ரஜினி பேரக் கேட்டாலே... எனும் தலைப்பில் தமிழில் எழுதப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றப் புத்தகம் நேற்றும் மாலை சவேரா ஓட்டலில் வெளியிடப்பட்டது.
கவிஞரும் திமுக எம்பியுமான கனிமொழி கருணாநிதி முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதே புத்தகத்தின் ஆங்கில வடிவம் சில மாதங்களுக்கு முன் கன்னிமரா ஓட்டலில் வெளியிடப்பட்டது. அந்த விழாவைவிட எளிமையாக அதேநேரம் நேர்த்தியாக இம்முறை விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஷோபா சந்திரசேகரின் இறை வணக்கத்துடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. அதுவே ஒரு அழுத்தத்தைக கொடுத்தது நிகழ்ச்சிக்கு.
விழாவுக்கு வந்திருந்த விஐபிக்கள் ஒவ்வொருவருக்குமே தனித்தனியாக மேடையில் ஒரு அறிமுகம் கொடுத்து புத்தகப் பிரதிகளை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர் மதன் பேசுகையில்:
பொதுவாக ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் இருவித சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலும் ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை நிருபர் தனி வேலையாக அதை எடுத்துக் கொண்டு எழுதுவார். அதில் பெரும்பாலும் உண்மைகள் விடுபட்டு, வெறும் புகழ்ச்சிதான் மேலோங்கியிருக்கும்.
இன்னொன்று பிரபல எழுத்தாளர்கள் எழுத முன்வருவதில்லை. அப்படியே எழுதினாலும் அதில் விமர்சனம் நிறைவந்திருக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கில் எழுதப்படும் வாழ்க்கை வரலாறுகள்தான், நல்ல பதிவுகளாக அமையும்.
இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதுதான். நன்றாக எழுதியிருக்கிறார் காயத்ரி.
ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு. ஆனால் அதைப் பற்றி பேசும் மேடை இதுவல்ல.
தமிழ் சினிமாவில் தியாகராஜபாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அதையும் தாண்டிய பல பரிமாணங்கள் ரஜினி அவர்களுக்கு உண்டு.
வெளிநாடுகளிலும் ஒரு நடிகரைப் பற்றி பல புத்தகங்கள் வருகி்ன்றன. ஆனால் இங்கே அப்படி இல்லை. ரஜினியைப் பற்றி எப்போதோ இந்த மாதிரி புத்தகங்கள் வந்திருக்க வேண்டும். டாக்டர் காயத்ரி போன்றவர்கள் ரஜினியைப் பற்றி இன்னும் பல கோணங்களில் புத்தகங்கள் எழுதலாம். ஒரு ஞாயிற்றுக் கிழமையை இதற்காக ஒதுக்கி ரஜினியுடன் சில மணிநேரங்கள் உரையாடி, அதையே புத்தகமாகவும் கொண்டுவரலாம்.
அப்படிச் செய்யும்போது, ரஜினியைப் பற்றியும், அவரது எண்ணங்கள் பற்றியும், மக்களின் ரசனை குறித்தும் மக்களுக்குத் தெரியவரும், என்றார்.
கனிமொழி எம்பி:
தமிழில் இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன. ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள்.
இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்ந்ததுதான்.
தலைமுறைகளைக் கடந்தும் எப்படி ரஜினிக்கு மட்டும் இன்னமும் அதே ரசிகர் கூட்டமும், ஈர்ப்பு சக்தியும் உள்ளது என்ர ஆச்சரியம் பலருக்கு உண்டு. குழந்தைகளைக் கவரும் விதத்தில் நடிப்பது சாதாரண விஷயமல்ல, என்றார்.
எஸ்பி முத்துராமன் பேசுகையில் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துவிட வேண்டும். அப்போதுதான் ரஜினி என்ற மனிதர் இன்று உலகின் மிகச் சிறந்த நடிகராக போற்றப்படுவது ஏன் என்பது புரியும் என்றார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், உலகின் மிகச் சிறந்த நடிகர் என்ற பெருமை இந்தியாவிலேயே ரஜினிக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது என்றார்.
விழாவைத் தொகுத்து வழங்கிய பாஸ்கி தனது பாணியில் சூப்பர் ஸ்டாரின் பெருமைகளை வெகுவாகப் புகழ்ந்தார் (அதே நேரம் தன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டுவதாக நினைத்து நிறைய எல்லை மீறினார்!!).
நிகழ்ச்சி துவங்கும் முன் மும்பை குண்டு வெடிப்பில் இறந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த யோசனையை அவர்களுக்குத் தெரிவித்தவர் ஒன்லிரஜினி டாட்காம் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிபேரக் கேட்டாலே புத்தகத்துக்கு சில புகைப்படங்கள் கொடுத்து அவர் உதவியதையும் தனது நன்றியுரையில் குறிப்பி்ட்டார் டாக்டர் காயத்ரி
குறிப்பு: இந்த விழாவின் முழுமையான வீடியோ தொகுப்பை நமது www.rajinifans.com விரைவில் வெளியிட உள்ளது. அதனால்தான் முக்கியப் பிரமுகர்களின் பேச்சின் சுருக்கத்தை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம்.
மேலும் மதன் www.rajinifans.com-க்கு அளித்த சிறப்புப் பேட்டி நாளை இடம்பெறும்.
- சங்கநாதன்
|