ரஜினி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, “உடல்நலம் குன்றியுள்ள தனது நண்பனை கமல் என் சந்திக்கவில்லை?” என்று தேவையின்றி கமலை விமர்சித்த சில ரசிகர்களுக்கு சரியான பதில் கிடைத்துள்ளது.
* “எனக்கு எழுதவோ இயக்கவோ நாலேட்ஜ் கிடையாது. எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும்” என்று கூறியிருப்பது, தனது பிளஸ் என்ன மைனஸ் என்ன என்பதை அவர் தெரிந்துவைத்திருப்பதை காட்டுகிறது. (உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்….!)
* சிவாஜி அவர்கள் சட்டை காலரை தூக்கிவிடுவதைப் பற்றி கூறியதாக சொன்னது டிபிக்கல் ரஜினி டச்.
* இறுதியாக ரசிகர்கள் பற்றி அவரது உரையை கேள்விப்பட்டு பல ரசிகர்கள் கனகலங்கிவிட்டனர். அவரது உள்ளத்தில் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடு அது. ரசிகர்கள் தொடர்பான கமிட்மென்ட் அவரது மனசாட்சியை உறுத்திக்கொண்டே இருப்பதும் அதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுல்லதும்…. கிரேட். தட் இஸ் தலைவர்!
* ரசிகர்களுக்கு தான் கடன்பட்டதை கூறும்போது, “என்னை போன்ற நடிகர்கள் ஓரளவு நல்ல ஜனரஞ்சகமான படங்களில் நடிப்பதன் மூலம் அதை திருப்பி செலுத்த முடியும் என்று கருதுகிறேன்.” என்று கூறியிருப்பது சிலருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. தன் உணர்வுகளின் வெளிப்பாடுகளை வேறு வகையில் ரசிகர்கள் அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்காக இப்படி கூறியிருக்கிறார். (செம உஷாருப்பா ஆனாலும்!)
|