Related Articles
ஆஷ்ரம் பள்ளியின் 19வது ஆண்டு விழா - சூப்பர் ஸ்டார் ரஜினியின் உரை
நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், பாலாபிஷேகம் என தூள் கிளப்பிய சைதை ரஜினி ரசிகர் நற்பணி விழா!
முள்ளும் மலரும் வந்து 31 வருசம் ஆகுது ...
உயிரைக் குழைத்து ஓவியம் வரைந்தேன் - கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு
இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் ... தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!
சங்கத் தமிழ் பேரவையின் முதல்வர் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி
சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் நிச்சயதார்த்தம்! அசத்தல் படங்கள் !!
கலையுலக விழா நேரடி ரிப்போர்ட்
ரஜினி கலந்துகொண்ட... ஒய்.ஜி.மகேந்திராவின் பிறந்த நாள் ... கோவா ... ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு காட்சி
ஜக்குபாய் பிரஸ் மீட் ... திரைத்துறையினர் மனு ... ஜக்குபாய் பிரீமியர் ... சூப்பர் ஸ்டார் ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டு விழா
(Sunday, 1st August 2010)

எந்திரன் இசை வெளியீட்டு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள் + இன்றைய தினகரனில் வந்த செய்தியின் மொத்த எழுத்துரு இங்கே தரப்பட்டுள்ளது.

திரண்டு வந்த திரையுலகம்

சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட படைப்பான ‘எந்திரன்’ பாடல்கள் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது.


இந்திய நட்சத்திரங்கள், மலேசிய பிரமுகர்கள், ரசிகர்கள் முன்னிலையில் ‘எந்திரன்’ பாடல் சிடியை சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பட நாயகி ஐஸ்வர்யா ராய், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கவிஞர் வைரமுத்து வெளியிட்டனர். நடிகர் நடிகைகளின் டான்ஸ் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முரசொலி செல்வம், செல்வி செல்வம், காவேரி கலாநிதி மாறன், பிரியா தயாநிதி மாறன், ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு, பாடலாச¤ரியர் கார்க்கி வைரமுத்து, படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா, நடிகர்கள் ஜெயம் ரவி, வடிவேலு, ராதாரவி, கருணாஸ், நடிகைகள் ஸ்ரேயா, ரம்யா கிருஷ்ணன், சங்கீதா, பாடகர் கிரீஷ், தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன், டி.சிவா, ஹெச். முரளி, முரளி, அய்யப்பன், கதிரேசன், எஸ்.என்.ராஜா, சிவஸ்ரீ சீனிவாசன், இயக்குனர், கிச்சா, எஸ்.ஏ.சந்திரசேகரன்,விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், தெலுங்கு விநியோகஸ்தர்கள் மகேஸ்வர ரெட்டி, சுரேஷ், ஜனார்த்தன், பாலமுரளி, ஜி.கே.ரெட்டி, அஜய் குமார் மற்றும் வசந்தபவன் ரவி, வீனஸ் ஆடியோ சஞ்சாய் பண்டாரி, சம்பக் கணேஷ் ஜெயின், திங்க் மியூசிக் சொரூப் ரெட்டி உட்பட திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை நடிகர் விவேக் தொகுத்து வழங்கினார். சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா நன்றி கூறினார்.


‘எதையும் வெற்றிகரமாக செய்பவர் கலாநிதி மாறன்’ - எந்திரன் திரைப்படம் சரித்திரம் படைக்கும் - ரஜினி நம்பிக்கை

ரஜினி பேசியதாவது:

இது வித்தியாசமான சரித்திரம் படைக்கப்போகும் படம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.150 கோடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் என்பதால் எந்திரன் சரித்திரம் படைக்கப்போகிறதா… அல்லது ஷங்கர் & ஐஸ்வர்யா ராய், சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியதால் சரித்திரம் படைக்கப்போகிறதா… என்பதில்லை. ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு இணையாக சொல்லும் அளவுக்கு இந்தியாவிலேயே எந்த படமும் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. அதனால்தான் இந்தப் படம் ஒரு சரித்திரம் என்றேன். இதற்கு கலாநிதி மாறன்தான் காரணம்.

முதலில் வேறு ஒரு நிறுவனம் இதை தயாரிப்பதாக இருந¢தது. சில சூழ்நிலைகளால் அதிலிருந்து வெளியே வர நேர்ந்தது. அதன் பிறகு கலாநிதி மாறனை சந்தித்தோம். ‘இந்த படத்தின் கதையை கேளுங்கள்..’ என்று ஷங்கர் சொன்னார். கலாநிதி உடனே, ‘உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு பட்ஜெட், எத்தனை நாட்களில் முடிப்பீர்கள்?’ என்று கேட்டார். ஷங்கரும் பட்ஜெட் சொன்னார். ‘நாலு நாள் கழித்து முடிவு சொல்கிறேன்’ என்று கலாநிதி மாறன் கூறினார்.

பிறகு நாங்கள் அவரை சந்தித்தபோது, ‘சிவாஜி’ படத்தின் மொத்த வசூல் விவரத்தையும் தியேட்டர் வாரியாக அவர் வைத்திருந்தார். இதை சிவாஜி பட தயாரிப்பாளர் கூட வைத்திருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு பிராக்டிக்கலாக இருக்கிறார். ‘இதைவிட பெரிய படமாக எந்திரனை பண்ணலாம், பிரமாண்டமாக செய்வோம்’ என்றார். அவர்தான் கலாநிதி மாறன்.
எதை செய்தாலும் வித்தியாசமாக செய்வது, பெரிதாக செய்வது, வெற்றிகரமாக செய்வது. அதனால்தான் சின¤மா நட்சத்திரங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், பெரிய தொழில் அதிபர்கள் எல்லாரும் கலாநிதி மாறன் யார் என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவர் அறிமுகத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், இவர் ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார். இவர் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக கட்டாயம் வருவார்.

சிவாஜி படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசனிடம் ஷங¢கரை பற்றி கேட்டேன். ‘கெட்டிக்காரர். ஆனால் அதிகம் வேலை வாங்குவார்’ என்றார். ஷங்கருடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது. என்னை பற்றி பெருமையாக பேசினார்கள். பெருமைப்படும் அளவில் நான் ஒன்றும் செய்யவில்லை. என் படங்களில் பஞ்ச் டயலாக் நானே யோசித்து சேர்ப்பேன். எந்திரனில் அப்படி நானாக எதையும் செய்யவில்லை. எல்லாமே ஷங்கர் பார்த்துக் கொண்டார். குழந்தைக்கு விதம் விதமாக மேக்கப் போட்டு ஆடு, பாடு என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது தப்பு தப்பாக செய்தாலும் கைதட்டி பாராட்டுவார்கள். என் ரசிகர்களான நீங்கள் எல்லாம் என்னை அப்படி அழகு பார்க்கிறீர்கள்.

ஷங்கர் சேர்த¢துள்ள கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. இந்த மாதிரி கூட்டணி சேர்ந்தால் 234 தொகுதியும் ஓகேதான். வைரமுத்து பேசும்போது, ‘இந்தியாவிலிருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் இயக்குனர் ஷங்கர்தான்’ என சொன்னார். அதை நானும் ஆமோதிக்கிறேன்.

ஐஸ்வர்யா ராய் வழக்கமான நடிகை அல்ல. இதற்கு முன் பல உலக அழகிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாரும் இல்லை. அழகுடன் அபார அறிவும் கொண்டவர் அவர்.

ஒரு மனிதனுக்கு ஈகோ இருக்கக்கூடாது. ஈகோவை அழிப்பது ஆன்மிகம். ஈகோ சிறிதும் இல்லாததால் இவ்வளவு புகழ் கிடைத்தும் எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறார் ரகுமான். யோகி, மகான் என்றால் இமயமலையில்தான் இருக்க வேண்டும் என்று அல்ல. கோட் சூட் போட்டுக்கொண்டும் இருக்கலாம்.

ரஜினி சொன்ன குட்டிக்கதை

மேலே போனாலும் கீழே வந்தாக வேண்டும் என்பதற்கு ரஜினி சொன்ன கதை:

எத்தனை உச்சிக்கு போனாலும் எல்லா மனிதர்களும் கீழே இறங்கி வந்தாக வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு இடத்தில் 70 மாடி கட்டிடம் இருந்தது. மேல் மாடிக்கு போக லிப்ட்டில் ஏறினோம். பாதியில் லிப்ட் நின்றுவிட்டது. படிகளில் ஏற வேண்டும். ‘ஆளுக்கு ஒரு கதை சொல்லுவோம். கால் வலி தெரியாமல் மேலே போய்விடலாம்’ என்றார்கள். அப்படியே ஒவ்வொருவரும் கதை சொன்னார்கள். 69வது மாடி வந்தபோதுதான் நான் சொன்னேன், ‘ஐயோ, வீட்டு சாவியை எடுத்துவர மறந்துவிட்டேன்’ என்றேன்.

‘சரி, கீழே போய் எடுத்து வருவோம்’ என்று இறங்கினோம். கீழே இறங்கி மேலே போவதுதான் வாழ்க்கை. அதுதான் சந்தோஷம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

 

எங்கெங்கு காணினும் வெற்றியடா! ஏழுகடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா!
- முத்தமிழ் அறிஞர் முதல்வர் வாழ்த்து

‘எந்திரன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் கருணாநிதி பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்தார். நவீன தொழில்நுட்பமான எச்.டி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அவரது வாழ்த்து கோலாலம்பூர் விழாவில் திரையிடப்பட்டது. அதில் முதல்வர் கூறியதாவது:

தமிழ்நாட்டு மக்களுக்காக & பொதுவாக உலகத் தமிழர்களுக்காக & எந்திரம் போல் உழைத்துக் கொண்டிருக்கின்ற எனக்கு, ‘எந்திரன்‘ திரைப்படத்தை பற்றி சிலவற்றை சொல்லக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

‘எந்திரன்‘ படம் இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாகும். சன் பிக்சர்ஸ் தம்பி கலாநிதி மாறன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் என் இனிய நண்பர் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கும் பிரமாண்டமான படம். கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் பிழிந்தெடுக்கும் ஆற்றல் பெற்ற இயக்குனர் ஷங்கர், கலை உலகில் இருக்கின்ற அற்புத திறனாளிகள் பலருடைய திறமையை வெளிப்படுத்தி இயக்கியுள்ள திரைப்படம் ‘எந்திரன்‘.

மனிதநேயம் கொண்டவரும் மனதில் அப்பழுக்கின்றி மாசற்ற மாணிக்கங்களில் ஒருவராக விளங்குபவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரும்பாடுபட்டு வெளிக்கொணரும் இந்தப் படம் பெரும்புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.

பொன்குடத்திற்கு பொட்டு வைத்தால், அதன் பொலிவைப் புகலவும் வேண்டுமோ! ஆம், நமது ஆஸ்கார் நாயகன் தம்பி ஏ.ஆர்.ரகுமான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நோக்கப் பாடலுக்கு இசையமைத்து இமயப் புகழ் பெற்றதை அடுத்து, ‘எந்திரன்‘ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார்.

ஒப்பனை செய்துகொள்ளவே ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் வரை ரஜினிகாந்த் செலவிட்டு இருக்கிறார் என்றால், அவர் எடுத்துள்ள சிரமத்திற்கு, கொடுத்துள்ள உழைப்புக்கு ஈடு இணையற்ற பரிசாக இந்த ‘எந்திரன்‘ வெளிவர இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் பத்துக்கு மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், இந்த ‘எந்திரன்‘ படத்தின் மூலம், ‘எங்கெங்கு காணினும் வெற்றியடா! ‘எந்திரன்’ படம் ஏழுகடல் தாண்டியும் முழங்குமடா!’ என திரையுலகம் திரும்பத் திரும்ப பாடத்தான் போகிறது.

இவ்வாறு முதல்வர் வாழ்த்தியுள்ளார்.


விழா துளிகள்

* புத்ரஜெயா என்பது மலேசியாவின் நிர்வாக தலைநகரம். கோலாலம்பூருக்கு வெளியே திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிய அழகான இடம். அங்குள்ள கன்வென்ஷன் சென்டர் சர்வதேச மாநாடுகள் கருத்தரங்குகள் நடைபெறும் நவீன அரங்கம். எந்திரன் விழாவுக்காக அரங்கம் வெள்ளியன்றே விழாக்கோலம் பூணடது. வண்ண விளக்குகளால் ஜொலித்தது பிரமாண்ட மேடை.

* மலேசிய, சீன நடன கலைஞர்கள் அவரவர் பாரம்பரியத்தில் உலகப்புகழ் பெற்ற நடனங்களை நிகழ்த்தி வரவேற்றனர்.

* நுழைவாயிலில் இரு ராட்சத ரோபோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வருக.. வருக… என சைகையில் வரவேற்றன.

* ‘எந்திரன்’, இந்தியில் ‘ரோபோ’ என்ற பெயரில் ரிலீசாகிறது. இந்தி படத்தின் பாடல்கள் சிடியும் இதே விழாவில் வெளியிடப் பட்டது.

* படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டபோது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

* ‘எந்திரன்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் டான்சர்கள் ஆடியபோது, ரசிகர்களின் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது.

* சீனாவை சேர்ந்த ஷாவ்லின் மாங்க்ஸ் குழுவினர் பங்கேற்ற அதிரடி சாகச சண்டைக் காட்சிகளை ரசித்த ரஜினி பரவசப்பட்டு எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.

* ‘எந்திரன்’ படம் உருவானதை விளக்கும் ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ காட்சிகள் திரையிடப்பட்டது.

பல முயற்சிகளுக்கு பிறகு நனவானது என் கனவுப்படம் - ஷங்கர்

நான் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படம் இந்த நாட்டில் 100 நாள் ஓடியது. நான், ஐஸ்வர்யா ராய், ரகுமான் இணைந்திருந்த படம் அது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறார்கள். அதனால் எந்திரன் இங்கே 200 நாள் ஓடும் என்று என்று எதிர்பார்க்கிறேன்.
எந்திரன் என் கனவுப் படம். இரண்டு பேர் இல்லையென்றால் என் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து எனது கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்.

இந்த படத்தில் ரகுமானின் இசையை கேட்கும்போது அவருக்கு ஏன் ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் என்பது புரியும். அவரது உழைப்புதான் அந்த உயரங்களை கொடுக்கிறது.

ஷங்கர் நெகிழ்ச்சி

இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ என்ற பழங்குடியின பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு டியூன் போட்டுக் கொடுங்கள் என்று ரகுமானிடம் கேட்டேன். மூன்று டியூன் போட்டுக் கொடுத்தார். எதிலும் எனக்கு திருப்தியில்லை. அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக ஒரு டியூன் போட்டுக் கொடுத்தார். பிரமாதமாக வந்திருக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் படத்தில் பிரமாதமாக அமைந்திருக்கிறது.

எனது முந்தைய படங்களைவிட எந்திரனில் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கும். அதற்கு காரணம் ரத்னவேலுவின் திறமை. சிவாஜி படத்தில் ரஜினியை அழகாக காட்டினேன். எந்திரனில் அவரை இன்னும் அழகாக காட்டியிருக்கிறேன். ரத்ன வேலுவின் லைட்டிங்தான் காரணம்.

ஐஸ்வர்யா ராயை லேடி ரஜினி என்று குறிப்பிடலாம். அவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்திருக்கிறது. ஹீரோவுக்கு நிகரான அவரது உழைப்பு அபாரமானது.

இந்த படத்தை எடுக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் பட்ஜெட் இவ்வளவு அதிகமா என்று யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் இந்தியில் எடுக்கலாம் என்று முயற்சித்தேன். சில சூழ்நிலைகளால் அங்கும் முடியவில்லை. தமிழிலேயே எடுத்தால் என்ன என்று தீவிரமாக யோசித்தபோது ரஜினி கைகொடுத்தார். படத்தில் ரஜினியின் உழைப்பு அபார மானது. மேக்&அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக காத்திருந்தார். சிரமம் பார்க்காமல் உழைத்தார். அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட்.

டெக்னீஷியன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த படத்திற்காக இரண்டு வருடமாக நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து உதவிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி.

இந்திய சினிமாவின் புதிய அடையாளம் - ஐஸ்வர்யா ராய் பெருமிதம்

‘எந்திரன்’ படம் ரொம்ப ஸ்பெஷல். எனக்கும் இந்த படம் ஸ்பெஷல்தான். இந்த படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு முழுமையான ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் நடித்திருக்கிறேன்.

படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த படம் இந்திய சினிமாவின் புதிய அடையாளமாக உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக கலாநிதி மாறனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இயக்குனர் ஷங்கரால் முடியாதது எதுவும் இல்லை என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். படத்தின் மகத்தான வெற்றி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனைவருக்கும் நன்றி.

தமிழ் உலகை வலம் வர எந்திரன் விழா அடித்தளம் - ஏ.ஆர்.ரகுமான் உற்சாகம்

தமிழ் மிகச்சிறந்த மொழி. உலகம் முழுவதும் தமிழைக் கொண்டு செல்ல என்னால் என்ன முடியும் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். மலேசிய தலைநகரில் நடக்கும் இந்த ‘எந்திரன்’ பாடல்கள் வெளியீட்டு விழா அதற்கு அடித்தளமாக அமையும் என்று நினைக்கிறேன்.

என் மகள் கதீஜாவிடம் இந்த படத்துக்கு பாடுமாறு கேட்டிருந்தேன். வழக்கமாக நான் இசையமைப்பது நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி என இருக்கும். அந்த நேரத்துக்கு வந்து கதீஜாவால் பாட முடியுமா என்று நினைத்தேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்தவள், அரை மணி நேரத்தில் நான்கு மொழிகளுக்கும் சேர்த்து பாடி அசத்தி விட்டாள்.

‘புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான், கதீஜா இணைந்து பாடியிருக்கிறோம். படத்தின் எல்லா பாடல்களையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.

அவர் இடத்த யாராலும் பிடிக்க முடியல: வடிவேலு

நம்ம ஊர்ல பஸ்சுல இடம்புடிக்க துண்டு போடுவாய்ங்க. துண்டு இல்லாட்டி கால் செருப்பக்கூட போட்டு வைப்பாய்ங்க. நான் வேட்டிய போட்டுக்கூட இடம் புடிச்சிருக்கேன். பஸ்சுல இடம்புடிக்கவே அம்புட்டு பிரச்னை இருக்கு. ரெண்டு வருஷம் ரஜினி இந்த படத்துல நடிச்சிருக்காரு. திரையுலகம்கிற பஸ்சுல அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியல. ஜாக்கிசான் முதல் சூப்பர் ஸ்டாருன்னா, ரெண்டாவது சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

ஒரு ஆஸ்கருக்கே போராடிகிட்டு கெடக்கிறாய்ங்க. ஆஸ்கரு விருத மூட்டையில அள்ளிகிட்டு வந்தவரு நம்ம ரகுமான். அதுக்கு பெறகும் பல விருதுகள வாங்கிக்கிட்டே இருக்காரு. உலகம் முழுக்க, தமிழனோட திறமையை காட்டினவர் ரகுமான்.

படத்தை சூப்பரா தயாரிச்சிருக்கிற சன் பிக்சர்சுக்கு நன்றி.

அசந்து போயிட்டேன் - ஸ்ரேயா

ரஜினியோடு ‘சிவாஜி’ படத்தில் நடித்தேன். அவருடைய எளிமையை பார்த்து அசந்து போயிட்டேன்.
ஷங்கரிடம் நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாழ்க்கை இருக்கும். அவரோட பாட்டை எப்போது கேட்டாலும் புது உத்வேகம் கிடைக்கும்.

வெற்றி உறுதி: ஜெயம் ரவி

ரஜினி படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரைப் பார்த்து சினிமாவுக்கும் வந்தவன். அவர் முன்னாடி மேடையில நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. ரஜினிகாந்த் என்கிற பெயரிலியே ‘காந்தம்’ இருக்கிறது. ஐஸ்வர்யாராய் என்ற பெயரில் ‘ஐஸ்வர்யம்’ இருக்கிறது. கலாநிதி மாறன் என்ற பெயரில் ‘நிதி’ இருக்கிறது. ஷங்கர் என்ற பெயரில் ‘பிரமாண்டம்’ இருக்கிறது. அதனால் படத்தின் வெற்றி உறுதி.

ஹிட் நிச்சயம்: கருணாஸ்

சாதாரண லொடுக்கு பாண்டியாக இருந்த என்னை, திண்டுக்கல் சாரதியாக்கியது சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன். அவர் தயாரித்திருக்கிற இந்த மாபெரும் படம் எதிர்பார்க்க முடியாத ஹிட்டை கண்டிப்பாக கொடுக்கும் என்று நம்புகிறேன்.

சந்தேகமே இல்லை: சிம்பு

ஒரு படத்துக்கு காம்பினேஷன் ரொம்ப முக்கியம். அது கரெக்டா அமைந்தால் படம் வெற்றி பெறும். டாப் ஹீரோ, டாப் ஹீரோயின், டாப் டைரக்டர், டாப் புரொட்யூசர், டாப் டெக்னீஷியன்ஸ். பிறகென்ன… இந்த படத்தின் வெற்றியில் சந்தேகமே இல்லை.

 

 






 
0 Comment(s)Views: 824

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information