Superstar Rajinikanth Opens MGR Statue @ ACS Medical College
(6 March 2018)
.jpg)
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் அந்த கல்வி நிறுவனத்தின் 30வது ஆண்டுவிழா ஆகியவை நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். விழாவிற்காக தனது போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்த ரஜினிக்கு வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். இதனால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார்.
அந்த நிகழ்வில் பேசிய அவர், "எம்.ஜி,.ஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். என் அரசியல் ஜாதிபேதமற்றது. மதசார்பற்றது. அறவழியில் நடப்பதுதான் ஆன்மீக அரசியல். தூய்மைதான் ஆன்மீக அரசியல். இறைநம்பிக்கை இருப்பதுதான் ஆன்மீக அரசியல். இனிமேல்தான் ஆன்மீக அரசியலை பார்க்கப் போகிறீர்கள்." என்றார்.
"வெற்றிடம் உள்ளதால்தான் வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். ஆமாம். வெற்றிடம் உள்ளது. நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது. அதனால்தான் வருகிறேன்." என்று அந்த நிகழ்வில் பேசினார்.
"தமிழ்நாட்டுக்கு ஒரு தலைமை தேவை. தலைவன் தேவை. அதற்காகதான் வருகிறேன்." என்றார்.
"ஜெயலலிதா இருந்தபோது ஏன் வரவில்லை? பயமா என்று கேட்கிறார்கள். நான் 96- ல் ஜெயலலிதா இருந்தபோதே அரசியல் பேசியவன்" என்று கூறினார்.
ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசிய ரஜினி, "ஜெயலலிதா கட்சியை ஆளுமையுடன் வழிநடத்தினார். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் கட்சியை கருணாநிதி காப்பாற்றினார்" என்றார்.
மேலும் அவர், இந்த பாதையில் கல், முள், பாம்பு எல்லாம் இருக்கிறது என்று தெரியும். அதையெல்லாம் கடந்து மக்களுக்கு சேவை செய்யதான் வருகிறேன் என்றார்.
சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்?
சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அரசியல்வாதிகளான நாங்கள் நடிக்க வருகிறோமா என்றும் கேட்கிறார்கள். நான் என் கடமையை ஒழுங்காக செய்கிறேன். ஆனால், நீங்கள் செய்யவில்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்றார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
எனக்கு அரசியல் தெரியுமா என்று கேட்கிறார்கள். நான் கலைஞர், மூப்பனார், சோ ஆகியோரிடம் பழகியவன். அவர்களிடம் அரசியல் பயின்று இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என்று பேசினார்.
எல்லோரும் சிவாஜி வந்த பிறகு சினிமாவில் எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று பேசினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தானே படம் தயாரித்து, நடித்து அதுமட்டுமல்ல படத்தை இயக்கியும் தன்னை நிரூபித்தார் என்று கூறினார்.
'நெர்வஸ் பிரச்சனை'
தனக்கு நரம்பு சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு இருந்த போது, மிகவும் அக்கறையுடன் விசாரித்தார் எம்.ஜி.ஆர் என்று பேசியவர், "என்னை தனது அலுவலகத்துக்கு அழைத்து இனி ஸ்ட்ண்ட் காட்சிகளில் நடிக்காதீர்கள். அதற்கான ஸ்டண்ட் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதனை செய்வார்கள்." என்று அக்கறையுடன் கூறியதாக நினைவுகூர்ந்தார்
அந்த சந்திப்பின்போது சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி எம்.ஜி.ஆர் வலியுறுத்தினார் என்றும் ரஜினி கூறினார்.
`மனைவியும் அவரால்...மண்டபமும் அவரால்'
நான் என் காதல் குறித்து முதலில் எம்.ஜி,ஆரிடம் தான் சொன்னேன். என் அண்ணனிடம்கூட கூறவில்லை என்று கூறிய ரஜினி, அந்த சமயத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துக் கொண்டார்.
"லதா வீட்டில் தயங்கியதால் எனக்கு திருமணம் ஆவது தள்ளிப்போனது. எம்.ஜி.ஆர் என்னிடம் காதலிப்பதாக கூறினீர்கள் என்ன ஆனது? என்று கேட்டார். இல்லை சார்.. பெண் வீட்டில் தயங்குகிறார்கள என்று கூறினேன். அவரிடம் கூறிய இரண்டாவது நாளே லதா வீட்டில் சம்மதித்தார்கள். அதன்பின் தான் தெரிந்தது, எம்.ஜி.ஆர் ஒய்.ஜி.பியிடம் என்னை பற்றி கூறி இருக்கிறார். `கொஞ்சம் கோபக்காரன். ஆனால். பையன் நல்லவன்' என்று சொல்லி இருக்கிறார். அதன்பின் தான், எனக்கு பெண் கொடுக்க சம்மதித்தார்கள். நம்பிக்கை இல்லை என்றால் ஒய்.ஜி.பி -யின் மனைவி உயிருடன் தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
"நான் கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா மண்டபம் கட்டிக் கொண்டிருந்த சமயத்தில், மண்டபத்தை கட்டுவதற்கு என்.ஓ.சி சான்றிதழ் எம்.எம்.டி.ஏ.- விலிருந்து வரவில்லை. ஒருவர் அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. இதன் காரணமாக மண்டப வேலை தடைப்பட்டது. அப்போது நான் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தேன். எம்.ஜி,ஆர் சாரிடம் இது குறித்து பேச அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவர் உடனே கொடுத்தார். நான் அடுத்த நாளே மும்பையிலிருந்து வந்து அவரை சந்தித்தேன். நிலைமையை கூறினேன். உடனே அவர் அப்போது வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசரிடம் பேசினார். இரண்டு நாட்களில் என்.ஓ.சி வந்தது" என்றார் ரஜினிகாந்த்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இது குறித்து திருநாவுக்கரசரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றார்.
ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள்
மாணவர் பருவத்தை வசந்தகாலம் என்று வர்ணித்த ரஜினிகாந்த், தனது மாணவ பருவ நாட்களை பகிர்ந்துக் கொண்டார்.
"நான் முதலில் கன்னட மீடியத்தில் படித்தேன். அப்போது எல்லாம் நன்றாக படிப்பேன். 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்தேன். நன்றாக படிக்கிறானே என்று சொல்லி என்னை தனியார் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் மேல்நிலை வகுப்புக்காக சேர்த்தார்கள். ஆங்கிலம் புரிந்துக் கொள்ள சிரமப்பட்டேன். இதனால் என் மதிப்பெண்கள் குறைந்தது." என்றார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"அனைவரும் ஆங்கிலம் பயிலுங்கள். ஆங்கிலம்தான் எதிர்காலம். ஆங்கிலம் கற்றுகொண்டால்தான் முன்னேற முடியும்."
"தமிழ் பேசுவதால் மட்டும் தமிழ் வளராது. தமிழனும் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் சுந்தர்பிச்சையால் யாருக்கும் பெயர்? அப்துல்கலாமால் யாருக்கு பெயர்? தமிழுக்குத் தானே?" என்றார்.
அரசியல் வேண்டாம்
மாணவர்கள் படிக்கும் காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டாம். வாக்களிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பேசியவர், வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுப்பதைவிட நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் என்று அவர் மேலும் கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
|