ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் சேர விரும்பும் நிர்வாகிகள், தங்கள் பதவிகளை முதலில் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறலாம் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் சிலர் தமிழகத்தின் மற்ற பிரதான கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து அவரை அரசியலுக்கு வர வலியுறுத்திப் போராட்டம் நடத்திவந்தனர். இந்தநிலையில், ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனத் திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார். அந்த அறிவிப்பில், “நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியிருக்கிறேன். என் முடிவைக் கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்,” எனக் கூறி தனது அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் சிலர் தமிழகத்தின் மற்ற பிரதான கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வன், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்தநிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம்.
அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும், எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
|