அந்த நெகிழ்வான நிகழ்வை யாரும் இத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. திரைத் துறையில் கமல் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கௌரவித்த பாராட்டு விழா அது. தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து ‘கலைத்தாயின் தவப் புதல்வன்’ என்று கமலை உச்சி மோந்த அந்த விழாவில் மேடையேறினார் ரஜினி.
இருவருக்குமான நட்பின் ஆழத்தைமீண்டும் நிரூபித்த விழா. ”நான் அடிக்கடி யோசிப்பேன். இங்கே நான்,மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் தன் கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போறா. ஆனா, கமலை மட்டும் தோள்ல தூக்கி வெச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டேகேட்டேன், ‘ஏம்மா, இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே…அப்புறம் ஏன் இந்தப் பாரபட்சம்?’னு. அதுக்கு கலைத் தாய் சொன்னாங்க…’ ரஜினி! நீ போன ஜென்மத்துல தான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே. ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட்டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களா போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத்தோளில்வெச்சுக் கொண்டாடுறேன்!’னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில் நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே போதும்!’ என்று படபடவெனத் தன் பாணியில் ரஜினி பாராட்டி அமர, கமல் கண்களில் கண்ணீர்த் திரை. தொடர்ந்து மேடையில் இருவரும் கட்டியணைத்துக் கண்ணீரில் கரைந்த அந்தக் கணங்கள் நட்பு இலக்கணத்துக்கான அபூர்வ அத்தியாயங்கள்.
ஆனால்,அத்தியாயம் அதோடு முற்றுப் பெறவில்லை. விழா முடிந்து வீட்டுக்குச் சென்றபிறகும் ரஜினியின் மனதில் நீங்காத நினைவலைகள். சட்டென்று முடிவெடுத்து, ஒரு பிரபல ஓவியரிடம் தனது மனதில் தோன்றிய எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார்.கலைத் தாய் கமலைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு சிரஞ்சீவி, மோகன்லால்,விஷ்ணுவர்தன், ரஜினி, அமிதாப் பச்சன் ஆகியோரைத் தன் கைப்பிடித்துஅழைத்துச் செல்வது போன்ற ஓவியத்துக்கு உயிர் கொடுப்பதுதான் ரஜினியின்திட்டம். குழந்தை உடலில் இவர்களது இளமைக் காலத் தத்ரூப முகங்கள் வரவேண்டுமென்பது மாஸ்டர் பிளான். கமலுக்கு இந்த ஓவியம்பற்றிய தகவல்சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. 30இஞ்ச் அகலமும், 40 இஞ்ச் உயரமுமாக ஓவியம் முழுமையடைந்தபோது ரஜினிமுகத்தில் பரம திருப்தி.
கடந்தவாரத்தில் ஒருநாள் கமலுக்கு அந்த அன்புப் பரிசை அனுப்பி இருக்கிறார்ரஜினி. பார்சலைப் பிரித்து ஓவியத்தைப் பார்த்த கமல் நெகிழ்ந்துவிட்டார்.சில நிமிடங்கள் ஓவியத்தை உற்றுப்பார்த்தவர் கண்களில் மெல்லிய கண்ணீர்த்திரை. உடனே, ரஜினியைத் தொடர்பு கொண்டார் கமல். ”ஹாய் கமல், எப்டி எப்டி?நல்லா இருந்துச்சா? ஆர் யூ ஹாப்பி?” என்று ஆர்வமும் எதிர்பார்ப்புமாகவிசாரித்திருக்கிறார். நெகிழ்வும் மகிழ்வுமாகப் பதில் வார்த்தைகளைஉதிர்த்திருக்கிறார் கமல்.
ரஜினி பரிசளித்த அந்த ஓ(கா)வியம்!
”சிவாஜி, நாகேஷ் இவங்க ரெண்டு பேர் படம்தான் இதுவரை என் ஆபீஸ்ல மாட்டியிருக்கேன். இனி, ரஜினியின் இந்தப் பரிசுக்கும் என் ஆபீஸ்ல ஓர் இடம் நிரந்தரம்!” என்று மனம் திறந்திருக்கிறார். உயிரைக் குழைத்து வரைந்த அந்த ஓவியம் ரஜினி - கமலின் நட்பின் நினைவுச் சின்னமாக கமலின் அலுவலகத்தில் மின்னிக்கொண்டு இருக்கிறது!
|