வேலூருக்கு வந்த எந்திரன்!
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலூர் (வட ஆற்காடு) மாவட்டத்தில் ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. அந்தப் பெருமையும் கூட ரஜினியின் எந்திரனுக்குத்தான் கிடைத்திருக்கிறது(ஏகன் படப்பிடிப்பு ஏலகிரியில் நடந்ததாகக் கூறப்பட்டது உண்மையில்லை என்கிறார்கள்). ஒரு வேளை ஏதாவது சின்ன படம் அல்லது சீரியல்களுக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் செய்திகளாகிவிடாதல்லவா...

'சூப்பர் ஸ்டார் ஒருமுறை வந்தாலே போதும்,
அந்த இடத்துக்கு உலகப் புகழ் வந்து சேரும்!!'
என்ற நமது புதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலூருக்கு ரஜினி வந்தது அதற்குள் அகில இந்திய மீடியாவில் செய்தியாகிவிட்டது. விஸ்வநாதனின் வேலூர் பல்கலைக் கழகம் இனி ஹாலிவுட் வரையும் போகும்.
இதோ அதுகுறித்து மீடியா செய்தி:
வியாழக்கிழமை, கிறிஸ்துமஸ் தினத்தன்று ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு வேலூரை அடுத்த காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது.
அதிகாலையிலேயே ஷங்கர் தலைமையிலான படக்குழுவினர் நேற்று வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்குள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினர்.
காலை 8 மணிக்கெல்லாம் ரஜினி – ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனி கார்களில் வேலூர் வந்தனர். அவர்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று காலை டெக்னாலஜி டவரில் படிப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் ஆகியோர் வேலூர் வருகை தந்துள்ளது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
இன்னும் சில தினங்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறக் கூடும்.
-சங்கநாதன்