Rajini's speech at Cinema Express Award 1995 
"பாட்ஷா'', "முத்து'' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக, ரஜினிக்கு "சினிமா எக்ஸ்பிரஸ்'' விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழா 1996 ஏப்ரல் 20-ந்தேதி சென்னையில் காமராஜர் அரங்கில் நடந்தது. பரிசு பெறுவதற்காக மனைவியுடன் ரஜினி வந்தார். அப்போது மொட்டைத் தலையுடன் காணப்பட்டார்.
இதுபற்றி, விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:-
"இவர் ஏன் மொட்டை அடித்திருக்கிறார் என்று, என்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இது நானாக ஆசைப்பட்டு அடித்துக்கொண்ட மொட்டை இல்லை. தானாக வந்த மொட்டை!
நியார்க்கில் தங்கியிருந்தேன். தங்கியிருந்தவன் சும்மா இருக்கக்கூடாதா? பத்திரிகையைப் படித்தேன். `லேட்டஸ்ட் ஸ்டைலில் முடி வெட்டிக்கொள்ள போன் பண்ணவும்' என்று அதில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. `லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் என்கிறார்களே, வெட்டித்தான் பார்ப்போமே' என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. படாதபாடு பட்டு அதில் குறிப்பிட்டிருந்தபடி போன் பண்ணினேன். உடனே அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை.
இரண்டு மூன்று நாட்களாகக் கஷ்டப்பட்டு, முயற்சி செய்து, ஒருவழியாக `அப்பாயின்ட்மெண்ட்' கிடைத்தது. போனேன்.
பெயர், ஊர் முதலிய விவரங்களையெல்லாம் கேட்டு எழுதிக்கொண்டார்கள்.
முதலில் என் தலைக்கு மசாஜ் செய்தார்கள். சும்மா சொல்லக்கூடாது. மசாஜ் செய்ததும் கொஞ்சம் சுகமாக இருந்தது. பிறகு முடி வெட்டிக்கொள்ளும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். முடி வெட்டும்போது மசாஜ் செய்திருந்த சுகத்தில் அப்படியே தூங்கிவிட்டேன்.
திடீரென்று `கிர்'ரென்று சத்தம் வந்தது, பிளைட்டில் போகிற மாதிரி! கண்களை திறந்து பார்த்தால் என் தலையில் இருந்த தலை முடியையெல்லாம் காணோம்! (அரங்கத்தில் சிரிப்பு).
"இப்பொழுது பாருங்கள், உங்களது ஹேர் ஸ்டைல் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது! நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் தெரியுமா? இதுதான் நியார்க்கிலுள்ள லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்'' என்றார்கள்!
நான் "பிரமாதம்! பிரமாதம்!'' என்றேன்.
"ஓகே! நூற்றி இருபது டாலர் கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்... மொட்டை அடித்ததற்கு!''
இவ்வாறு ரஜினி கூறியபோது எழுந்த சிரிப்பு அலை அடங்க, வெகு நேரம் பிடித்தது.
|