தமிழ் சினிமாவில் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார். வேறு சூப்பர் ஸ்டார் இனி வர முடியாது என்று கூறியுள்ளார் விஜய்.
எம்.ஜி.ஆருக்கு அடுத்து உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரஜினி. ஆனால் அவருக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை.
ஆனாலும், பல நடிகர்கள் ரஜினி இடத்தைக் குறி வைத்து கடுமையாக முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரும் அவரின் நிழலைக் கூட தொட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் விஜய்யும் ஒருவர்.
ரஜினி பாணியை அப்படியே காப்பி அடித்து கலக்கி வருகிறார் விஜய். அவர் ஸ்டைலில் பேசுவது, அவர் ஸ்டைலில் நடப்பது, அவர் ஸ்டைலில் காட்சிகளை வைப்பது என கலக்கி வருகிறார் விஜய்.
இருந்தாலும் இன்னும்கூட ரஜினி அளவுக்கு அவரது லெவல் வரவில்லை என்பதே உண்மை. காரணம் ரஜினி படத்துக்கு இன்னும் குறையாத மவுசு. சொல்லப் போனால் ரஜினி படம் வெளியாகும்போது வேறு எந்தப் படமும் வெளி வர முடியாத நிலை. மீறி திரையிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை. சிறந்த உதாரணம், சந்திரமுகி வந்தபோது வெளியான விஜய்யின் சச்சின்.
ரஜினியின் அடுத்த வாரிசு விஜய்தான் என அவரது ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார், வேறு சூப்பர் ஸ்டார் வரவே முடியாது என்று கூறியுள்ளார் விஜய்.
சென்னையில் நடந்த பிலிம்பேர் பத்திரிக்கையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டு முதல் பிரதியை வெளியிட்டார் விஜய். அப்போது அவரிடம் பேசுகையில், எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. அதை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரமாக உள்ளேன் என்றார்.
சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்கும் முயற்சிகள் எப்படி உள்ளன என்று கேட்டபோது, சிவாஜி படத்தில் ரஜினி சாரின் போஸ்களைப் பார்த்தீர்களா? இன்னும் இளமையாக இருக்கிறார், துடிப்பாக இருக்கிறார். போட்டிகளுக்கு அப்பாற்பட்டவர் அவர்.
அவரது ஸ்டைல், துடிப்புக்கு முன்பு எல்லோரும் தூசி. என்னைப் பொருத்தவரை எப்போதுமே அவர்தான் சூப்பர் ஸ்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவரது இடத்திற்கு வர வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. உண்மையில் நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன், பொதுமாங்ணா என்று தனது ஸ்டைலில் புன்னகையுடன் கூறினார் விஜய்.
http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/vijay_070429.html
|