Superstar at Bagiaraj's Paarijatham Audio Release
12 Dec 2005
நடிகர் - டைரக்டர் கே.பாக்யராஜின் மகள் சரண்யா கதாநாயகியாக அறிமுகமாகும் `பாரி ஜாதம்' படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னை சத்யம் காம்ப்ளக்சில் உள்ள ஸ்ரீ தியேட்டரில் நேற்று இரவு நடந்தது.
விழாவுக்கு கவிஞர் வாலி தலைமை தாங்கினார்.
படத்தின் பாடல் கேசட்டை ரஜினிகாந்த் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.
ரஜினிகாந்துக்கு நாளை (திங்கட்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளை `பாரி ஜாதம்' படத்தின் விழா மேடையிலேயே கொண்டாட பாக்யராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, மேடையிலேயே ரஜினிகாந்த் `கேக்' வெட்டினார். அருகில் நின்று கொண்டிருந்த மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பாக்யராஜ், பூர்ணிமா ஆகியோருக்கு ரஜினிகாந்த் `கேக்' துண்டுகளை ஊட்டி விட்டார். ரஜினிக்கு பாக்யராஜ் `கேக்' ஊட்டினார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
``நான் ஜாஸ்தி பேசக் கூடாது என்றுதான் இந்த விழாவுக்கு வந்தேன். இந்த விழா நிகழ்ச்சிகளை பார்த்தபின், நிறைய பேச தோன்றுகிறது. ஆனால் என்ன பேசுவது என்று மறந்து போய் விட்டது.
கேசட் விழாவுக்கு பாக்யராஜ் என்னை அழைத்தபோது, நான் முதலில் வர மறுத்தேன். என் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று பாக்யராஜ் கேட்டார். பொதுவாக பாக்யராஜ் இதுமாதிரியெல்லாம் கேட்க மாட்டார்.
பாக்யராஜ் எனக்கு நிறைய செய்திருக்கிறார். நான் அவருக்கு எதுவும் செய்யவில்லை. 16 வயதினிலே படத்தில் நான் நடித்தபோது, எனக்கு தமிழ் படிக்க தெரியாது. அப்போது எனக்கு பாக்யராஜ்தான் வசனம் சொல்லிக் கொடுத்தார். ``இது எப்படி இருக்கு?'' என்ற வசனத்தை எப்படி ஏற்ற, இறக்கத்துடன் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே பாக்யராஜ்தான். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
என் இரண்டு படங்களில் (நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த்) பாக்யராஜ் கவுரவ வேடத்தில் நடித்தார்.
அவர் நடித்து டைரக்டு செய்த `வேட்டிய மடிச்சுக்கட்டு' படத்தில், என்னை கவுரவ வேடத்தில் நடிக்கும்படி கேட்டார். நான் நடிக்கவில்லை. அந்த படம் சரியாக போகவில்லை. பாக்யராஜக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஒருவேளை அநதப் படத்தில் நான் கவுரவ வேடத்தில் நடித்திருந்தால், பாக்யராஜக்கு நஷ்டம் அதிகமாக வந்திருக்காது.
இது, எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. அவர் உதவி கேட்கவே மாட்டார். ரொம்ப தன்மானம் உள்ள மனிதர்.
நான், அவரிடம் `பாரிஜாதம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வருகிறேன் என்றேன். நீங்க வந்தாலே படம் வெற்றி அடையும் என்று இந்த விழாவுக்கு அழைத்தார்.
கெட்ட நேரம் வந்தால், எல்லா மனிதர்களும் அமைதியாக இருநது விட வேண்டும். இது, என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. அதை யாரும் நமக்கு சொல்ல மாட்டார்கள்.
கெட்ட நேரம் வந்தால், என்ன செய்தாலும நடக்காது. யாரை குறை சொல்லியும் பயன் இருக்காது. அது, போன பின்னால்தான் உணர முடியும். பாக்யராஜக்கு கெட்ட நேரம் `கிளீயர்' ஆகி விட்டது. எல்லாருக்கும் தண்ணீர் கொடுக்கிற கிணற்றுக்கே தாகம் வரக் கூடாது. கிணற்றுக்கு தாகம் வந்தால், அது எப்படி தாகம் தீர்க்கும்?
பாக்யராஜ் ஒரு ஜீவநதி மாதிரி. பாரிஜாதம் மலரை முகர்ந்து பார்த்தால் வயது ஆகாது. அதுமாதிரி வேலை செய்து கொண்டிருந்தால், வயது தெரியாது.
பாக்யராஜ் சொத்து சேர்க்கவில்லை. அவருடைய மிகப்பெரிய சொத்து அவருடைய பிள்ளைகள். ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும், பிள்ளைகள் சரியில்லை என்றால், அழித்து விடுவார்கள். பாக்யராஜின் பிள்ளைகள் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும். பாக்யராஜ் ஒரு ஜீவநதியாக, மறுபடியும் பாய்ந்தோட வேண்டும்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
முன்னதாக விழாவில் நடிகைகள் குஷ்பு, பத்மப்பிரியா, சந்தியா, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.
பட அதிபர்கள் சங்க தலைவர் டி.ஜி. தியாகராஜன், செயலாளர் ஏ.எல். அழகப்பன், கேயார், ஆர்.பி. சவுத்ரி, அப்பச்சன், ராஜ்கண்ணு, வினியோர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் சூர்யா, தனுஷ், `ஜெயம்' ரவி, பிருதிவிராஜ், விஜயகுமார், விவேக் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.
கவிஞர் பா.விஜய் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பாக்யராஜ் நன்றி கூறினார்.
|