சூப்பர் ஸ்டார் தனது பிறந்த நாளுக்கு முந்தைய நாள் - அதாவது 11/12/2009 வெள்ளிக்கிழமை அன்று மாலை நுங்கம்பாக்கத்தில் ‘தி ஸ்ப்ரிங்’ ஓட்டலை திறந்துவைத்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
(இந்த நிகழ்ச்சியின் முழு Official புகைப்படங்கள் Galatta.com இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மற்றும் ஒரு சில ஆங்கில நாளிதழ்களின் புகைப்படக்காரர்கள் மட்டுமே நிகழ்ச்சியின் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.)
தலைவர் ஓட்டலை திறந்து வைத்தபோது, உள்ளே நிலவிய சூழல் உங்களுக்கு தெரிந்திருக்கும். வெளியே நிலவிய சூழல் தெரியுமா?
அந்த ஓட்டலுக்கு அருகே அதே ரோட்டில் தான் எனது அலுவலகம் உள்ளது. நிகழ்ச்சி நடந்த அன்று இரவு சுமார் 7.45 மணிக்கு நாம் நமது அலுவலகம் முடித்துவிட்டு வெளியே வந்தோம். ஸ்ப்ரிங் ஓட்டலுக்கு எதிர்புறம் உள்ள சாலையோர டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும்போது, அக்கடைக்காரர் மூலம் சூப்பர் ஸ்டார் இன்னும் சற்று நேரத்தில் The Spring ஓட்டலை திறந்து வைக்கப்போகும் விஷயத்தை கேள்விப்பட்டு, வண்டியை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, ஓட்டலை நோக்கி சென்றோம். நாம் சென்ற போது, எப்படியோ சூப்பர் ஸ்டார் வருவதை ஊகித்து கடும்கூட்டம் கூடியிருந்தது.
(ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அறிவிப்பு இல்லை. பேனர் இல்லை. “தலைவர் வருகிறார்” என்ற ஜஸ்ட் ஒரு Guessing அல்லது செவி வழி செய்தி தான். அதற்கே பயங்கர கூட்டம் கூடிவிட்டது. அறிவித்துவிட்டு விளம்பரம் செய்துவிட்டு வந்தால்…? யூகத்து பாருங்களேன்….)
போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் வந்துவிட்டாரா அல்லது வரவில்லையா என்று தெரியவில்லை. அனுமதி இருக்கிறதோ இல்லையோ அழையா விருந்தாளியாக நாம் எந்த இடத்திற்கும் செல்ல விரும்புவதில்லை. அட்லீஸ்ட் வெளியே நிலவும் சூழ்நிலையை நம் தள வாசகர்களுக்காக பதிவு செய்யலாம் என்றெண்ணி சிறிது நேரம் நடப்பவற்றை கவனிப்பது என்று முடிவுசெய்தேன். எனவே, போலீசார் நம்மை விரட்டாத இடத்தில் நின்று அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தேன். வரவிருக்கும் விபரத்தை நம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய ஆரம்பித்தேன்.
நேரம் சென்றுகொண்டேயிருந்தது. தலைவர் வந்துவிட்டாரா அல்லது வரவில்லையா என ஒன்றும் புரியவில்லை. திடீர் திடீர் என்று பரப்பு ஏற்படும்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் தான் வந்துவிட்டார் என்று காத்திருந்த கூட்டம் திடீர் உற்சாகமடைந்தது. அவர் இல்லை என்று தெரிந்து ஏமாற்றமடைந்தது. இப்படியே சுமார் அரை மணி நேரம் சென்றுவிட்டது.
நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. “என்ன இங்க கூட்டம்?” என வண்டியோட்டிகள் விசாரிப்பதும், “சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார்” என்று கூட்டத்தினர் பதில் சொன்னவுடன் அவர்களும் தங்கள் பங்கிற்கு வண்டியை ஓரங்கட்டிவிட்டு கூட்டத்தோடும் ஐக்கியமாக இப்படியாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. போக்குவரத்திற்கு இடைஞ்சல் கூடாது என கருதிய அனைவரும் செண்டர் மீடியனில் நிற்க ஆரம்பித்தார்கள்.
திடீரென்று ஓட்டல் வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென்று “தலைவா”, “தலைவா” “சூப்பர் ஸ்டார்” என்று கோஷம், உற்சாகம். நாம் பார்த்துகொண்டிருக்கும் போதே ஒரு வண்டி - குவாலிஸ் - என்று நினைக்கிறேன் - விருட்டென்று வெளியே வர, அருகே நின்றிருந்த நபர் ‘தலைவா…தலைவா’ என்று கோஷமிட்டார். வண்டி நம்மை கடந்து சென்றுவிட்டது. அப்போது தான் தெரிந்தது, தலைவர் கிளம்பிவிட்டார் என்று. அந்த நபரை கேட்டபோது சொன்னார், “தலைவர் வண்டியினுள் இருந்தார். நான் வணக்கம் தெரிவித்ததற்கு உள்ளேயிருந்து கையெடுத்து கும்பிட்டு பதில் வணக்கம் சொன்னார். நீங்க பார்க்கவில்லையா சார்?” என்றார்.
அப்போது தான் நமக்கு புரிந்தது. தலைவர் எப்போ வருவார் எப்படி வருவார் என்பது மட்டுமல்ல, எப்போது கிளம்புவார், எப்படி கிளம்புவார் என்பது கூட யாருக்கும் தெரியாது. இது எப்படி இருக்கு? (அடுத்த தடவை உஷாராயிருக்கணும்!)
சரி… ஓட்டல் திறப்பு விழாவில் நடைபெற்றது என்ன?
இந்த ஓட்டல் இருக்கும் இடத்தில் சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலா ஓட்டல் இருந்து. அதன் முகப்பு பகுதியில் மாற்றம் செய்து, ஓட்டலை RENOVATE செய்து ‘The Spring’ என்ற பெயருடன் புதிய பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. இதை சூப்பர் ஸ்டார் வசந்த பவன் குழுமத்திற்கு லீசுக்கு விட்டுருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இதன் திறப்பு விழாவிற்கு வந்த சூப்பர் ஸ்டாரை வசந்த பவன் குழுமத்தின் தலைவர் ரவி முன் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
ஓட்டலின் பெயர்ப் பலகையை திறந்துவைத்த சூப்பர் ஸ்டார் உரையாற்றுகையில், “நான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு ரயிலேரியபோது என் தந்தை எனக்கு சொன்ன அட்வைஸ் - ரொம்ப சிம்பிள் - வரும் வருமானத்தை நிலத்தில் முதலீடு செய் என்பது தான். ஒரு நிலையான வருவாயை அது ஊர்ஜிதப்படுத்தும். இந்த நிலத்தை நான் வாங்கிய பிறகு கூடுதலாக நிறைய நேரம் உழைக்க ஆரம்பித்தேன். அந்த வருடம் மட்டும் பல மொழிகளில் சுமார் இருபது படங்கள் நடித்து இந்த நிலம் வாங்கிய கடனை அடைத்தேன்,” என்றார்.
இதை ஆங்கிலத்தில் ‘Commitment makes one’s life’ என்று கூறலாம். மிகப் பெறும் வாழ்க்கை நியதியாகும் இது.
கவியரசு வைரமுத்து பேசுகையில், “நீங்கள் சென்னையில் த்ரீ-ஸ்டார் மற்றும் பைவ் ஸ்டார் ஓட்டல்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இது சூப்பர் ஸ்டார் ஓட்டல்” என்றார் பலத்த சிரிப்புக்கிடையில்.
(தலைவரின் முகத்தை மட்டும் சற்று உற்றுப் பாருங்களேன். 15 வருடங்களுக்கு முந்தைய ரஜினியின் இளமை தெரியும். அத்துணை பொலிவாக உள்ளது. சீக்கிரம்எந்திரனை ரிலீஸ் பண்ணுங்க தலைவா.)
நிகழ்ச்சியில் ஐரோப்பிய கலைஞர்களின் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் உட்பட வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மேற்படி டான்ஸ் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், காவல் துறை உயர் அதிகாரி சேகர், ராம்குமார், கவியரசு வைரமுத்து, ரவி ராகவேந்தர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
|