தேனிசை தென்றல் தேவாவின் “தேவா THE தேவா” இசை நிகழ்ச்சி Blacksheep நிறுவனத்தால் 2022 நவம்பர் 20 தேவா பிறந்தநாளில் நடைபெற்றது.
இசையமைப்பாளர்கள் அனைவரும் இசை நிகழ்ச்சியை நடத்தி இருந்தாலும், தேவா இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியதில்லை.
இவர்கள் கூறுவதுபடி 30 வருடங்களுக்குப் பிறகு நடத்தப்படுகிறது.
Blacksheep
YouTube பயன்படுத்தும் பெரும்பான்மையானவர்களுக்கு Blacksheep பரிட்சியமானவர்கள். இந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
அனைவருமே இளம் வயதினர் என்பதால், அனுபவமில்லாதது சில இடங்களில் உணர முடிந்தது ஆனால், இவர்களே தேவாவின் அருமை புரிந்து நடத்தியுள்ளார்கள்.
இவர்களுக்கும் ரஜினிக்கும் உடனான தொடர்பை, நிறுவனத்தின் வளர்ச்சியைக் காணொளி வாயிலாகக் காண்பித்தது சிறப்பானதாக அமைந்தது.
தேவா என்ற ஒரு நபருக்காகவே இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன். இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை, செல்ல முயன்றதும் இல்லை.
90 களில் கொண்டாட்டமாக இவரது இசையை நண்பர்களுடன் அனுபவித்தவன் என்ற முறையில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.
தலைவர் வருகை
தலைவர் உள்ளே நுழைந்ததும் அரங்கமே அதிர்ந்து, ஓரிரு நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. வழக்கம் போல, மின்னல் வேகத்தில் வந்து, அனைவருக்கும் வணக்கம் செலுத்தி அமர்ந்தார்.
ரஜினி வரும்வரை ஒரு ரஜினி பாடல் கூடப் பாடப்படவில்லை. தலைவர் வந்தவுடன் ஆட்டோகாரன் பாடலுக்கு நிஜ ஆட்டோவையே கொண்டு வந்து ஆடினார்கள்.
அதுவரை ஒவ்வொரு பாட்டுக்கும் அரங்கத்தில் பார்வையாளர் பகுதியில் ஒவ்வொருவர் ஆடிக் கவனத்தை ஈர்த்து வந்தனர் ஆனால், ஆட்டோக்காரன் பாடலுக்கு அரங்கமே ஆடி அதிர்ந்தது.
இதன் பிறகு அண்ணாமலை அண்ணாமலை, தங்கமகன் என்று தலைவர் பாடல்களாகப் பாடப்பட்டது.
அனுராதா ஸ்ரீராம்
கருப்பு தான் எனக்குப்பிடித்த கலரு பாட்டைப்பாடி அனுராதா ஸ்ரீராம் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.
பாடலில் வரும், “நம்மூரு சூப்பர்ஸ்டாரு” என்று கூறி சில நொடிகள் நிறுத்த, அரங்கமே அதிர்ந்தது. இந்த வரி வரும் முன்பே அனைவரும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.
எதிரில் அமர்ந்து இருந்த ரஜினி புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
சிறுவயதில் தலைவருடன் நடித்ததை நினைவு கூறி அந்தப்படத்தின் பாடலைப் பாடி அனுராதா ஸ்ரீராம் அசத்தினார்.
திண்டுக்கல் லியோனி
இடையில் தலைவரைத் திட்டிக் கிண்டலடித்த, ஆபாசமாகப் பேசும், தமிழ்நாடு பாடதிட்டத்தின் பொறுப்பில் உள்ள லியோனி வெட்கமே இல்லாமல் தலைவருடன் (தன் மகனுடன்) படம் எடுத்துக்கொண்டார்.
பிரபலங்கள் பலரும் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டார்கள். தலைவி மாளவிகாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டார் .
தலைவரைப் பலரும் பாராட்டிய போது எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், சிலை மாதிரி அமைதியாக அமர்ந்து இருந்தார்.
அதிகபட்சம் சிறு புன்னகை மட்டுமே!
ஆட்டோகாரன்
ஆட்டோகாரன் பாடல் ஒளிபரபரப்பட்ட சமயத்தில் ஆட்டோ ஓட்டும் பெண்கள், ஆண்கள் ஆகியோரின் பேட்டிகளை ஒளிபரப்பினார்கள். செம மாஸாக இருந்தது.
SPB பாடல்களை அவரது மகன் சரண் பாடினார். SPB அவர்களின் குரலை நேரடியாகக் கடைசிவரை கேட்க முடியாமல் போனது ஏமாற்றமே!
தலைவர் கிளம்ப வேண்டியிருந்ததால், தலைவரைப் பேச அழைத்தார்கள்.
பாட்ஷா காட்சியை மறு உருவாக்கம் செய்து BGM வைத்து Action கூறி தலைவரை நடக்க வைத்து மேடைக்கு அழைத்துச் சென்றதில் அரங்கமே அதிர்ந்தது.
ரஜினியின் பேச்சு
இசை விழா நடக்கிறது என்று மட்டுமே கூறியதாகவும், வேறு எதுவுமே கேட்காமல் உடனே தேவா சென்று விட்டார் என்று ரஜினி கூறினார்.
பின்னர் தேவாவை தொலைபேசியில் அழைத்து, தான் கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதியளித்ததைக் குறிப்பிட்டார்.
அறிமுகக் காலத்தில் தேவா எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பதையும், தூர்தர்சனில் பணி புரிந்ததையும், தனது தம்பிகளுடன் போராடி வெற்றி பெற்றதையும் கூறினார்.
வெற்றியின் உச்சத்தில் இருந்த இளையராஜா, புயலாக வந்த ரகுமான் ஆகியோரையும் கடந்து தேவா பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டார்.
அண்ணாமலை & பாட்ஷா
அண்ணாமலை, பாட்ஷா படங்களின் அனுபவங்களைக் கூறினார்.
பாட்ஷா பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் பார்த்து இப்படம் ஓடுமா?! என்ற சந்தேகம் வந்ததாகவும், சுரேஷ் கிருஷ்ணா, “சார் இது பத்து அண்ணாமலை” என்று கூறிய பிறகு பார்த்து வியப்படைந்ததைக் குறிப்பிட்டார்.
அண்ணாமலையில் ஆரம்ப (Super Star Rajni) இசையை அமைத்தது பற்றிக் கூறி தேவாவையும் சுரேஷ் கிருஷ்ணாவையும் பாராட்டினார்.
நேரம் காரணமாக அனுபவங்களைச் சுரேஷ் கிருஷ்ணாவால் பகிர முடியவில்லை ஆனால், இவருடைய சுவாரசியமான பேட்டிகள் YouTube ல் உள்ளது.
தேவாவின் திறமையை அவர் பழகும் விதத்தை ரஜினி மிக உயர்வாகக் கூறிய போது தேவா கண்கலங்கி, அந்தப் பெருமையின், பாராட்டின் உச்சத்தைத் தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். Well Deserved!
தஞ்சாவூரு மண்ணெடுத்து
இதோடு முடித்துக் கிளம்பிய பிறகு நினைவு வந்தவராக,
தேவாவின் பாடலான தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைச் சிங்கப்பூர் ஜனாதிபதி SR நாதன் காலமான போது அவரின் விருப்பப் பாடலாக அனைத்து உலகத்தலைவர்கள் முன்னணியில் ஒலிக்க விட்டனர் என்று கூறினார்.
SR நாதன் அவர்களே கடைசி விருப்பமாகக் கேட்டுக்கொண்டாதாகக் குறிப்பிட்டார்.
இதைச் சிங்கப்பூர் அல்லாது, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளிலும் ஒளிபரப்பியதாகக் கூறி, பெருமையான இந்நிகழ்வை தமிழக ஊடகங்கள் ஒருத்தர் கூடச் செய்தியாக்கவில்லை என்று ஊடங்களுக்கு கொட்டு வைத்தார்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையாக அனைவரையும் பாராட்டி ஊக்குவித்துப் பழகுங்கள் என்றார்.
இதன் பிறகு தேவா பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது.
SR நாதன் நிகழ்வை முன்பே வைரமுத்து கூறி விட்டார் ஆனால், வைரமுத்து பேசிய பிறகே ரஜினி வந்ததால், வைரமுத்து கூறியது தெரியாததால் திரும்பக் கூறினார்.
ஆனாலும் இதன் பிறகு ரஜினி கூறியதே அடுத்த நாள் செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் தேவா பாடலுக்குக் கிடைத்த பெருமை பேசப்பட்டது.
சிங்கப்பூர் காணொளியும் பலரால் பகிரப்பட்டது. சம்பவம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி!
சித்ரா லட்சுமணன்
ரஜினி கிளம்பிய பிறகு பேசிய சித்ரா லட்சுமணன், வழக்கமாக ரஜினி எந்த அழைப்பிதழிலும் தன் பெயரைப் போட வேண்டாம், முடிந்தால் கலந்து கொள்கிறேன் என்று கூறுவார் ஆனால், கலந்து கொள்வார்.
அவரின் குருநாதர் பாலச்சந்தர் அவர்களின் நிகழ்வுக்குக் கூட இப்படித்தான் செய்தார்.
ஆனால், தேவா நிகழ்ச்சிக்கு மட்டுமே தான் கலந்து கொள்வதாக அறிவித்துத் தன் பெயரைப் போட அனுமதித்து இருக்கிறார். இதன் மூலம் தேவாவை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பது புரிகிறது என்று குறிப்பிட்டார்.
எனக்கென்னவோ, தேவாவை பலரும் கொண்டாட தவறியதால், அவருக்குண்டான மரியாதை, புகழ் வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதைத் தலைவர் செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இதற்கு நன்றிக்கடனாகவோ என்னவோ இசை நிகழ்ச்சி தேவா THE தேவா என்று இருந்தாலும், ரஜினி நிகழ்ச்சி போலவே இருந்தது.
ஒவ்வொரு நிகழ்விலும் ரஜினி ரஜினி ரஜினி என்றே இருந்தது.
தேவாவின் இசையை ரசிக்கச் சென்ற எனக்குப் போனஸாகத் தலைவரையும் கொண்டாட்டமாக ரசிக்க வாய்ப்புக்கிடைத்ததில் இரட்டை மகிழ்ச்சி.
அரங்கில் தலைவருக்குக் கிடைத்த வரவேற்பு செம மாஸாக இருந்தது. அதாவது, போதும் அமைதியாகுங்க! என்று கூறும் அளவுக்குத் தொடர்ந்தது.
ரஜினியின் நிற்காத வளர்ச்சிக்கு மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று தனக்கு உதவியவர்களை என்றும் மறக்காமல் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பது தான்.
- கிரி
Courtesy : www.giriblog.com
|