|
|
Article |
|
|
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion |
(Friday, 28th November 2008) |
|
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நோக்கமெல்லாம் இருப்பதை நிலைகுலையச் செய்து, பீதியைக் கிளப்பி, அரசின்மீதும் ஆட்சி அமைப்பின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்க வைத்து, அதன் மூலம் சட்டம், ஒழுங்கு முற்றிலும் தகர்ந்த அராஜக நிலைமையை ஏற்படுத்துவதுதான். அதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை. இருக்கிற அமைப்பைத் தகர்த்து அதற்குப் பதிலாக ஒரு நல்லாட்சிக்கான திட்டம் எதுவும் அவர்களிடம் உண்டா என்று கேட்டால் கிடையாது.
இதுபோன்ற பயங்கரவாத இயக்கங்கள் அத்தனையுமே அழிவு சக்திகளே தவிர ஆக்கபூர்வமான சிந்தனையோ, மாற்றுத் திட்டமோ இல்லாதவை. அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையாக யார் மீதோ, ஏதோ ஒரு கொள்கை அல்லது செயல்மீதோ இருக்கும் கோபத்தை, தங்களது எதிரிகளிடம் நேரிடையாகக் கொள்கை ரீதியாக மோதி ஜெயிக்க முடியாத காரணத்தால், அப்பாவிப் பொதுமக்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்தும், பிணைக் கைதிகளாக்கித் துன்புறுத்தியும் தங்களது துன்பியல் உணர்வைத் தணித்துக் கொள்பவர்கள்தான் இந்த பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒருவகை மனநோயாளிகள்.
இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளும் அதன் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒரு லட்சிய முகமூடியை அணிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். உதாரணத்திற்கு, இப்போதைய மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் "லஷ்கர் - இ - தொய்பா' அமைப்பை எடுத்துக்கொண்டால், தாங்கள் காஷ்மீரை மீட்டெடுக்கப் போராடுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். மும்பையில் நூற்றுக்கணக்கானவர்களைச் சுட்டுக் கொல்வதால் காஷ்மீர் மீட்கப்படப் போகிறதா என்ன? துன்பியல் சார்ந்த மனநோய் பாதிப்புதான் இது.
உலகெங்கிலும் சமீபகாலமாக இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது இயலாத ஒன்று என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். அதை எந்த அளவுக்குத் தடுப்பது, இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து எப்படி ஒடுக்குவது என்பதில் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர மனோரீதியான ஆராய்ச்சியில் இறங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முயற்சி.
1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பும், அதற்குப் பிறகு நடந்த இரண்டு மூன்று முயற்சிகளும் நமக்குப் பாடமாக இருந்திருக்க வேண்டாமா? உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் ஒரு விசைப்படகில் கடற்படைத் தலைமையகத்தைக் கடந்து விரைந்து, மும்பை கடற்கரையில் இறங்கி நகரத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் தேசியப் பாதுகாப்புப் படையினரும், கடற்படை கமாண்டோக்களும் உடனடியாகச் செயலில் இறங்கவில்லையே, ஏன்?
தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேயை, பயங்கரவாதிகள் தாங்கள் கடத்திய காவல்துறை வாகனத்தில் இருந்தபடி சுட்டு வீழ்த்திய காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. கர்கரேயும் சரி, ஏனைய காவல்துறையினரும் சரி, பயங்கரவாதக் கும்பலை எதிர்கொள்வதுபோலச் செயல்படாமல், ஏதோ அரசியல் கட்சிகளின் ஊர்வலத்திற்கோ, போராட்டத்திற்கோ கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதுபோல இருந்தனர் என்பதுதான் உண்மை.
ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. நமது காவல்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லை. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. தகுந்த ஆயுதங்கள் தரப்படவில்லை. காவல்துறையினர் "கள்ளன்-போலீஸ்' விளையாட்டுகளிலும், "மாமூல்' பொழுதுபோக்கிலும் ஈடுபட்டு வந்த காலம் மலையேறி, பயங்கரவாதக் கும்பல்களையும், முற்றும் கற்றுத் தேர்ந்த, சர்வதேசத் தொடர்புள்ள குற்றவாளிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாறுபட்ட சூழ்நிலைக்கு அவர்களை நாம் தயார்படுத்தாவிட்டால், முதல் பலி அவர்களாக இருக்கக்கூடும்.
மும்பையில், பயங்கரவாதிகள் வெளிநாட்டுப் பயணிகளைக் குறிவைத்து இயங்கினார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. மேலைநாடுகளில் தங்களது கைவரிசையைக் காட்ட முடியாத அளவுக்குப் பாதுகாப்பு இருப்பதால், இந்தியாவை அவர்கள் இலக்காக மாற்றி ரத்தப்பலி வாங்குகிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. நமது பாதுகாப்பு அமைப்புகள் ஒரு தலைமையின் கீழ் இயங்காமல் இருந்தால், இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது கடினம்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், எதிர்க்கட்சித் தலைவர் லால்கிஷன் அத்வானியும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் கலந்து பேசியிருப்பதும், ஒன்றுபட்டுச் செயல்பட உறுதி பூண்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. முறையான, முழுமையான பாதுகாப்பு அமைப்பும், அதற்கேற்றபடி சட்டங்களும், பயங்கரவாதத்தை நேர்கொள்ளப் போதிய அதிகாரத்துடன் ஒரு கூட்டுத் தலைமையும் அத்தியாவசியத் தேவை.
இது ஒரு தேசிய சவால். அதை எதிர்கொள்ள நம்மால் முடியும். இன்று நேற்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அன்னியத் தாக்குதல்களை எதிர்கொண்டு, துவளாமல் பீடுநடை போடும் பாரத தேசம், இதுபோன்ற சிறுமதியர் சதியால் துவண்டுவிடுமா என்ன? துயருண்டோ, துணிவுள்ளோர்க்கே?
Thanks : தினமணி
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் துறந்த அப்பாவி பொதுமக்களுக்கும், போலீசாருக்கும், தேசிய பாதுகாப்புப்படை கமேண்டோக்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி.
|
|
|
|
|
|
|
|