நேரு ஸ்டேடியம் அமைந்திருக்கும் சாலை வி.ஐ.பி.க்களின் கார்களால் திக்கி திணறியது. “விழா 4.30 மணிக்கு துவங்குகிறது. நான்கு மணிக்கே வந்து இருக்கையில் அமரவேண்டும்” என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. ஆனால் நான்கு மணிக்கு சென்றவர்கள் கூட பெரும்பாலானவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இத்துணைக்கும் அனைவரிடமும் ‘அனுமதி அட்டை’ இருந்தது. காரணம் அரங்கம் நிரம்பிவிட்டது தான்.
நாம் குறித்த நேரத்திற்கு அங்கு சென்றாலும், அந்த சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. பல வாகனங்கள் ஸ்டேடியம் இருக்கும் சாலையில் நுழையக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஸ்டேடியத்தை அடைந்தால் அங்கு பார்க்கிங் நிரம்பிவிட்ட காரணத்தினால், நமது டூ-வீலரை பார்க் செய்ய இயலவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடு செய்து நாம் உள்ளே செல்ல மேலும் தாமதமாகிவிட்டது.
ஒரு வழியாக உள்ளே சென்று நமக்குரிய இடத்தில் அமர்ந்து சற்று ரிலாக்ஸ் செய்தோம். வி.ஐ.பி.க்கள் ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பித்தனர். அழைப்பிதழுக்கு ஒருவர் என்ற கணக்கிருக்க, பெரும்பாலான வி.ஐ.பி.க்கள் தங்களுடன் மற்றொருவரை அழைத்து வந்தனர். மேலும் பலர் மிகவும் தாமதமாக வர, அங்கு கடும் நாற்காலி தட்டுப்பாடு ஏற்பட்டது. சடசடவென குவிய ஆரம்பித்துவிட்ட வி.ஐ.பி.க்களை உட்கார வைக்க அமைப்பாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைவருக்கும் அவர்கள் மனம் கோணாது உரிய இடத்தில் உட்கார வைப்பது என்ன சாதாரண காரியமா?
மணி ஐந்தை கடந்துவிட்டது. தலைவரை காணவில்லை. முதல்வர் கூட வந்துவிட்டார். தலைவர் வரவில்லை. தலைவர் எந்த ஃபங்க்ஷனுக்கும் லேட்டா வரமாட்டாரே…. ஒருவேளை வரமாட்டாரோ…. சே.. சே… அப்படியிருக்காது… நிச்சயம் வருவாரு. எதிர்ப்பார்ப்பை அவரு என்னைக்குமே பூர்த்தி செய்ய தவறியதில்லையே… ட்ராஃபிக்ல மாட்டிஇருப்பாரு… இப்படி பலவாறாக மனம் சிந்தித்தது.
தலைவருக்காக காத்திருந்த நாற்காலி…
முதல்வருக்கு அருகில் அவருக்காக காணப்பட்ட காலி இருக்கை அவர் நிச்சயம் வந்தே தீருவார் என்று நமக்குக் உணர்த்தியது. நாற்காலிக்கு பலர் பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்க, அந்த நாற்காலியே அங்கு தலைவருக்காக காத்திருந்தது கண்கொள்ளா காட்சி.
திடீரென்று அரங்கில் பலத்த பரப்பரப்பு… கைதட்டலும் விசில் சத்தமும் பறக்க… புரிந்துவிட்டது தலைவர் வந்துவிட்டார் என்று. செக்யூரிட்டிகள் புடைசூழ சிங்கமென நடந்து வந்தார் தலைவர். (தலைவர் படத்தோட அறிமுக சீனை பார்த்த திருப்தி எங்களுக்கு!) வந்தவர் நேரே முதல்வரை நோக்கி சென்று அவருக்கு வணக்கம் சொன்னார். தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அருகிலிருந்த அமிதாப் மற்றும் கமல் ஆகியோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தனது சீட்டில் உட்கார்ந்தார்.
நாம் யூகித்தபடியே அட்டகாசமான வெள்ளை ஷர்ட் & ப்ளூ ஜீன்ஸில் வந்திருந்தார் தலைவர். நண்பர்கள் பலர் SMS மூலமாக, தலைவர் என்ன கெட்டப்பில் வந்திருக்கிறார் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
தலைவர் குடும்பத்தினர் அமர உதவி செய்த சரத்
தலைவரின் குடும்பத்தினர் - லதா மேடம், ஐஸ்வர்யா, மற்றும் தனுஷ் ஆகியோரும் சிறிது நேரத்தில் வந்துவிட்டனர். இருக்கை கிடைக்காது சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து ஓடி வந்து இவர்கள் அமர்வதற்கு உதவி செய்தார் சரத்குமார். (ரொம்ப நன்றி சார்!).
நாற்காலிகளை தியாகம் செய்த குடும்பத்தினர்
இடையில் தயாளு அம்மாளை பார்த்து, நலம் விசாரித்துவிட்டு வந்தார் ஐஸ்வர்யா. திருமதி.லதா ரஜினி அவர்கள் உட்கார்ந்த சிறிது நேரத்தில் திரு.கே.பாலச்சந்தர் வர, அவருக்காக தனது நாற்காலியை தியாகம் செய்தார் லதா. பின்னர் சிறிது நேரம் கழித்து அவருக்கு சேர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்து ஐஸ்வர்யா உட்கார ஒரு சேர் கிடைத்தது. ஆனால் அவர் இளையராஜா வந்தவுடன் எழுந்து நின்று, தனது இருக்கையை அவருக்காக விட்டுகொடுத்தார். அடுத்து தனுஷின் முறை. கார்த்திக் வந்தவுடன் அவர் எழுந்துநின்று, அவருக்கு அந்த சேரை தர முன்வந்தார். ஆனால் கார்த்திக் அதை ஏற்காமல், பரவாயில்லை என்று கூறி சென்றுவிட்டார். இப்படி தலைவரின் ஒட்டுமொத்த குடும்பமுமே தங்கள் நாற்காலிகளை அடுத்தவருக்காக தியாகம் செய்ய முன்வந்தனர்.
பொறாமை….
இங்கே தலைவர் தனக்காக காத்திருந்த நாற்காலியில் - முதல்வருக்கு அருகில் - அமர, பொறாமையில் பொசுங்கினர் சிலர். கலை நிகழ்ச்சிகளை ரசித்தபடியே முதல்வரும் தலைவரும் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தனர்.
நடிகர் திலகத்தின் காட்சி… எழுந்து நின்று கைதட்டிய சூப்பர் ஸ்டார்
திரையில் நடிகர் திலகத்தின் பட காட்சிகள் இடம்பெற, மெய்மறந்து ரசித்த சூப்பர் ஸ்டார், ஒரு கட்டத்தில் எழுந்து நின்று கைத்தட்ட, அதை பார்த்து கமலும் எழுந்து நின்று கைதட்ட, உடனே அமிதாப்பும் எழுந்து நின்று கைதட்டினார். (பார்க்க புகைப்படம்).
சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து, சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்தித்து நிகழ்சிகளை ரசித்துகொண்டிருந்தார் சூப்பர் ஸ்டார். நாம் அவருக்கு (நேரெதிர் பக்க வாட்டு) வரிசையில் மேலே ‘C’ (Diagonal Opposite) அமர்ந்துகொண்டிருந்தோம்.
பெரியார் நாடகத்தில் நடித்த சத்யராஜ், நடிகர்கள் பஞ்ச டயலக் பேசுவது பற்றி தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். (அதானே பார்த்தேன்!)
பாரதிராஜாவுக்கு மைக்கை பிடித்தாலே, தமிழ் பற்றும் மாநிலப் பற்றும் பிய்த்துக்கொண்டு வந்துவிடுவது வழக்கம். இந்த மேடை மட்டும் விதிவிலக்கா? (இதுக்கும் மேல இவங்களை பத்தி நான் இங்கே சொல்ல விரும்பலே!)
யாரது… தலைவர் CM கிட்டே அறிமுகப்படுத்துற அளவுக்கு முக்கியமான ஆள்?
நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென தலைவர் எழுந்து சென்று யாரோ ஒருவரை அழைத்துவந்து முதல்வரிடம் அறிமுகப்படுத்தினார். தலைவர் எழுந்துபோய் கூட்டிகிட்டு வந்து முதல்வர்கிட்டே அறிமுகப்படுத்துற அளவிற்கு முக்கியத்துவம் உள்ள அவர் யாராயிருக்கும் என்று ரசிகர்கள் ஒருவரையொருவர் கேட்டுகொண்டிருந்தார்கள். அவர் வேறு யாரும் அல்ல… ‘பா’ படத்தின் இயக்குனர் பால்கி.
நட்சத்திரங்களின் மார்க்கட் நிலவரம் அங்கு கிடைத்த கைதட்டல்களில் பிரதிபலித்தது என்றால் மிகையாகாது.
ஒரு சில பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை தவிர பெரும்பாலானவை - ஐயோடா சாமி…. தாங்க முடியலே… அதுவும் இந்த எம்.எஸ்.பாஸ்கர் காமெடி என்ற பெயரில் குடிகாரராக வந்து படுத்தி எடுத்துவிட்டார். அதை பார்த்துக்கொண்டிருந்த பலர் சங்கடத்தில் நெளிந்தனர். ஆனால் மேடையில் அரங்கேறிய பாடல்களில் - நடனங்களில் - உடைகளில் கூடுமானவரை ஓரளவு நாகரீகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
தூங்கி வழிந்துகொண்டிருந்த பார்வையாளர்கள், தம்மு (தமன்னா) வந்தபோது சற்று சுறுசுறுப்பானார்கள். நாம் சற்று அதிகமாகவே சுறுசுறுப்பாகிவிட்டோம் (ஹி…ஹி!).
அடுத்த வாரிசு பாடல் - நினைவுகளில் மூழ்கிய ரஜினி
பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர் ‘அடுத்த வாரிசு’ படப் பாடல், ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை… பாடலுக்கு ஆடிய நடனத்தை சூப்பர் ஸ்டார் விரும்பி ரசித்தார்.
அந்தப் பாடலை அவர் ரசித்துக்கொண்டிருந்த போட்து, ஸ்க்ரீனில் அவரது முக பாவத்தை அடிக்கடி காண்பித்தார்கள். ஒரு கணம் அவரது மனம் கடந்த காலத்துக்கு சென்று திரும்பி வந்ததை என்னால் உணரமுடிந்தது.
மனநிறைவை தந்த ஒரே நிகழ்ச்சி
பாராட்டு விழா நிகழ்ச்சிகளில் உருப்படியாகவும் மனநிறைவாகவும் அமைந்தது நடிகர் லாரன்சின் நிகழ்ச்சிதான். கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்ற தனது அரவணைப்பில் வளரும் ஆதரவற்றோர்கலை மேடையில் அறிமுகப்படுத்தி, இவர்கள் அனைவரும் இன்று உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள் கொண்டு வந்து இந்த திட்டம் தான் என்று கூறியபொழுது, பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். (பெண்கள் உட்பட பொதுமக்கள் கிட்டே இதற்க்கு சரியான ரெஸ்பான்ஸ் அங்கு!).
ஆசி பெற வந்த ஊனமுற்ற இளைஞர்… தடுக்க முற்பட்ட தலைவர்
அவரது குழுவில் இடம்பெற்ற - இடுப்புக்கு கீழே கால்களை முற்றிலும் இழந்த - ஊனமுற்ற இளைஞர் ஒருவரின் நடன நிகழ்ச்சியை அனைவரும் ரசித்தனர். நடனம் முடிந்து, அந்த இளைஞர் மேடையில் இருந்து கலைஞரிடம் ஆசிபெற கீழே வந்தார். இரு கைகளாலும் தவழ்ந்து வந்து கலைஞரிடம் ஆசி பெற்றவுடன், அடுத்து சூப்பர் ஸ்டாரை நோக்கி அவர் வர, “நோ… நோ… வேண்டாம் பரவாயில்லே… எதுக்கு ஸ்ட்ரெயின் பண்றீங்க…” என்ற தொனியில் சூப்பர் ஸ்டார் அவரை தடுக்க முற்பட (பார்க்க படம்) அதற்குள் அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் வந்து சூப்பர் ஸ்டாரின் காலையும் தொட்டு ஆசிபெற்றுவிட்டார். பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இது இருந்தது.
இந்த கைதட்டல் யாருக்கு?
சூப்பர் ஸ்டாரை க்ளோசப்பில் ஸ்க்ரீனில் காட்டிய்பொழுதெல்லாம் கைதட்டல் இருந்ததென்றால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐஸ்வர்யா தனுஷை ஸ்க்ரீனில் க்ளோசப்பில் காட்டியபொழுது கூட கைதட்டல் பலமாக இருந்தது பெரிய ஆச்சரியம். (இது தனுஷுக்கு கிடைத்த கைதட்டல். அது தான் உண்மை!!)
ரஜினியிடம் கேட்ட கேள்வி… கமல் சொன்ன பதில்
சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை பேசுகையில், “இது பகுத்தறிவு கருத்து மாறாக இருந்தாலும், நான் கலைஞரை ஒரு அவதாரமாகவே கருதுகிறேன். அது என்ன அவதாரம் என்று ரஜினி சார் போன்றவர்கள் தான் சொல்லவேண்டும்…” என்று பலத்த கரவொலிக்கிடையே சொல்லிவிட்டு போனார்.
நடிகர் கமல் பேசும்பொழுது இதற்க்கு பதிலளித்தார். “இங்கே பேசிய நண்பர் ஒருவர், கலைஞர் என்ன அவதாரம் என்று சொல்லவேண்டும் என்று கேள்வி கேட்டு, அதுக்கு பதில் சொல்லும் பொறுப்பை ரஜினியிடம் விட்டுவிட்டு போயிருக்கிறார். அதற்க்கு நான் பதில் சொல்கிறேன். என்னை பொறுத்தவரை இவர் எங்களையெல்லாம் உருக்கியெடுத்த கலைஞர் அவதாரம்” என்று சொன்னார்.
தலைவரின் துணிச்சல் - சில உதாரணங்கள்
அஜீத்தின் துணிச்சலை பாராட்டும் பலர், கூடவே முதல்வரை பக்கத்தில் வைத்துக்கொண்டே எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுந்து நின்று கைதட்டிய சூப்பர் ஸ்டாரின் துணிச்சலையும் சேர்த்து தான் பாராட்டுகிறார்கள். அதே சமயம் தான் பேச நினைத்ததையெல்லாம் அஜீத் பேசினார். அதனால் தான் ரஜினி எழுந்து நின்று கைத்தட்டினர் என்று கூறுவது தவறு. தாம் பேச விரும்புவதை எந்த மேடையிலும் பேசும் துணிவு தலைவருக்கு இருக்கிறது என்பது சரித்திரம் கூறும் உண்மை. 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலித்தா பங்கேற்ற செவாலியே விழாவிலிருந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற FEFSI விழா வரை இதற்க்கு சாட்சி.
அஜீத் பேசும்பொழுது சூப்பர் ஸ்டார் கைதட்டிய அந்த நொடிகள் - ஒரு விளக்கம்
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை, “இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளவேண்டும் என்று எங்களை நிர்பந்திக்கிறார்கள். ஆனால், இந்த விழாவிற்கு நாங்கள் நிர்பந்தத்தினால் வரவில்லை. உங்கள் மீது வைத்திருக்கும் அன்பினால் தான் ஐயா வந்தோம்” என்று அஜீத் சொன்ன வார்த்தைகளுக்காகத்தான் எழுந்து நின்று கைதட்டினார். எந்தவித திட்டமிடலும் இல்லாது தமது மனசாட்சி அந்த தருணத்தில் இட்ட ஆணைக்காக எழுந்து நின்று கைத்தட்டிய தலைவரின் அந்த செய்கை “அபயம்” என்று கஜேந்திரன் அலறியபோழுது அடுத்த கணம் பறந்துவந்து காப்பாற்றிய மகா விஷ்ணுவின் சக்ராயுதத்தை, போல இன்று அஜீத்தை பல பிரச்னைகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்றால் மிகையாகாது.
முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது முதல்வர் இயற்க்கை உபாதையை கழிக்க வெளியே செல்ல நேர்ந்தது. முதல்வர் இருக்கையைவிட்டு எழுந்திருக்க, சூப்பர் ஸ்டாரும் எழுந்துவிட்டார். அமிதாப்பும் முதல்வருடன் சென்றுவிட, கமலுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
குருநாதரிடம் ஆசி
சிறிது நேரம் கழித்து முதல்வர் திரும்பியவுடன் களை நிகழ்ச்சிகள் நிறைவுற்று அனைவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டது. முதல்வரை சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து செல்ல அவகாசம் தேவைப்பட்டது. அந்த தருணத்தில் சூப்பர் ஸ்டார், அங்கு வந்திருந்த தனது குருநாதரை (கே.பி.) சந்தித்து காலில் விழுந்து ஆசிபெற்றார். அப்போது அங்கிருந்திருந்த இசைஞானி இளையராஜாவிடமும் அமிதாப்பிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார் தலைவர்.
அது தான் கலைஞர்
மேடையில் முதல்வருக்கு அடுத்த இருக்கை சூப்பர் ஸ்டாருக்காக போடப்பட்டது. (கலைஞர் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயத்துல இதுவும் ஒன்னு. தாம் கலந்துகொள்ளும் பொது நிகழ்சிகளில் சூப்பர் ஸ்டாரும் கலந்துகொள்ள நேர்ந்தால், சூப்பர் ஸ்டார் தன் பக்கத்தில் அமருமாறு பார்த்துக் கொள்வார். சூப்பர் ஸ்டாருக்கு இந்த சிறப்பு முக்கியத்துவத்தை அளிக்க அவர் என்றுமே தயங்கியதேயில்லை. இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை கீழேயும் சரி மேடையிலும் சரி, முதல்வருக்கு அருகில் தான் ரஜினி அமரவைக்கப்பட்டார்.)
மேடையில் இருக்கைகள் போடப்பட்டதும் ஒருவர் பின் ஒருவராக பேச அழைக்கப்பட்டனர். கலைப்புலி ஜி.சேகரன் மைக் கிடைத்ததும் பேசிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் பொறுமையிழந்து, பயங்கரமாக கைதட்டினர். (அதுக்கு, போதும் போதும்… போய் உட்காருங்கன்னு அர்த்தம்).
உடனே மைக் பிடித்த பிரகாஷ்ராஜ், முதல்வரின் வயதை எடுத்துக்கூறி, “முதல்வர் ஐந்து மணிநேரமாக இங்கிருக்கிறார். தயவு செய்து அடுத்து பேச வருபவர்கள், சுருக்கமாக பேசுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்து பேசவந்த ஏ.வி.எம் சரவணன் இதை புரிந்துகொண்டு, பார்வையாளர்களை பார்த்து “நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு புரியுது. நான் அதிகம் பேசமாட்டேன்” என்று கூறி ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு சென்றார்.
ஆனால் அதற்க்கு பிறகு பேச வந்தவர்கள் எதை பற்றியும் கவலைப்படாது அவரவர் இஷ்டத்துக்கு நேரத்தை எடுத்து பார்வையாளர்கள் பொறுமையை ரொம்பவே சோதித்தனர். (நீங்களுமா? என்று சிலரை நினைக்க தோன்றியது. அந்தளவு அறுவை!)
தலைவா… நீ எப்போ பேசப்போறே …??
இவர்களெல்லாம் பேசி பேசி நேரத்தை விரயம் செய்துவிட, நமக்கு பயங்கர டென்ஷனாக இருந்தது. காரணம் இது போன்ற நிகழ்சிகளில் பெரும்பாலும் இறுதியில் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாருக்கு பேச நேரமிருப்பதில்லை. தலைவர் வந்திருக்கிறார், வருவார் என்ற ஒரே காரணத்துக்காக, அவர் பேசும் சில நிமிடங்களுக்காகத் தானே இது போன்ற நிகழ்சிகளில் மணிக்கணக்கில் பல அசௌகரியங்களை பொருட்படுத்தாது காத்திருக்கிறோம்.
சூப்பர் ஸ்டார் பேசியபொழுது மணி கிட்டத்தட்ட பத்துக்கும் மேலாகிவிட்டது. உணர்ச்சி வெள்ளத்தில் இருந்த நாம் அவர் பேசுவதை குறிப்பெடுத்துகொண்டாலும் , வார்த்தை வார்த்தை RE-COLLECT செய்து வெளியிடுவது கடினமாக இருந்தது. இருப்பினும் தலைவர் பேசியதாக நாம் முந்தைய தொகுதியில் வெளியிட்ட கருத்துக்கு எந்த மாற்றமுமில்லை. (கலைஞர் டி.வி.யில் எங்கே முழுசா போடப்[போறாங்க? அதுல பாக்குறதும் ஒண்ணு தான். பாக்காமல் இருக்கறதும் ஒண்ணுதான்.)
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தகாரண்டா…
என்ன காரணமோ தெரியவில்லை… மைக்கை பிடிக்கும்போழுதே முன்னெப்போதும் இல்லாத வகையில் சூப்பர் ஸ்டார் சற்று பதட்டமாக இருந்தார். ஆனால் சொல்ல வந்த அனைத்து விஷயத்தையும் சரியாக அதே சமயம் சுருக்கமாக சொல்லிமுடித்தார். தொழிலாளர்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு தாம் என்றுமே சொந்தக்காரன் என்பதை “அரசின் உதவிகள்” சரியானவர்களுக்கு போய் சேரவேண்டும் என்ற அவரது அக்கறை உணர்த்தியது.
சூப்பர் ஸ்டார் கூறிய ஓசி ஓட்டல் சாப்பாடு கதையை பார்வையாளர்கள் ரசித்துக்கேட்டார்கள். குறிப்பாக பெண்கள். தனது உரையின் இறுதியில் அமிதாப் பற்றி அருமையான ஆங்கிலத்தில் சூப்பர் ஸ்டார் பேசியது குறிப்பிடத்தக்கது. (தலைவா… நீ பேசும் தமிழ் மட்டுமில்ல, இங்கிலீஷ் கூட அழகு தான்!)
சூப்பர் ஸ்டார் பேசி முடித்தவுடன் அரங்கம் காலியாக துவங்கியது. பெரும்பாலானவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டனர்.
அறுவையும் அசத்தலும் கலந்து, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகள், சூப்பர் ஸ்டார் பேசுவதை கேட்கவேண்டும் என்று காத்திருந்த நமது பொறுமையின் காரணமாக நொடிப்பொழுதாக கரைந்து சென்றது.
|