லாவாரிஸ்
இந்தி திரைப்பட உலகில் அமிதாப்பின் கொடி உயர உயர பறக்கத் தொடங்கிய காலத்தில் (1981) வெளியான இந்திப் படம். சமீபத்தில் இந்தப் படத்தில் அமிதாப் பாடும் ‘மேரே அங்காநே மே...’ பாடல் பார்த்ததும் ஒரு கணம் வியப்பில் விழிவிரிந்தது.
எத்தனை உணர்ச்சிகள், எத்தனை தத்ரூபமான தோற்ற மாறுதல்கள், என்ன ஒரு இயல்பான நகைச்சுவை... ரஜினி சொன்ன மாதிரி நடிப்புலகச் சக்கரவர்த்திகளில் அமிதாப்பும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக அந்த நெட்டையான உருவம் மற்றும் தடிமனான பெண் வேடத்தில் அமிதாப்பையே பார்க்கவே முடியாது. முழுக்க முழுக்க வேறு யாரோ நடித்திருந்த உணர்வு. அத்தனை வித்தியாசமான பரிமாணத்தைத் தந்திருப்பார் அமிதாப்.
குறிப்பாக குண்டுப் பெண்மணி வேடத்தில் அவர் போடும் ஆட்டமும், முக பாவனைகளும் ஆல் கிளாஸையும் அசத்திவிடும்.
அந்தக் கடைசி வேடத்தில் (லம்பாடிப் பெண்) பெண்களையே வியக்க வைக்கும் லாவகமும், பாவனைகளுமாக அமிதாப் மனதை அள்ளுவார்.
பாடலில் அமிதாப்பின் தந்தையாக வரும் அம்ஜத்கான் ஒரு இனிய அதிர்ச்சி. என்ன உடல் மொழி... என்ன முகபாவனை... நல்ல கலைக்கு பாஷை தேவையே இல்லை என அடித்துச் சொல்வது போலிருக்கும் அவரது நடிப்பு.
பாடலின் முக்கிய அம்சம், அது முழுக்க முழுக்க அமிதாப்பின் சொந்தக் குரல். அந்தக் காலத்தில் அமிதாப்பின் குரலுக்கே தனி ரசிகர் வட்டமுண்டு. ரங்கு பர்ஸே..., மேரி தி வானோ... கபி கபி... (முகேஷ் பாடுவதல்ல...) இப்படி எத்தனையோ பாடல்கள் அமிதாப் குரலில், ஹிந்தி தெரியாத தமிழகத்தின் பட்டி தொட்டிகளையும் கலக்கிய காலம் அது!
இந்தப் படம்தான் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பணக்காரன் என்ற பெயரில் 1990-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது.
குசேலன் படத்தில் வடிவேலு ஒரு காட்சியில் இப்படிச் சொல்வார்...
‘போடி போடி இவளே... அவர் படத்துக்கு டிக்கெட் வாங்கறதே கஷ்டம்... இதுல அவர்கூட நின்னு போட்டோ எடுக்கணுமாம்ல... நடக்கறதச் சொல்லுடி’ என்பார். இந்த வசனத்தைக் கேட்டதும் உண்மையிலேயே பணக்காரன் படம்தான் நினைவுக்கு வந்தது.
பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரஜினியின் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று.
ஆல்பர்ட் திரையரங்கில் இந்தப் படத்தின் 95-வது நாளன்று குடும்பத்தோடு படம் பார்க்கப் போய் (குடும்பத்தோடு முதல் முறை, நமக்கு 5-வது முறை!), ஹவுஸ்புல் என்று அவர்கள் சொல்ல, உடனடியாக அபிராமிக்குப் போய் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்த படம் இது.
படத்தில் ரஜினிக்கு அடுத்து சிறப்பு அம்சம் பாடல்கள். திரையிசையில் இளையராஜாவின் பொற்காலம் அது. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி... என்று ஒரு பாடல். தலைவருக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் இந்தப் பாடலை மனதுக்குள் ஓடவிட்டு ஆறுதல் படுத்திக் கொள்ளும் ரசிகர்கள் இப்போதும் நிறைய உண்டு.
இந்தப் படத்தில் இருமுறை வரும் ‘நூறு வருஷம்...’ என்ற பாடல் இன்று வரை கல்யாண, பிறந்த நாள் விழாக்களில் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. அமிதாப் லாவாரிஸ் படத்தில் பாடிய அந்த சூப்பர் ஹிட் மெட்டுக்கு இணையாக இளையராஜா போட்ட அசத்தல் மெட்டு இது.
உண்மையில் வேறு எந்த இசைமைப்பாளராக இருந்தாலும், பேசாமல் ஒரிஜினலையே போட்டுடலாம் சார் என பரிந்துரைத்திருப்பார்கள். ஆனால் இசை ராஜாவாச்சே... அப்படியெல்லாம் ஈயடிச்சான் காப்பிக்கு ஒப்புக் கொள்வாரா... அவர் புத்தம் புதிய மெட்டமைத்தார்.
அதுதான் ‘நூறுவருஷம்...’ பாடல்.
இந்தியில் அமிதாப்பே பாடியது போல, இந்தப் பாடலை நமது சூப்பர் ஸ்டாரை வைத்தே பாட வைக்க இயக்குநர் வாசு திட்டமிட்டு அதை ராஜாவிடமும் சொன்னார். ஆனால் பாடல் மற்றும் அந்த சூழலுக்கு ரஜினியின் குரல் பொருந்தி வருமா என யோசித்த ராஜா, அந்த யோசனையை மறுத்துவிட்டு மனோவை வைத்துப் பாட வைத்தார். அச்சு அசலாக ரஜினி பாடுவது போலவே அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்திருந்தார் மனோ. (இந்தக் குறையை பின்னர் அதே வாசு இயக்கிய மன்னன் படத்தில் வட்டியும் முதலுமாகத் தீர்த்து வைத்தார் இளையராஜா, அடிக்குது குளிரு.... பாடல் மூலம்!)
ரஜினி இந்தப் பாடலில் மூன்று வித கெட்டப்புகளில் வருவார்.
ஒரிஜினல் படத்தில் அமிதாப் மூன்றும் பெண் வேடங்களாகப் போட்டிருந்தார். ஆனால் ரஜினி இதில் இரண்டு வேடங்களில் தடிமனான மற்றும் நெட்டையான ஆணாகவும், கடைசியில் பெண் வேடத்திலும் வந்து கலக்குவார்.
பாடல் முழுக்க ரஜினியின் ஸ்டைல் நடை, வேக அசைவுகள், பாடலை அவரே பாடுவது போன்ற பொருத்தமான உடல் மொழி என கலக்கியிருப்பார், அமிதாப்புக்கு இணையாக.
இருவரின் நடிப்புமே இந்தப் பாடல்களில் வெவ்வேறு ரகம். ஒப்பிட முடியாத, ஆனால் அணுஅணுவாக ரசித்து மகிழ வேண்டிய நடிப்பு.
இந்த திரையுலகச் சக்கரவர்த்திகளுக்கு இணை...? ம்ஹூம்... சான்ஸே இல்லை...
இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் அவர்களுக்கு நிகர் அவர்களேதான்! நீங்களும் ஒருமுறை பார்த்துட்டுச் சொல்லுங்களேன்...
-சங்கநாதன்
|