Related Articles
சிவாஜி 3D 12.12.2012 அன்று வெளியாகிறது
2012 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள் - பகுதி 2
தமிழக முதல்வர் தலைமையேற்ற எம்.எஸ்.வி அவர்களின் பாராட்டு விழாவில் ரஜினி
சிவாஜி 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்!
கும்கி இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரையும் அது உணர்த்தும் பாடங்களும்!
2012 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள்
ரஜினியின் 62வது ரசிகர்களின் பிறந்த நாள் விழா! ரசிகர்கள் உற்சாகம்!!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் கோச்சடையான் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Superstar Rajinikanth fans offer prayers for Rajini his health recovery
ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் - முழு தொகுப்பு செய்திகள்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
12 12 12 ரசிகர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட ரஜினி - மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தார்!
(Wednesday, 12th December 2012)

 

22 ஆண்டுகள் ஏன் ரசிகர்களைச் சந்திக்கவில்லை? – சூப்பர் ஸ்டார் பேச்சு -1

சென்னை: ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த 22 ஆண்டுகள் என் பிறந்த நாளன்று நான் ரசிகர்களைச் சந்திக்காமல் இருந்தேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

வியாழக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் சென்னை மாவட்ட ரசிகர்கள் நடத்திய பிறந்தநாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் நடத்திய விழாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், கருணாஸ், கே ராஜன், நடிகை நமீதா உள்பட பலரும் பங்கேற்று சூப்பர் ஸ்டாரை வாழ்த்திப் பேசினர் (இவர்கள் பேச்சு தனி தொகுப்பாக தரப்படும்).

இந்த விழாவின் சிறப்பு சூப்பர் ஸ்டாரின் 35 நிமிட உரை. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு அதிக நேரம் அவர் பேசியதும் இதுவே முதல் முறை.

ரசிகர்களை பிறந்த நாளன்று ஏன் சந்திப்பதில்லை? 1996-ல் ஏன் அரசியலுக்கு வந்தார்? பிறகு ஏன் அரசியல் பற்றி பேசுவதில்லை? பாமகவை எதிர்த்தது ஏன்? இனி அரசியலுக்கு வருவாரா? உடல் நிலை சரியில்லாமல் போனது ஏன்? இப்போது எப்படியிருக்கிறார்? என ரசிகர்கள் மனதிலிருந்த பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது அவர் பேச்சு.

அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தில் மூழ்கி வந்தது. உள்ளத்தின் தூய்மை அந்த வார்த்தைகளில் எதிரொலித்தது. ஒரு குடும்பத் தலைவனுக்கே உரிய பொறுப்போடும், கண்ணியமும் கண்டிப்பும் பரிவும் மிக்க தலைவனின் இலக்கணத்தோடும் அவர் ரசிகர்களிடம் பேசினார்.

வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், அவரது பேச்சை கண்களில் கண்ணீர் மின்ன கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.


 

சூப்பர் ஸ்டார் பேச்சிலிருந்து…

இந்த விழாவுக்கு வந்திருக்கும் நண்பர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், நமீதா, கருணாஸ், ராஜன் உள்ளிட்டவர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த என் ரசிகர்களுக்கும்- யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் தவறாக நினைக்காதீர்கள்- என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வந்து.. எல்லாருக்கும் தெரியும் என் பிறந்த நாளன்று நான் ரசிகர்களைச் சந்திப்பதில்லை. 22 ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் என் பிறந்த நாளன்று எல்லோரையும் சந்தித்து வந்தேன். ஒருவாட்டி, என் பிறந்த நாளன்று என்னைப் பார்த்துவிட்டு திரும்பிப் போன ரசிகர்கள் கார் விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெற்றோர் என்னிடம் வந்து ஒரு கேள்வி கேட்டார்கள். அதுக்கு என்னால பதில் சொல்ல முடியல. அந்த கேள்வி என்னன்னு இந்த நேரத்துல நான் சொல்ல விரும்பல.

அதிலிருந்துதான் நான் ரசிகர்களைச் சந்திக்க வேணாம்னு முடிவு செஞ்சேன். அந்த நாள்ல சென்னையில் இருக்கக மாட்டேன். இது எனக்கு ஒரு வகையில் சாதகமாத்தான் முடிஞ்சது. அந்த நாளில் பேன்ஸ் இருந்தா கூட, எங்காவது தனிமையா இருந்து நான் இதுவரைக்கும் என்ன செஞ்சேன், என்ன செஞ்சிக்கிட்டிருக்கேன், என்ன செய்யப் போறேன்… அப்படீன்னு யோசிச்சு திட்டம் போடுவது என் வழக்கம். நினைச்சுப் பாத்துக்குவேன். மிச்செல்லாம் ஆண்டவன் கைல இருக்கு.. நம்ம கைல எதுவும் கிடையாது.

எல்லாமே அந்த ஆண்டவன் கையிலதான் இருக்குன்னு நெனச்சி அன்னிக்கு நான் டிக்கெட் வாங்காம, அதுகூட ஆண்டவன் கைலதான் இருக்குன்னு இருந்துட முடியாது. அதை நாமதான் செஞ்சிக்கணும். அதனால ஓரளவுக்குதான் நாம நினைக்கிறது நடக்கும்.

அதேநேரம் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் திட்டம் போட்டா அது நடக்காது. ஒரு நாளைக்கு ஒருத்தன் 1000 ரூபாய் சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டான்னு சொன்னா… அவனால் அதை சம்பாதிக்க முடியாது. 90 ரூபா சம்பாதிக்கிறான், அல்லது 500 ரூபா சம்பாதிக்கிறான் அல்லது 2000 ரூபா சம்பாதிக்கிறான். 1200 சம்பாதிக்கிறான், ஆனா சரியா 1000 ரூபா சம்பாதிக்க மாட்டான்.

நாம  எப்படி நினைக்கிறமோ அது அப்படியே நடந்திருக்குன்னு நடக்கும்னு இதிகாசம் புராணத்துல கூட கிடையாது.


 

நண்பன் காந்தியின் மரணம்…

நேத்து அன்று நான் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. 12.12.12 என்பதை அவாய்ட் பண்ணக்கூடாது, அது நல்லாருக்காது. அதுவும் நான் உடம்பு சரியில்லாம இருந்து வந்த பிறகு ரசிகர்கள்லாம் பார்க்க ஆவலா இருக்காங்க. அவர்களை சந்திக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு சொன்னாங்க. சரி இப்ப சந்திக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோது, என்னுடைய அருமையான நண்பன், உயிர் நண்பன், எப்படி சொல்றதுன்னு தெரியல. அவனை வெளிய நெறய பேருக்கு தெரியாது. ரொம்ப சிலருக்குத்தான் தெரியும். அந்த நண்பன், எனக்கு அனுமான் மாதிரி இருந்த காந்தி… மாரடைப்பால் 10-ம் தேதி இறந்துபோனான். 11-ம் தேதி அடக்கம் பண்ணிட்டு வந்தேன். அந்த சோகத்தை மைன்ட்ல வச்சிருந்து வருத்தத்தோட இருந்தேன்.

என் அப்பா இறந்திருக்கார், அண்ணா இறந்திருக்கார், அம்மா இறந்திருக்காங்க… ஆனா அதைவிட எனக்கு அதிக வேதனையைத் தந்தது காந்தியின் மரணம்.

அப்பா இறந்த போது ரொம்ப வயசாகியிருந்தார். அண்ணன் இறந்ததுக்கு காரணமிருக்கு. அம்மா இறந்தபோது நான் சின்னப் பையன். இன்னும் சில நண்பர்களும் இறந்திருக்காங்க.

காந்தியின் இறந்து போனப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா… சில வியாதிகள் உடம்பிலிருக்கும்போது, அதை வெளிய யாரும் சொல்றதில்லை. வெளிய சொன்னா தொந்தரவா இருக்கும்னு நினைச்சி உள்ளயே வச்சிக்கிட்டு காந்தி அதை யார்கிட்டயும் சொல்லல. திடீர்னு சில தினங்களுக்கு முன் காந்தி மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொன்னாங்க. பத்தாம்தேதி கேட்டப்ப இப்போ பரவால்லன்னாங்க. ஆனா அன்னிக்கு நைட் இறந்து போயிட்டதா செய்தி வந்தது.

ஒருவேளை  அங்கே உடனே போய் அவனைப் பார்த்து, வேற ஆஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணியிருந்தா காந்தி பொழச்சிருப்பானோ என்ற உறுத்தல் எனக்கு இருந்துகிட்டே இருந்தது.

அந்த பெய்ன்ல நான் நேத்து முழுக்க தூங்கவே இல்லை. அந்த சோகத்தை மறக்க முடியாம இருந்தேன். ரசிகர்கள் எத்தனை மணிக்கு வருவாங்கன்னு கேட்டேன். எட்டு ஒன்பது மணிக்கு வருவாங்கன்னு சொன்னாங்க.

என் வேதனையை மறக்கடித்த ரசிகர்கள்…

ஆனா காலைல 6 மணிக்கே முன்னூறு நானூறு பேர் வந்திட்டிருந்தாங்க.  அதுக்கப்புறம் குளிச்சி பூஜை முடிச்சி வெளிய வந்து உங்களையெல்லாம் பாத்தேன். அப்போ என் மனம் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவில்லை.

உங்களையெல்லாம் பாத்தாதான் அந்த வலி தீரும்னு ஆண்டவன் முடிவு செஞ்சிருக்கான். அது ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி.. உங்களைப் பார்த்ததும் கிடைச்சது. அந்த காந்தி என்ற நண்பனின் மரணம் தந்த வலியை உங்களை பார்க்க வைத்து தீர்க்க வச்சது நிச்சயம் ஆண்டவன் செயல்தான்.

கூட்டம் சேர்க்க முயன்றதில்லை…

அதுக்கடுத்த நாள் வெளியில் போகலாம்னு நினைச்சேன். ஆனால் அன்னிக்கு இதுபோல நிகழ்ச்சி இருக்கு, ரசிகர்கள்லாம் உங்களைப் பார்க்க ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால இங்க வந்திருக்கேன்.

நான் பொதுவா எப்பவுமே கூட்டம் சேர்க்க முயற்சி பண்ணதில்லை. ஏன்னா அதுக்கு எனக்கு அவசியமே இல்லை. கூட்டம் சேர்த்தா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். என்னால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் கூட்டம் சேர்ப்பதில்லை.

அதனாலதான் 12-ம் தேதி சென்னையிலேயே இருக்கணும்னு பத்து நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டாலும் அதை பதினொண்ணாம் தேதி ராத்திரிதான் எல்லோருக்கும் சொன்னேன்.

நான் முன்கூட்டியே சொன்னா நிறைய பேரு வெளியூர்கள்லருந்து பஸ், லாரி, வேன்னு கிளம்பி வருவாங்க. அப்படி வந்த பிறகு பாதுகாப்பா பத்திரமா திரும்பிப் போகணுமேன்னுதான், 11-ம் தேதி சொன்னேன்.

மற்றவங்களுக்கு தொந்தரவு கூடாது… ரசிகர்கள் பாதுகாப்பா இருக்கணும் என்பதால்தான் நான் முன்கூட்டி இதைச் சொல்லல.

என் ரசிகர்கள் பவர்புல்லாவங்க, வெறியங்க… 100 பேர் ஆயிரம் பேருக்கு சமம்!

யாருக்கும் சொல்லலியே… கூட்டம் வரலன்னா என்ன பண்றது, வெளிய மட்டமா பேசுவாங்களேன்னு சொன்னாங்க. பரவால்ல… நூறு பேர் இருந்தா கூட போதும். என் ரசிகர்கள் நூறு பேர் ஆயிரம் பேருக்கு சமம்… அவங்க பவர்புல்லானவங்க, பிரம்ம ராட்சசர்கள்.. வெறியங்க…

சரி, வர்றவங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு எல்லோரும் ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க. அதுபண்ணலாம், இது பண்ணலாம்னு சொன்னாங்க.. அப்பதான் நான் சொன்னேன்… நீங்க சத்தியநாராயணனை கூப்பிடுங்கன்னு. அவனுக்குதான் இவர்களைச் சமாளிக்க முடியும்னு சொல்லி, சத்திய கூப்பிட்டேன். சில பேரு சொன்னாங்க நான் சத்திய மன்றத்துலருந்து நீக்கிட்டேன்.. ஒதுக்கிட்டேன்னு. அதெல்லாம் இல்ல.. அவன் என் நண்பன். அவன் என்கூடதான் இருப்பான். காந்திக்கு ஆன மாதிரி சத்தியநாராயணாவுக்கும் ஆயிடக்கூடாது. அவனுக்கு உடம்பு சரியில்ல. அதனாலதான் அவனை ரெஸ்ட்ல வச்சிருக்கேன்.”

தப்பா நினைக்காதீங்க.. பிரம்ம ராட்சசர்கள்னு சொன்னேன்னு. பெரிய பெரிய ரிஷிகள், முனிகள், சித்தர்கள் தங்கள் வித்தைகளை யாருக்காவது சொல்லிக் கொடுத்துட்டுதான் இந்த உலகத்தைவிட்டுப் போவார்கள். அப்படி சொல்லிக்கொடுக்காமலேயே இறந்து போகிறவர்கள்தான்  பிரம்ம ராட்சசர்களாக உருவெடுத்து குளங்களிலும் மரங்களிலும் வசிப்பதாக சொல்வார்கள். அவர்கள் தவறானவர்கள் அல்ல. சர்வசக்தி படைத்தவர்கள். யாராலும் ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு வலிமையானர்கள். அப்படி ஒரு சக்தி படைத்தவர்கள்தான் ஒவ்வொரு ரசிகனும்…”

 

‘நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்… கோழையாக வாழமாட்டேன்’ – சூப்பர் ஸ்டார் பேச்சு -2

நேரமும் காலமும் சரியாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும்! – ரஜினி

சென்னை: ‘நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்… கோழையாக வாழமாட்டேன். எதையும் சந்திக்க தயங்கமாட்டேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்களைச் சேர்ந்தவன்… தமிழ்மக்கள் நலன்தான் எனக்கு முக்கியம், என்றும் அவர் கூறினார்.

ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதன் இரண்டாம் பகுதி…

“…நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இங்கே சிலர் பேசினார்கள். நான் அரசியல் பேச விரும்பவில்லை. அது கடல் மாதிரி. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.

இங்கே ஏடிஎம்கேவும் இருக்கு, டிஎம்கேவும் இருக்கு. போயஸ் கார்டனும் இருக்கு, கோபாலபுரமும் இருக்கு.

நண்பர் கலைஞரிடம் இங்கே அமர்ந்துள்ள வாகை சந்திரசேகர் போய், ஐயா நான் ரஜினி நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்று கேட்டிருந்தால், போய் வா தம்பி என்று அனுப்பியிருப்பார்.

சரத்குமாரும் ராதாரவியும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவிடம் போய், நாங்கள் ரஜினி நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்று கேட்டிருந்தால் நிச்சயம் அனுப்பியிருப்பார். அந்த அளவுக்கு எல்லோரிடமும் நட்பாக இருப்பவன் நான்.

நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. தமிழ் மக்களை சார்ந்தவன். தமிழ் மக்கள், என்னை வாழ வைத்த தெய்வங்கள். அவர்கள் நலன்தான் எனக்கு முக்கியம்.

1996–ல் ஒரு சூழ்நிலை என்னை அரசியலில் ஈடுபட வைத்தது. இதை இப்போது சொல்லக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் இங்கே அரசியல் பேசினார்கள். அதிலும் கருணாஸின் விஸ்வரூபத்தைப் பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சர்யம், கருணாஸ் இப்படி பேசுவாங்களான்னு… முத்துராமலிங்கத் தேவரையே பார்த்த மாதிரி இருந்தது அவர் பேச்சு.

ஆனால் இப்போது அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. பொய்யான நம்பிக்கை கொடுக்க விரும்பவில்லை.

1996-ல் அன்றைக்கு அரசியல் எனக்கு சரியா தெரியாது. ஆனா நான் எதுக்கோ சொன்ன ஒரு விஷயம், எப்டியெப்டியோ தீ மாதிரி பரவிடுச்சி. பிஎம் வரைக்கும் என்னை அழைத்துப் போனார்கள்.  ஆனால் நான் அப்போது தயாராகவில்லை. நான் தயாராக இல்லாத நிலையில், அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைத்து, என் படம், பெயர், கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிச்சுட்டு அமெரிக்கா போனேன். ஆனா நான் திரும்பி வந்தபோது, நான் எதிர்ப்பார்க்காததெல்லாம் நடந்துடுச்சி.

உடனே, நீங்கள் பிரச்சாரத்துக்குக் கூட வரவேண்டாம். ஆனால் இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள். நான் கோழை அல்ல.. செத்தாலும் சாவேனே தவிர, பிச்சையெடுத்தாலும் கூட கோழையாக  என்னிக்குமே வாழமாட்டேன்.

அதன் பிறகு ஆட்சியிலிருந்தவர்கள் நல்லது செய்தார்களா, கெட்டது செய்தார்களா என்றெல்லாம் பார்க்காமல், நான் முதலில் ஆதரித்து விட்டேன், கமிட்மென்ட் காரணமாக, 5 வருடங்கள் அவர்களை தொடர்ந்து ஆதரித்தேன். கூட்டணி தர்மத்தை மதித்தேன். அதன் பிறகு நான் யாரையும் ஆதரிக்கவில்லை.

என் அருமையான நண்பர் கலைஞர் – அவரை அருமை நண்பர் என்று கூப்பிட எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அவர் என்னை நண்பர் என்று அழைப்பதால், நானும் அப்படியே குறிப்பிடுகிறேன்- நான் எப்போது சந்தித்தாலும்  அரசியல் பேசமாட்டார். நானாக பேசினாலும் கூட, இல்லை தம்பி வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அதன் பிறகு அவரிடம் நான் அரசியல் பேசவே இல்லை.

அதன் பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது கூட நம்ம படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. நாம் கோழைகள் அல்ல என்பதைக் காட்ட. அவர்கள் சொன்ன விஷயம் சரி. ஆனால் சொன்ன விதம் தவறு. அதை எதிர்க்கவே களமிறங்கினேன். அவர்கள் ஒழுங்கா, கரெக்டா, நியாயமா சொல்லலேன்னுதான் எதிர்த்தேன். அன்றைக்கே நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். படங்களில் அன்று விட்ட சிகரெட்டை இன்றுவரை தொடவில்லை. வீம்புக்காக அதை படங்களில் செய்திருக்கலாம். ஆனால் சொன்ன விஷயம் நல்லது. அதனால் அதை மதித்துவிட்டுவிட்டேன்.

பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்…

அரசியல் சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டம். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை.

மாநில அரசியல் கட்சி தலைவர்கள் படும் கஷ்டங்களை அருகிலிருந்து பார்க்கிறேன். எந்த அரசியல் கட்சி தலைவரும் சந்தோஷமா.. நிம்மதியா இல்லீங்க. தொண்டர்கள் சந்தோஷமா இருக்கலாம்.. ஆனால் தலைவர்கள் இல்லே.

அரசியல் தலைவர்கள் நல்லவர்கள்தான்…

அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று மனசார ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. ‘சிஸ்டம்’ அப்படி இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது.

மத்தியிலோ மாநிலத்திலோ ஒருத்தர் ஆட்சிக்கு வந்து பதவியில ஒருவாட்டி உட்காந்த பிறகு, அதைத் தக்க வச்சுக்க படும் பாடு இருக்கே… அதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

தயவு செய்து அரசியல் தலைவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். ஒரு கட்சியின் பலமே, அஸ்திவாரமே அதன் தொண்டர்கள்தான். தொண்டர்கள் சரியாக இருக்க வேண்டும். தங்கள் தலைவர்கள் மனநிம்மதியோடு இருந்து, நல்லது செய்ய பாடுபட வேண்டும்.

நேரம் காலம் கனிஞ்சா…

என்னுடைய குரு சச்சிதானந்த சுவாமி சொன்னார், ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிற மாதிரி, ஒவ்வொரு நாட்டுக்கும் யார் தலைவரா வரணும்னு ஒரு விதி இருக்கு. அது அப்படித்தான் நடக்கும்.  அதற்கான கால சந்தர்ப்பங்கள் வரும்போது நடக்கும்.

நேரமும் சூழலும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். ஒருத்தர் வந்து தன்னுடைய அருமை பெருமைகளாலோ, பேச்சாலோ, உழைப்பாலோ ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது நடக்காது. நேரம்தான் அரசியல் மிக முக்கியமான விஷயம். இல்லேன்னு சொன்னா..  காமராஜர் மாதிரி ஒரு தலைவர் தோற்றிருப்பாரா? யாராவது நினைச்சிப் பாத்திருப்பாங்களா?

நேரம்தான் காலம்தான் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கிறது…”

 

புகைப் பழக்கம் வேண்டவே வேண்டாம்.. அடியோடு விட்டொழியுங்கள்! – சூப்பர் ஸ்டார் வேண்டுகோள் -3

சென்னை:  இந்த பிறந்த நாளில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான்… தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள், இதை நான் பட்டு அனுபவித்து சொல்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் ரஜினி பேசியதன்  மூன்றாம் பகுதி:

…ஒரு விழாவில் நான் சொன்னேன்… ரசிகர்களைப் பார்க்க எனக்கு கூச்சமா, வெட்கமா இருக்குன்னு. ஏன்னா உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

டாக்டர்கள் சொல்லியிருக்காங்க, எனக்கு பிபி ஜாஸ்தியா இருக்கு, என்ன விஷயமாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டு போகக்கூடாதுன்னு.

நான் மெட்ராசுக்கு வந்த பிறகுதான் நியூஸ்பேப்பர்ஸ், மேகஸின்ஸ் எல்லாமே நான் பார்த்தேன். என் ரசிகர்கள் எனக்காக நடத்திய பிரேயர்ஸ்… நான் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை பண்றது, நடந்து போறது, ஆயிரம் பேர் மொட்டை போட்டுக்கிட்டது, மண்சோறு சாப்பிட்டது, விரதமிருக்கிறது, கோயில்ல, சர்ச்ல, மசூதில பிரார்த்தனை செய்ததையும் படிச்சி தெரிந்துகொண்டேன்.

ஒருத்தர் சொன்னாங்க, மலைமேல உள்ள கோயிலுக்கு முட்டி போட்டுக்கிட்டே படியேறி பிரார்த்தனை செய்தேன். அதனால இரண்டு மாசம் ஆஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்காக எங்க அப்பா அம்மா கூட ஏண்டா இப்டி செஞ்சேன்னு கேக்கலன்னு சொன்னாரு.

இதை அவர் என்கிட்டே சொன்னபோது, அவருக்கு நான் நன்றின்னு சொன்னா.. அது எவ்ளோ சின்ன வார்த்தை… அவருக்கு நான் பணம் கொடுக்க முடியுமா… ஏம்பா இப்டி பண்ணேன்னு கேக்க முடியுமா? அவனுக்கு நான் என்ன திருப்பிக் கொடுபேன்… ரொம்ப வெக்கமா இருக்கு. ராதாரவி சொன்னாரு, ஒரு வாரம் விரதம் இருந்ததா… அதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல… உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.

ஏன்னா… நான் ரொம்ப கொடுத்தேன்னு சொல்ல முடியாது. ஆனா டெபனட்டா யார்கிட்டயும் வாங்கியும் பழக்கமில்லே. எப்டி சொல்றது… என்னோட நன்றி!

ராணா பண்ணும்போது உடம்பு சரியில்லாம போச்சு (தலைவர் ராணா பத்தி சொன்னதை தனியா எழுதினாதான் நல்லாருக்கும்… அதனால இங்கே அதை தரவில்லை!) ராணா என்கிற கேரக்டரை ரொம்ப பெரிசா பர்பார்ம் பண்ணனும்னு முயற்சி பண்றப்பதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.

அது சீரியஸா போனதுல என் தப்பும் இருக்கு. உடனே மருத்துவமனையில்  சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும்னு உடனே டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டேன். டாக்டர்கள் சொன்னாங்க, ரெண்டு நாள்ஆஸ்பிடல்ல இருந்து புல் செக்கப் பண்ணிக்கிட்டு சரி பண்ணிட்டு போங்கன்னு சொன்னாங்க. ஆனா நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். காரணம், ரெண்டு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்தா தேவையில்லாம வதந்திகள் வரும் என்பதால், வீட்லே இருந்து பண்ணிக்கலாம்னு வந்துட்டேன். அதனால என் உடல்நிலையை நானே கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிக்கிட்டேன்.

பிகாஸ்… நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் இது நடந்தது. வாழ்க்கைல அப்பா அம்மா, கடவுளை விட, மனைவியை விட நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நல்லாருக்கும். நான் சில கெட்ட நண்பர்களால குடிப்பழக்கத்துக்கு ஆளானேன். அதன் பிறகு நடிக்க வந்த பிறகு குடி இன்னும் அதிகமாகிடுச்சி. நல்ல சரக்கு, சரக்குன்னு தேடி குடிக்க ஆரம்பிச்சு, வேலை வேலைன்னு பிஸியாகி, தூக்கமில்லாம நெர்வ்ஸ் பிரேக் ஆன விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியும்.

குடியை குறைச்சிக்கிட்டேன்…

அதன் பிறகு திருமணத்துக்குப் பிறகு, என் அருமை மனைவி லதாவின் அன்பாஸலும் ஆதரவினாலும் குடிப் பழக்கத்திலிருந்து மெல்ல மீண்டேன். அதுக்காக நான் ஒரேயடியாக விட்டுட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனால் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி பண்ணிக்கிட்டேன். மது இல்லாம தூங்க முடியும், இருக்க முடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டேன். யோகா, உடற்பயிற்சி என பண்ணிக்கிட்டிருந்தாலும், சிகரெட் பழக்கத்தை மட்டும் விட முடியல.


என் உடம்பு இவ்வளவு மோசமானதுக்கு காரணமே அந்த சிகரெட் பழக்கம்தான். நான் அனுபவிச்சி சொல்றேன், ரொம்ப அடிபட்டு சொல்றேன்… அந்த சிகரெட் பழக்கத்தை மட்டும் உடனே விட்டுடுங்க. தயவு செஞ்சி விட்டுடுங்க.

எனக்கு இஸபெல்லா ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்.

எனக்கு உடம்பு மோசமா போனதும், ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க. அங்கு டாக்டர்கள் என்னை அருமையா கவனிச்சிக்கிட்டாங்க. டாக்டர் தணிகாசலம் உள்ளிட்டவர்கள் அப்படி பாத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் பின்னாலதான் நான் கேள்விப்பட்டேன். அங்க இருந்தப்போ பெரும்பாலும் என்னை மயக்க நிலையில்தான் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல இருந்தப்போ என்னோட கிட்னில பாதிப்பு ஏற்பட்டுச்சி. உடம்புல உள்பாகங்கள்ல பாதிப்பு ஏற்பட்டா, ஸ்டெராய்ட் குடுத்துதான் சரிபண்ணுவாங்க. ஸ்டெராய்ட் கொடுக்கும்போது, முதலில் சரியானா கூட, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ரொம்ப மோசமா இருக்கும். எனக்கு நிறைய மெடிசன்ஸ் கொடுத்தாங்க. விவிஐபியா இருக்கிறதுல ப்ளஸ்ஸும் இருக்கு மைனஸும் இருக்கு. எனக்கு மெடிசன்ஸ் அதிகமாயிட்டதால, அதனோட எஃபெக்ட்ஸே ஆறேழு மாசத்துக்கு இருந்தது. இதை நான் இதுவரைக்கும் யாருக்கும் சொல்லல.. ஏன்னா என்னை வாழ வச்ச தெய்வங்களான உங்ககிட்ட இதை முதல்முதலா சொல்றேன்.

இந்த ஸ்டீராய்டு மெடிசன்களால உடம்பு சரியான பிறகுகூட, அந்த பவர் போனதும் அப்படியே உடம்பும் மனசும் வீக்காயிடும். இந்த எஃபெக்ட்லருந்து முழுசா மீண்டு, கடந்த மூணு நாலு மாசமாவே 100 சதவீதம் நான் சரியாகிட்டேன்.

அதுக்கு முக்கிய காரணம், எந்த மெடிசனா இருந்தாலும் அதுக்கு உடம்பு உடனடியா ரியாக்ட் பண்ணனும். உடம்பு ரியாக்ட் பண்ணலன்னா, எந்த மெடிசனும் வேலை செய்யாது. என் உடம்பு வேகமா ரியாக்ட் பண்ண விதத்தைப் பார்த்து டாக்டர்களே அதிசயப்பட்டாங்க. அதை மெடிக்கல் மிராக்கிள்னுதான் சொன்னாங்க. அதைப் பார்த்தபிறகுதான் மருந்தின் அளவை படிப்படியா குறைச்சாங்க.

100 சதவீதம் ஆரோக்கியமா  இருக்கேன்…

இப்போ முழுமையாக ஆரோக்கியமா இருக்கேன்னு சொன்னா, அதுக்கு உங்க, அன்பு பிரார்த்தனைகள்தான் காரணம்.

இந்த அன்புக்கு என்ன பண்ணப்போறேன்… எப்படி செய்யப் போறேன்னு தெரியல. ஏன்னா எதுவும் என் கையில இல்லே. ஆனால் பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் தயாரா இல்லே. ஆனா நிச்சயமா சொல்றேன், நீங்க முதல்ல உங்க குடும்பத்தை பாத்துக்கங்க, அப்பா அம்மா குழந்தைகளைக் கவனிங்க. உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்,” என்றார்.

 

தங்கைக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே அழிக்கும் அல்டிமேட் வில்லன் ராணா! – ரஜினி -4

சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமான பவர்புல் படமாக ராணாவை உருவாக்க முயற்சி செய்தேன். அந்த நேரத்தில்தான் உடல்நிலை சரியில்லாமல் போனது, என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

நேற்று சென்னையில் ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார், தான் நடிக்கவிருந்த ராணா மற்றும் அதன் கதை அமைப்பை விவரித்த விதம் சிலிர்ப்பைத் தந்தது.

ஒரு இயக்குநரால் கூட அந்தக் கதையை அத்தனை அழகாக, சுருக்கமாக, பிரமாண்டமாக ரசிகர்கள் கண்முன் கொண்டு வந்திருக்க முடியாது. ரஜினி அத்தனை அற்புதமாக ராணா கதையை விவரித்தார்.

அவர் கூறுகையில், “‘சந்திரமுகி’க்கு பிறகு ‘சிவாஜி’. அதற்குப் பிறகு ‘ரோபோ’ படத்தில் நடித்தேன். ரோபோவுக்கு அடுத்து, அதை விட பிரமாண்டமா ஒரு படம் பண்ணனும்னு யோசிச்சப்ப, ஒரு வரலாற்றுப் படம், ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் படம் எடுக்க முடிவு பண்ணோம். அதான் ராணா. சிவாஜி, ரோபோ, ஷங்கர், புரொடியூசர்ஸ் காரணமாக வியாபாரம் பெருசாகிடுச்சி. 100 கோடி, 150 கோடி, 200 கோடி செலவழிச்சி படம் பண்ண, ஈராஸ் மாதிரி தயாரிப்பாளர்கள் வந்தாங்க. 250 கோடி செலவழிச்சு படம் பண்ணவும் தயார் என்றபோது, அதற்கு ஏத்தமாதிரி ராணா படத்தை உருவாக்க முயற்சி பண்ணேம். மிக அருமையான கதை அது.

இதுக்கு முன்ன சந்திரமுகியில நான் பண்ண வேட்டையன் கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அப்புறம் சிவாஜில மொட்ட பாஸ் ரொம்ப புடிச்சது. அது வில்லனுக்கு வில்லன் மாதிரி வச்சிக்கங்களேன். ரோபோல அந்த பேட் ரோபோதான் ரொம்ப புடிச்சது. அதுக்கப்பறம் இதெல்லாம் சேர்ந்த மாதிரி ராணா கேக்டர்…

அவன் வந்து துரியோதனன், ராவணன் மாதிரி பலசாலி, சகுனி மாதிரி புத்திசாலி.. அவ்வளவு மூளை.. தங்கச்சின்னா அவ்வளவு பாசம். அந்த தங்கச்சியோட லட்சியத்துக்காக ஒரு தனி ஆளு, ஒரு சாம்ராஜ்யத்தையே அழிக்கிறான். மிக மிக அரசியல்.. மிக மிக அதிக விஷயங்கள் அடங்கிய கதை.. ஒரு வரலாற்றுப் படத்துல இதையெல்லாம் சொல்லும்போது, இப்ப இருக்கிற சூழ்நிலையில நல்லா ஒத்துப் போகும்.

ஸோ… அந்த ராணா கேரக்டரை உள்வாங்கி, ரொம்ப பெரிசா.. பர்பார்ம் பண்ணனும்னு நினைச்சிருந்தேன்… அதை சரியா சொல்லணும்னா.. த அலடிமேட் வில்லன் கேரக்டர்.  அந்த கேரக்டர் அறிமுகமாவதே இடைவேளைலதான். அதுக்கப்புறம் ராணாவின் அட்டகாசங்கள் ஆரம்பம். இடைவேளைக்குப் பிறகு அந்தக் கேரக்டருக்கு ஜஸ்டிபிகேஷன்… அருமையான கதையமைப்பு. அதை எடுக்க முயற்சிக்கும்போதுதான், மருத்துவமனையில் சேர வேண்டியதாயிடுச்சி!” என்றார்.

உண்மையில் இதை அவர் சொல்லி முடித்தபோதே, நமது மனதுக்குள் ரஜினி ராணாவாக திரையில் அதகளம் பண்ணுவதை விஷுவலைஸ் பண்ண முடிந்தது. அதான் சூப்பர் ஸ்டார் வார்த்தைக்குள்ள அபார ஆற்றல்!

குறிப்பு: தலைவர் பேச்சை முழுமையாகவே கொடுத்திருக்கிறேன். வீடியோவில் கேட்டுக்கொண்டே இதை முழுவதும் படித்துப் பாருங்கள். ரசிகர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘என்வழி’ உங்கள் வழி. எனவே தளத்தின் பெயரை குறிப்பிட மறக்காதீங்க!!

 

சொர்க்கமும் நரகமும்…! – சூப்பர் ஸ்டார் சொன்ன குட்டிக் கதை -5

சென்னை: இந்த உலகில் உண்மையான சொர்க்கமமும் நரகமும் வெளியில் எங்கும் இல்லை, அவரவர் குடும்பத்தில்தான் இருக்கிறது, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினி, ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகையில் ஒரு குட்டிக் கதையை குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், “நண்பர்களே… இந்த உலகத்தில் யார் ஒருத்தன் வீட்டை, பெற்றோரை நல்லா வச்சிருக்கானோ அவன் சொர்க்கத்துல இருக்கான்னு அர்த்தம்.

எமலோகத்தில், எது சொர்க்கம் எது நரகம்னு ஒரு பேச்சு வந்தப்போ, எமன் சொன்னாராம், பூலோகத்துல போய்ப் பாருங்க, உங்களுக்கே தெரியும்னு சொல்லி தன்னோட அஸிஸ்டன்ஸை (கிங்கரர்கள்) அனுப்பி வச்சாராம்.

அவங்களும் பூமிக்கு வந்தாங்களாம். ஒரு வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்க பார்த்தா வீடே நிம்மதி இல்லாம இருக்கு. பிள்ளைங்க திட்டிக்கிறாங்க. அந்த அப்பா அம்மாவை திட்டறாங்க. ஒரே சண்டை, சச்சரவு…  குடும்பத்தினர் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்களாம். கிங்கரர்களால் ஒரு செகன்ட் கூட இருக்க முடியல. இதான் நரகம்னு காட்டினாங்களாம். அடுத்து இன்னொரு வீட்டுக்குப் போய் பார்த்திருக்காங்க.

அங்கே பெத்தவங்களுக்கு அவ்வளவு மரியாதை. குடும்பமே அன்போட, பண்போட நடந்துக்கறாங்க. இதான் சொர்க்கம்னு சொன்னாராம் எமன்.ஆக, நரகமோ சொர்க்கமோ… அது நம் வீட்டை நாம் வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. எனவே குடும்பத்தைக் கவனியுங்கள்.

அதனால்தான் என் பிறந்த நாளை ஒவ்வொரு ரசிகரும் தன் தாய் தந்தையரை விழுந்து வணங்கி கும்பிட்டு கொண்டாடினால் மகிழ்வேன் என்றேன்,” என்றார்.

-வினோ
என்வழி ஸ்பெஷல்

 

CLICK TO READ : சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்பு - ஸ்பெஷல் கவரேஜ்






 
0 Comment(s)Views: 968

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information