Annai Oru Aalayam (1979)
சாண்டோ சின்னப்ப தேவர் மறைவுக்குப்பின், அவர் மகன் சி.தண்டாயுதபாணி "தேவர் பிலிம்ஸ்'' பேனரில் படங்களைத் தயாரித்தார்.
தேவர் பிலிம்ஸ் படங்களுக்கான கதைகளை பெரும்பாலும் தேவரே உருவாக்குவது வழக்கம். யானைகளை வைத்து அவர் எழுதி வைத்திருந்த கதை "அன்னை ஓர் ஆலயம்.'' அதை தண்டாயுதபாணி, படமாக எடுத்தார்.
வசனத்தை தூயவன் எழுதினார். படத்தை, தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.
இதில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். ரஜினியின் அம்மாவாக அஞ்சலிதேவி நடித்தார். மற்றும் ஜெயமாலினி, மோகன்பாபு, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.
பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைத்தார்.
மிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உண்டு என்பதை சித்தரிக்கும் கதை. இதில், வேட்டைக்காரராக ரஜினி நடித்திருந்தார். காட்டுக்குள் தைரியமாகச் சென்று, மிருகங்களைப் பிடித்து அவற்றை சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்பது அவரது வேலை.
தாயிடம் இருந்து குட்டி மிருகங்களை தந்திரமாகப் பிடித்து விற்பனை செய்து விடுவார்.
இப்படி தாய் மிருகங்களிடம் இருந்து குட்டிகளைப் பிரிப்பது அவர் அம்மா அஞ்சலிதேவிக்குப் பிடிக்கவில்லை. அவர் ரஜினியிடம், "மிருகங்களுக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால், தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்காதே'' என்று கேட்டுக்கொள்வார்.
ரஜினியோ, "மிருகங்களுக்காவது, தாய்ப்பாசமாவது!'' என்று சிரித்துக்கொண்டு போய்விடுவார்.
இந்நிலையில், ஒரு தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து, சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுவார். விஷயம் தெரிந்ததும், "உன் தாயை பிரியும்போதுதான் அந்த வேதனை உனக்குத் தெரியும்'' என்று ரஜினியிடம் கூறுவார், அஞ்சலிதேவி.
சில நாட்களிலேயே அப்படியொரு விபரீதம் நடக்கிறது. காட்டில் மகனைத் தேடிவந்த தாயாரை, ஏற்கனவே குட்டியை பிரிந்த சோகத்தில் இருந்த தாய் யானை துரத்துகிறது. தாயின் கூக்குரல் கேட்டு ரஜினி தாயைக் காப்பாற்ற ஓடிவருவார். வரும் வழியில் மிருகங்களை பிடிக்க வைத்திருந்த `பொறி'யில் மாட்டிக்கொள்வார்.
அவரது கண்ணெதிரிலேயே அஞ்சலிதேவியை தன் துதிக்கையால் தூக்கி வீசியெறிகிறது, யானை. மரணத் தறுவாயில் அஞ்சலிதேவி, "மகனே! இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு!'' என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.
தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய குட்டி யானையை விற்ற சர்க்கஸ் கம்பெனிக்கு ஓடுவார், ரஜினி. ஆனால் அதற்குள் அந்த குட்டி யானை வேறொரு சர்க்கஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் குட்டி யானை இருந்த கம்பெனியை தேடிப்போய் அதை மீட்கிறார்,ரஜினி.
ஆனால் குட்டி யானை, அவரைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடிக்கிறது. ரஜினியும் விடாமல் அதைப் பிடித்து, அதற்கு தான் எதிரி எல்ல என்பதை நம்ப வைக்கிறார். கடைசியில், அதை காட்டுக்கு அழைத்துச்சென்று தாய் யானையுடன் சேர்த்து வைக்கிறார். முடிவில் தாய் யானை, குட்டி யானை இரண்டும், துதிக்கையை தூக்கி ரஜினியை ஆசீர்வதித்து விட்டுப் போகும். அப்போது தன் தாயே தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மகிழ்வார், ரஜினி.
இந்தப் படத்தில் ரஜினி, யானைக்குட்டி சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளும் கலகலப்பானவை.
ரஜினியிடம் இருந்து தப்பி ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழையும் யானைக்குட்டி, அங்கே திரையில் `நல்ல நேரம்' படத்தில் யானைகள் வருகிற காட்சியை பார்த்து திரையை கிழிப்பது, பிறகு ரஜினி வந்து குட்டி யானையை அடக்குவது போன்ற காட்சிகளை குழந்தைகள் குதூகலமாக ரசித்தார்கள்.
இளையராஜா இசையில் "அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே'', "நதியோரம்'', "அம்மா நீ சுமந்த பிள்ளை'' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
இந்தப் படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார், ரஜினி.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே `டூப்' போட்டுக்கொள்ளுங்கள்'' என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்' கூறினார்.
ஆனால் ரஜினியோ, `டூப்' போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடந்து
போனார்.சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை கொண்டது அந்த சிறுத்தை. அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.
19-10-1979 அன்று "அன்னை ஓர் ஆலயம்'' வெளியாயிற்று. ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.
அன்னை ஒரு ஆலயம் - ஆனந்த விகடன் விமர்சனம்
தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளி வந்தாலும், அதில் தேவர் படம் மட்டும் தனி ரகம்! பொழுதுபோக்கு அம்சங்கள்தான் அவரகளுடைய ஸ்பெஷாலிட்டி' தேவர் மறைந்த பிறகு நடுவில் இரண்டு படங்களில் இந்த ஸ்பெஷல் கிடைக்காவிட்டாலும், இந்தப் படத்தில் அதைச் சரிக்கட்டி ஒரு மூன் லைட்' டின்னரே கொடுத்து மறைந்த தேவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி
விட்டார்கள்.
இடைவேளைக்கு முன் ரஜினி; அதற்குப் பின் யானைக்குட்டி கணேஷ். ரஜினி ஸ்டைலெல்லாம் எங்கோ ஒளிந்து கொள்ளும் அளவுக்கு யானைக்குட்டி அற்புதமான வேலைகளைச் செய்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி கலகலப்பு, விறு விறுப்பு, சுறுசுறுப்பு! இதுவரை வேறு எந்தப் படத்திலும் ரஜினியை இப்படி யாருமே தண்ணி காட்டியதில்லை. இந்த கணேஷ் கசரத்து வாங்கி விட்டான்!
அண்ணா மேம்பாலத்து மேல் ஓடி, தேவி பாரடைஸ் தியேட்டரில் நுழைந்து நல்ல நேரம்' படம் பாரத்து குஷியில் தலையாட்டுவது, ரஜினியைப் பள்ளத்தில் கள்ளிவிட்டு உள்ளேயிருந்த ஏணியையும் எடுத்து விடுவது. மணிச் சத்தம் கேட்காமல் தும்பிக்கையால் பிடிக்துக் கொண்டு நடப்பது, பார்ட்டியில் தண்ணி போட்டு ஸ்ரீப்ரியாவுக்கு இணையாக ஆடுவது - இப்படி கணேஷின் சாமர்த்தியங்களையும். தீரச் செயல்களையும் ஒரு பட்டியல் போட்டு கணேச புராணமே எழுதலாம்!
அசோக வனத்தில் சீதைக்கு அபயம் கொடுத்த மாதிரி, கணேஷலக்கு ராமு என்ற குரங்கு! துணியை எடுத்து வந்து கணேஷின் கண்ணீரைத் துடைத்து விடுவதும், சங்கிலியை அவிழ்த்துவிட்டு விடுதலை செய்வதும், வாக்கிங் ஸ்டிக்கை வைத்துக் கொண்டு எதிரிகளைத் திணற அடிப்பதும் குரங்கு சேஷ்டை என்று தள்ளி விட முடியாதபடி நல்ல வேட்டை!
கதாநாயகி ஸ்ரீப்ரியா படம் முழுவதும் புடவை கட்டிக் கொண்டே வந்திருக்கலாம். அது லட்சுமிகரமாக இருக்கிறது. மற்ற சமயங்களில் உசிலைமணி ஜன்ஸில் வருவது போல் இருக்கிறது!
ஆரம்பத்தில் ரஜினியின் வீட்டில் ஸ்ரீப்ரியா - ஜெயமாலினி போடும் சண்டை, பேத்தலின் மொத்த உருவம்! அதுவும் அமெரிக்கா ரிடர்ன்டு ஸ்ரீப்ரியாவா இது மாதிரி “ஒண்டிக்கு ஒண்டி'யில் இறங்குகிறார்?! நமக்கு இரண்டு காதுகள் இருக்கும் தைரியத்தில்
முழம் முழமாகப் பூச்சுற்றியிருக்கிறார்கள்! அது மட்டுமல்ல, குழந்தைகளைக் கவர அதிகக் கவனம் செலுத்தியுள்ள இந்தப் படத்தில் செக்ஸை மனத்தில் கொண்டு இப்படியொரு சண்டையை நுழைப்பானேன்?
அம்மாவைத் துரத்திக் கொண்டு ஓடும் தாயயானையைச் சுட்டுத் தள்ள ரஜினி ஓடி வரும்போது, தான் வைத்த இரும்புக்
கண்ணிகளுக்கிடையே அகப்பட்டுக் கொண்டு 'அம்மா' என்று அவர் அலறுவதும், மகனின் எதிரிலேயே யானை, அம்மாவை மிதித்துக் கொன்று விடுவதும் உருக்கத்தோடு உடம்பை உறைய வைக்கும் காட்சிகள். ரஜினி மனம் மாறுவதாகக் காட்ட இந்த இடம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் ரஜினி வேட்டையாடும் காட்சிகள். குறிப்பாக, இடைவேளைக்கு முன் சிங்கத்தோடு அவர் போடும் சண்டைகளில்தான் எத்தனை விறுவிறுப்பு! குட்டி மிருகங்களைச் சர்வ சாதாரணமாக அவர் பூனையைப் பிடிப்பது போல் வலை வீசிப் பிடித்து வண்டிக்குள் ரஜினி போடுவதுதான் - “இதுவும் ரஜினி ஸ்டைலோ?' என்று கேட்க வைக்கிறது!
ஒளிப்பதிவு டைரக்டர் பி.என். சுந்தரம், கையில் துப்பாக்கிக்குப் பதில் காமிராவை வைத்துக் கொண்டு அற்புதமாக வேட்டையாடியிருக்கிறார்! மரத்தின் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு முரடர்களுடன் ரஜினி போடும் விறுவிறுப்பான சண்டையில் காமிராவும் பிரமாதமாகச் சண்டை போட்டிருக்கிறது.
குரங்கு எடுத்துப் போகும் லெட்டரை வாங்கிப் படிக்கும் கலெக்டர் அதனிடமே சீரியஸாகக் கேள்வி கேட்பது - நினைக்க நினைக்கச் சிரிப்பு அடங்கவேயில்லே!
தேவர் கோட்டைக்குள் முதன் முதலாக இளையராஜா நுழைந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ரஜினி வேட்டையாடும் இடங்களிலும் ர்ரிகார்டிங் அருமை. 'அம்மா... நீ சுமந்த பிள்ளை' என்ற டி.எம்.எஸ். பாடும் பாடலிலும், எஸ்.பி.பி-யின்
'பிள்ளையாரப்பனே விலும் ராஜா இருக்கிறார்!
கிளைமாக்ஸின்போது ஸ்ரீப்ரியாவின் நடனம் சுறுசுறுப்பான முடிவுப் பகுதிக்கு ஒரு முட்டுக்கட்டை! இதைப் பார்க்கும் காட்டிலாகா அதிகாரிகள் பல் இளிப்பது போல் காட்டுவது படு செயற்கை.
ஒரே காட்சிதான் என்றாலும் "கெளரவமாக வரும் நாகேஷ், மேஜர் - ஏக வசனத்தில் பேசிக் கொள்வது ஏக கலகலப்பு!
சேற்றில் விழுந்ததால் அழுக்காகும் ஸ்ரீப்ரியாவின் “அடைகள் அவர் ஆற்றில் இறங்கிய அடுத்தகணமே பெண்மையாகி விடுகிறதே, ஆற்று நீரில் “Sirf" பவுடரையா கலந்திருக்கிறார்கள்?
படம் முன் பாதியில் கொஞ்சம் முழித்தாலும் பின் பாதியில் விழித்துக் கொள்கிறது - கணேஷின் வருகையால்! ஆரம்பத்தில் கம்மென்று உட்கார்ந்திருந்தவர்களையெல்லாம் பின் பகுதியில் கைதட்ட வைத்து விட்டார்கள்.
சிறப்புப் பாராட்டு பெறுபவர் யானை கணேஷ்!
விகடன் விமரிசனக் குழு
விகடன் மதிப்பெண் : 52
(11.11.1979 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து . . .)
|