23 October 2010
இயக்குனர்கள் சங்கம் துவங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சனிக்கிழமை நேரு உள்விளையாட்டரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்சிகள் நடைபெற்றது.
முக்கிய நடிகர்கள் மேடையில் தோன்றி அவர்களுக்கு பிடித்த இயக்குனர்களை மேடைக்கு அழைத்து அவர்களுடன் அளவளாவுவது போல ஏற்பாடு செய்யப்பட்டது.
இறுதியில் இயக்குனர் சிகரம் கே.பி. தனது சீடர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேர்காணல் செய்வது போல நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கே.பி. நாம் சூப்பர் ஸ்டாரிடம் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்டு அசத்திவிட்டார். சூப்பர் ஸ்டாரும் பதிலுக்கு அசத்தலான பதில்களை கூறி அசத்திவிட்டார்.
சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த கேள்வி பதில் தொகுப்பால், ஆடிட்டோரியமே அடிக்கடி கைதட்டல்களால் அதிர்ந்தது.
கே.பி: "நான் இப்போ ஒரு பிரஸ்காரன். அதாவது ஒரு பிரஸ்காரன் மாதிரி கேள்விகள் கேட்கப் போறேன். நான் என்ன கேள்விகள் கேட்கப்போரேன்னு அவருக்கு தெரியாது. அவர் சொல்ல தயங்குகுற கேள்விகளுக்கு தாராளமா 'நோ கமெண்ட்ஸ்' என்று சொல்லலாம்."
கே.பி: சிவாஜி ராவ் என்ற ஒரு சாதாரண நடிகனை நான் ரஜினிகாந்தாக்கினேன். நீ உன் சொந்த முயற்சியில் விஸ்வரூபம் எடுத்து இத்துனை உயரத்தை எட்டிவிட்டாய்… அதுவும் இந்த படம் வந்த பிறகு எந்திரன் வந்த பிறகு, நீ எங்கோ உயரத்துக்கு சென்றுவிட்டாய். மூன்று இமயமலை உயரத்துக்கு சென்றுவிட்டாய். இந்த உயரத்தை அடைந்துவிட்ட நீ, மீண்டும் சிவாஜி ராவாக முடியுமா? அதாவது சர்வர் சுந்தரம் ஆக முடியுமா?
ரஜினி: நான் சிவாஜி ராவா இருக்கிறதால தான் ரஜினிகாந்த்தா இருக்கேன். இந்த பேர், புகழ் இதெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை. அதனால தான் நான் இன்னும் இருக்கேன்.
கே.பி: நீ கோவிலுக்கு போக முடியாது. ஷாப்பிங் பண்ண முடியாது. ரோட்டுல நடக்க முடியாது. பெட்டிக் கடையில போய் ஒரு டீ சாப்பிட முடியாது. எல்லா சரவணா பாவனையும் நீ விலைக்கு வாங்கிடலாம். ஆனா அங்கே போய் உன்னால் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டாரா நீ கொடுத்த விலை என்ன? ப்ரைவசியே போய்டுச்சே. இது எவ்வளோ பெரிய லாஸ். அதுல உனக்கு வருத்தம் உண்டா…
ரஜினி: வருத்தம் உண்டு. என்னுடைய நிம்மதி சந்தோஷத்தை நான் ரொம்ப பறி கொடுத்திருக்கேன்.
ரஜினி: சாதாரண குடிமகனா நான் வெளியில நடமாட முடியல. ஒரு கைதி மாதிரி இருக்கேன். ஒரு PRISONER மாதிரி இருக்கேன்.
நேர்காணலில் சுயசரிதை எழுதுவது பற்றி கே.பி. கேள்வி கேட்டபோது, ரஜினி கூறினார்: "சுயசரிதை எழுதினா எல்லாம் உண்மை எழுதணும். எதையும் மறைக்கக்கூடாது. உண்மை எழுதினா நிறைய பேர் மனம் புண்படும்னு சொல்லி உண்மையை மறைச்சி எழுதக்கூடாது. மகாத்மா காந்தி சுயசரிதையை உண்மையா எழுதினாரு. அந்த தைரியம் எனக்கு வந்தா நான் கண்டிப்பா சுயசரிதை எழுதுவேன்."
அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளித்தார்: "காப்பாத்திக்கனும்னு சொல்லி DEFINITE ஆ நான் ட்ரை பண்ணமாட்டேன். ஏன்னு சொன்னா இந்த பொஷிஷனை நான் எதிர்பார்க்கலே. நிறைய படத்துனால வந்த பொசிஷன் இது."
தமிழ் சினிமாவுக்கு என்ன செய்வார் என்ற கேள்விக்கு: "DEFINETE ஆ நான், தமிழர்களும் தமிழ் சினிமாவும் பெருமைப் படுறமாதிரி ஏதவாது செய்வேன்."
RAPID FIRE பகுதியில் பல சுவாரஸ்யமான பதில்கள்:
பிடித்த இயக்குனர்: மகேந்திரன்
பிடித்த நாவல்: பொன்னியின் செல்வன்
பெஸ்ட் ஃப்ரெண்ட்: ராஜ் பகதூர்
மிகவும் மகிழ்ச்சியான தருணம்: கே.பி.சார் எனக்கு மூணு படத்துல கொடுத்த வாய்ப்பு
நேர்காணலின் இறுதியில் அரசியல் பற்றிய கேள்விக்கு ரஜினி மேலே கையை காண்பித்து "ஆண்டவன் கையில இருக்கு" என்று பதிலளித்தார்.
கே.பி. - ரஜினி நேர்காணல் தொகுப்பு இனிதே முடிந்தது. விழாவின் மற்ற சுவாரஸ்யமான பகுதிகள் சம்பவங்கள் தனிப்பதிவாக வெளிவரும்.