Kaapaan Audio Release Function (2019)
(21 July 2019)
புதிய கல்வி கொள்கை பற்றி நான் பேசினால்தான் பிரதமர் மோடிக்கு கேட்குமா?’ என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம் காப்பான்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது: சிவாஜி’ படத்தில் நான் நடித்தபோது, இந்த படம் ஹிட்டாகும் என்று டைரக்டர் ஷங்கரிடம் கே.வி.ஆனந்த் சொன்னார். அவரது கணிப்பு சரியாக இருக்கும். ஒளிப்பதிவு செய்வதிலும் வித்தியாசம் காட்டுவார். அவரது டைரக்ஷனில் நான் நடித்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது நடக்கவில்லை. மோகன்லால் மாதிரி நேச்சுரலாக நடிப்பவர் யாரும் இல்லை. ஆர்யாவை பார்க்கும்போது, நான் கடவுள்’ அகோரி ஞாபகத்துக்கு வருகிறார். இமயமலையில் நான் நிறைய அகோரிகளை பார்த்திருக்கிறேன். ஒருமுறை கங்கை நதியில் எனது ருத்திராட்சம் தொலைந்துவிட்டது. ரொம்பவும் கவலைப்பட்டேன். அப்போது ஒத்தையடி பாதையில் தென்பட்ட அகோரியை வணங்கி, என்னிடம் இருந்த பணத்தை கொடுத்தேன். அதற்கு அவர், உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். உடனே நான், என்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்றேன். நீ ருத்திராட்சத்தை தொலைத்துவிட்டாய். அது உனக்கு கிடைக்கும் என்றார். அதன்படி ஒரு ஆசிரமத்தில் இருந்த பெண் என்னிடம் ருத்திராட்சத்தை கொடுத்தார். இதுதான் அகோரிகளின் சக்தி.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் கலவைதான் ஹாரிஸ் ஜெயராஜ். அவரது வசீகரா’ பாடலுக்கு நான் பெரிய ரசிகன். வைரமுத்துவின் தமிழாற்றுப்படை’யை படித்தேன். மொழி அழிந்தால், ஒரு இனமே அழிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இலக்கியமும் தெரிந்துகொள்ள வேண்டும். சிவகுமாருடன் கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படங்களில் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த நடிகையுடனும், பெண்ணிடமும் என்னை அவர் பேச விட மாட்டார். ஏதாவது படி, எழுது என்று சொல்வார். நேருக்கு நேர்’ படத்தை பார்த்தபோது, சூர்யா எப்படி ஒரு நடிகராக முடியும் என்று சந்தேகப்பட்டேன். இப்போது அவர் நல்ல நடிகராகிவிட்டார். புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா எழுப்பிய கேள்விகளை நான் வரவேற்கிறேன். அவர் சொன்ன விஷயங்களை சர்ச்சைக்குள்ளாக்கி விட்டனர் என்றாலும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால் இப்படி சொல்லியிருக்கிறார். இதுபற்றி நான் பேசினால்தான் பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பலர் சொன்னார்கள். சூர்யா பேசியது கூட மோடிக்கு கேட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
|